இப்படி ஒரு நோய்
நோய் இல்லாத மனிதர்கள் இல்லை. உடலில் சின்ன நோய் என்றாலும் பலரிடமும் பேசி தீர்வு கிடைக்குமா என்று பார்க்கிறோம். அதேநேரம், சினிமா கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் தங்களுடைய நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. இதன் அர்த்தம் அவர்களுக்கு எந்த நோயும் இல்லை என்பதல்ல, அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பது தான் உண்மை.
இவர்களில் வித்தியாசமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி, பாகுபலி படங்கள் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்த நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இப்போது 42 வயது. இப்போதும் சினிமா உலகில் இளையவர்களுக்குப் போட்டியாக சவாலானவ் வேடங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் இண்டியா கிளிட்ஷ் பத்திரிகைக்கு அனுஷ்கா மனம் திறந்து பேசுகையில், ‘தனக்கு ஒரு வித்தியாசமான வியாதி இருக்கிறது’ என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
இது குறித்து அனுஷ்கா, ‘’எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பு என்பது ஒரு வியாதியா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். என்னைப் பொறுத்த வரை அது ஒரு நோய். படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போது எதற்காவது சிரிக்கத் தொடங்கினால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாது சிரித்துக்கொண்டே இருப்பேன். நான் நினைத்தால் கூட என்னால் அதை கட்டுப்படுத்த முடியாது.
சூட்டிங்கில் நான் நடிக்கும் நேரத்தில் மட்டுமல்ல, வேறு ஒருவர் நடிப்பதைப் பார்க்கும் நேரத்தில் அல்லது யாராவது நகைச்சுவையாகப் பேசினால் கூட திடீரென சிரிக்கத் தொடங்கிவிடுவேன். இதனால் பல முறை சூட்டிங் நிறுத்தப்பட்டு படக்குழுவினரை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்…. இப்போது இந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி ஒரு நோய் இருக்கிறதா என்று மருத்துவர்களிடம் பேசினோம். சிரிப்பு நோய் குறித்துப் பேசிய ஹைதராபாத் மருத்துவர் சுதிர்குமார், ‘’ஆம், இப்படிப்பட்ட சிரிப்பு நோயினால் பாதிக்கப்படுவதை ஸ்பேசுடோபுல்பர் எஃபெக்ட் Pseudobulbar Affect (PBA) என்று சொல்வார்கள். இது ஒரு வகையில் நரம்பியல் பிரச்னை. எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். இது சிரிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அழுகையாகவும், கோபமாகவும் இருக்கலாம்.
ஒரு சாதாரண நபருக்கு சிரிப்பு அல்லது புன்னகை வரவழைப்பதற்கு நகைச்சுவைப் பேச்சு அல்லது ஏதேனும் ஒரு சம்பவம் காரணமாக இருக்கிறது. சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது இயல்பான சிரிப்பு.
ஆனால், உருப்படியான எந்த காரணமும் இல்லாமல் சிரிக்கத் தொடங்குவதே பிபிஏ பாதிப்பு. இவர்களுக்கு சிரிப்பு அல்லது அழுகையைத் தூண்டுவதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எதற்காகவும் சிரிப்பார்கள், எதற்காகவும் அழுவார்கள்.
பொதுவாக ஒருவர் சிரிக்கும் நேரத்திலும் அழும் நேரத்திலும் அவர்களுடைய மனதில் இருக்கும் உண்மையான எண்ணங்களே முகத்திலும் வெளிப்படுகிறது. அதாவது, அவர்களுடைய முகமும் மனமும் ஒரே நேர்க்கோட்டில் செயல்படும். ஆனால், இந்த பாதிப்புக்கு ஆளான ஒருவர் சிரிக்கும் நேரத்திலும், அழும் நேரத்தில் அவர் மனதில் அதே எண்ணம் இருக்கும் என்பது இல்லை.
தேவையற்ற வகையில், பொருத்தமில்லாமல் சிரிக்கிறோம் என்று மனதில் நினைத்து அதனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். அதன் பிறகும் சிரிக்கவோ, அழவோ செய்வார்கள். இந்த நேரத்தில் தங்களால் உனர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். ஆனால், அது முகத்தில் தென்படுவதில்லை.
ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இது போன்று அடக்கமுடியாத சிரிப்பு அல்லது அழுகை ஏற்படுகிறது என்றால், பிபிஏ பாதிப்பு என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதற்குப் பதிலாக தனிமையில் இருக்கத் தொடங்குவார்கள், யாருடனும் பேசுவதற்குத் தயங்குவார்கள், மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டு பிரச்னையை பெரிதாக்கிவிடுவார்கள்.
மேலும் இந்த பிரச்னை மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதால் பிறருடன் நெருங்கிப் பழகவும் பேசுவதற்கும் அஞ்சுவார்கள். இதன் காரணமாக நெருங்கிய உறவும் நட்பும் கெட்டுப் போகும், அலுவலகத்தில் பணியாளர்களுக்கு இடையில் பிரச்னை உருவாகும்.
முன்பு இது நரம்பு பிரச்னை என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளாலும் உருவாகலாம் என்பது தெரியவந்துள்ளது.
காரணமே இல்லாமல் அதிக நேரம் சிரிப்பவர் அல்லது அழுபவரைப் பார்ப்பவர்கள், மனநிலை தவறியவர்கள் என்றும் நினைக்கக்கூடும். உண்மையில் இந்த பாதிப்புக்கும் மனநலப் பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதேநேரம், இது ஒரு சாதாரண உடல் நலக்குறை என்பதை சம்பந்தப்பட்ட நபரும் குடும்பத்தினரும், நண்பர்களும் ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக நின்று அவருடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்ய வேண்டும்.
இதற்கு மருந்துகள் மூலம் தீர்வு காண முடியாது. எனவே, தொடர்ந்து கவுன்சிலிங் எடுத்துக்கொள்வதும், சிரிப்பு அல்லது அழுகை தோன்றும் சமயத்தில் மனதை திசை திருப்புவது, உடல் தசைகளை கட்டுப்பாட்டு நிலைக்குக் கொண்டுவர முடியும். தியானம் பழகுதல் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.
ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது என்றால் தூக்கம் மூலம் அவர்களை அமைதிப்படுத்துவதே போதுமானது. இந்த பாதிப்புக்கு ஆளானவரை அக்கம்பக்கத்தினர் புரிந்துகொண்டு ஆதரவாக நிற்பதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க முடியும். தொடர் பயிற்சி மூலம் இது தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னையே..’’ என்கிறார்.
விழிப்புணர்வுக்கு நன்றி அனுஷ்கா