என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 100
புரட்சித்தலைவர் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சைதை துரைசாமிக்கு உரிய அங்கீகாரம், பதவி, வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அப்போது பல்வேறு கட்சியில் இருந்து சைதை துரைசாமிக்கு அழைப்பு வந்தபோதும், ‘என்னுடைய கட்சி அ.தி.மு.க., என்னுடைய சின்னம் இரட்டை இலை’ என்பதில் உறுதியாக இருந்தார்.
எனவே அரசியல் பதவி இல்லையென்றாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், சேவை மனப்பான்மையுடன் பொதுவாழ்க்கையில் செயல்பட்டு வந்தார். யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறாமல், தன்னுடைய சொந்த சொத்தை விற்று மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை தொடங்கி, மாணவர்களுக்குச் சேவை செய்துவந்தார்.
அந்த அறக்கட்டளை சேவையின் ஒரு அங்கமாக ஏழை, எளிய மக்களும் திருமணத்தை பிரமாண்டமாக அதேநேரம் செலவே இல்லாமல் நடத்துவதற்கு வழி செய்யும் வகையில் வேளச்சேரியில் ஒரு திருமண மண்டபம் கட்டினார் சைதை துரைசாமி. அந்த திருமண மண்டபத்திற்கு வாடகை கிடையாது. அதோடு, பாத்திரங்கள், சேர், டேபிள் என்று எல்லாமே இலவசம். எனவே, ஏழைகள் கடன் வாங்கி சிரமப்படாமல், எந்த செலவும் செய்யாமல் தங்கள் குடும்பத்தின் நல்ல காரியத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்.
அந்த வகையில் ஏழைகளுக்காகக் கட்டிய திருமண மண்டபத்திற்கு, ‘புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபம்’ என்று பெயர் சூட்டி, ஜெயலலிதா கையாலே திறக்க வேண்டும் என்றும் சைதை துரைசாமி ஆசைப்பட்டார்.
அந்த ஆசையை புரட்சித்தலைவி ஜெயலலிதாவை சந்தித்து நேரில் தெரிவித்தார். ஏழைகளுக்கு தன்னுடைய பெயரில் இலவசத் திருமண மண்டபம் திறக்கப்படுகிறது என்பதை அறிந்த ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சி அடைந்து சம்மதம் தெரிவித்தார். அப்போது மனிதநேய அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும் முழுமையாகக் கேட்டு அறிந்துகொண்டு வாழ்த்துகளும் தெரிவித்தார். மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜெயலலிதா என்ன பேசினார் தெரியுமா?
- நாளை பார்க்கலாம்.