பிரபலங்கள்

உடலை நேசிப்பதே என் ஆரோக்கிய ரகசியம்

பேசுகிறார் ஓவியர் ஸ்யாம்

பத்திரிகைகளில் லட்சக்கணக்கான ஓவியங்கள் வரைந்து அத்தனை வாசகர்களுக்கும் பரிச்சயமானவர் ஓவியர் ஸ்யாம். ஒரு இடத்தில் அமர்ந்து வரையும் ஓவியக் கலைஞராக இருந்தாலும் தனது உடல் நலம் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துபவர். உலகம் சுற்றும் வாலிபராக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் ஸ்யாம், தனது ஆரோக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

’’நமது உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவைச் சார்ந்தது தான். நீர் அதிகம் பருகுபவர்கள், கூழ் அதிகம் குடிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய வேலை செய்பவர்களின் உடல் இறுக்கமாக இருக்கும். தயிர் சாதம் சாப்பிடுபவர்களின் உடல் தளர்ந்து இருக்கும். இப்படி நாம் உண்ணும் உணவுக்கேற்ப உடலின் தன்மையும் மாறிவிடுகிறது.

இயற்கையின் படைப்புக்குள் பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கின்றன. மூளை போன்ற வடிவத்தில் இருக்கும் அக்ரூட் மூளைக்குப் பலம் சேர்க்கும். சிறுநீரக வடிவத்தில் இருக்கும் முந்திரிப் பருப்பு சிறுநீரகத்துக்கு நல்லது. ஒரு துளி விந்தணு போல் இருக்கும் பாதாம் ஆண்மையை அதிகரிக்கும். மனிதரின் பிருஷ்ட பாகம் போல் இருக்கும் பூசணி எடை கூட்டும். இப்படி உணவுகளுக்கும் நம் உடலுறுப்புகளின் வடிவங்களுக்கும் தொடர்பு உள்ளது.

நமது உடல் ஏற்றுக்கொள்வதை நாம் தாராளமாகச் சாப்பிடலாம். எதையும் சாப்பிடக்கூடாது என்று ஒதுக்குவது கூடாது. பொதுவாக சாப்பாட்டு விஷயத்தில் தள்ளுபடி கூடாது.

பாகற்காய் போன்ற சில உணவுகள் நாக்குக்குப் பிடிக்காவிட்டாலும் ஆரோக்கியத்திற்கு நல்லது. நம் உணவில் துவர்ப்பு சேர்ப்பதே இல்லை. வாழைப்பூ, போன்ற துவர்ப்பான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள செல்களுக்கேற்ற உணவை உண்டால் அந்த செல்கள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். அப்படிப் பார்த்து சாப்பிடும்போது சருமத்தில் சுருக்கங்கள் வராது, இறுக்கமாக இருக்கும். உடல் சோர்வும் வராது. சாப்பிட்டதும் ஒரு மன மகிழ்ச்சி வரும். அப்படி மகிழ்ச்சி வந்தால் அது உங்களுக்கான சரியான உணவு என்று தெரிந்து கொள்ளலாம்.

உணவை வேளா வேளைக்குச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசித்தால் தான் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் சாப்பிடாமல் படுத்து விடுவேன். அப்போது வெந்நீர் குடித்துவிட்டுப் படுப்பேன் .அந்த வெந்நீரில் கருஞ்சீரகம், வெந்தயம், சீரகம், லவங்கம் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இதமான சூட்டில் சாப்பிடுவேன். அது சாப்பிட்ட பிறகு உடம்புக்கு ஒரு சௌகரியமான விடுதலை உணர்வு கிடைக்கும். பிறகு பசிக்கலாம். அப்படிப் பசி வந்தால் மட்டுமே அதன் பிறகு சாப்பிடுவேன்.

காலையில் மோர் சாதம், உளுந்து வடை, தேங்காய் சட்னி சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். சிலர் காலையில் சாப்பிடுவதில்லை. இரவு சாப்பிட்ட பிறகு காலை வரை நீண்ட நேரம் இடைவெளி இருப்பதால் காலை உணவு மிகவும் அவசியம். காலை சாப்பிடாதவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை உள்ளிட்ட பெரிய உடல் நலப் பிரச்சினைகள் வரும். எனவே.காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. மதியம் கூட குறைத்துச் சாப்பிடலாம். அவ்வப்போது நொறுக்குத் தீனி சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது. மாலை 4 மணிக்கு சிற்றுண்டி போல சாப்பிடுவேன். டீ, காபி அதிகம் குடிப்பதில்லை எப்போதாவது பிளாக் டீ சாப்பிடுவேன். தினசரி ஒரு மணி நேரம் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.

நாம் எவ்வளவு நவீனமாக வாழ்ந்தாலும் உணவு முறையில் பழைய பாணியைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். பீட்சா, பர்கர், பெப்சி, கொக்கோகோலா, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்டு நீண்ட நாள் இருப்பில் உள்ளவற்றை சாப்பிடவே கூடாது. சாதாரண கிணற்றுத் தண்ணீரில் இயற்கையில் உள்ள சத்துகளை எல்லாம் எடுத்துவிட்டு அக்குவா வாட்டர் என்று விற்கப்படுகின்றன. கேன் வாட்டர் என்று அழைக்கப்படுகின்ற எல்லாமே நாம் உடலுக்கு நல்லதில்லை.

கேன் தண்ணீரை வாங்கி வைத்திருந்தால் எத்தனை நாள் ஆனாலும் அது கெடுவதில்லை. நல்ல உணவுப் பொருள் என்றால் அது கெட்டுப்போக வேண்டும். தண்ணீரை  மண்பானையில் ஊற்றி இரண்டு நாள் கழித்து உள்ளே தடவிப் பார்த்தால் வழுவழுப்பாக இருக்கும். அதுதான் நிஜமான, ஆரோக்கியமான தண்ணீர். உண்மையான தூய்மையான தண்ணீரில் தான் அப்படிப்பட்ட செயல் நடக்கும்.

ஒரு பழம் பழுத்துவிட்டால் அடுத்து அழுகிப் போக வேண்டும். பெயிண்ட் அடித்த பொருள்தான் அப்படியே இருக்கும். எனவே, நீண்ட நாள் கெட்டுப் போகாது என்றால், அது உண்மையான பொருள் அல்ல. ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் பளபளப்பாக கவர்ச்சியாக இருக்காது. ஆரோக்கியமான கடலை மிட்டாய் பாக்கெட்கள் சாதாரண கவரில் இருக்கும். ஆனால் கலர்ஃபுல்லாக இருக்கிற பாக்கெட்டில் உள்ளதைத்தான் குழந்தைகள் விரும்புவார்கள். வியாபாரத்திற்காக அப்படிச் செய்யப்படுகிறது. அது நல்லதல்ல.

இட்லி மாவு வாங்கி வந்து வீட்டில் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள். அதனால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று டாக்டர்களால் சொல்லப்படுகிறது.

குக்கர் வந்த பிறகு சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. குக்கரில், வடிக்கிற வேலை இல்லாததால் முழு சர்க்கரையும் அந்த உணவோடு சேர்ந்து விடுகிறது. வடித்த சாதம் சாப்பிட்ட போது இந்தப் பிரச்சினை இல்லை. எப்போது உணவில் நவீனத்தைப் புகுத்த ஆரம்பித்தார்களோ, அப்போதே பிரச்சினையும் வந்து விட்டது

உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது, ஹாட் பேக்கில் வைத்து சாப்பிடுவது மிகப்பெரிய தவறு. அதைத்தான் நாம் தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறோம்.

நாக்கு ருசிக்காகத்தான் நாம் சாப்பிடுகிறோம். தொண்டைக்கு கீழே போன பிறகு அது வயிற்றுக்கு என்னவாக மாறுகிறது என்று நாம் பார்ப்பது இல்லை. நாக்குக்கு ருசியான உணவுகளால் ரத்த விருத்தி நடப்பதில்லை. உடல் சோர்வடைந்து விடுகிறது.

காலையில் நான் தினசரி எழுந்ததுமே ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து விடுவேன். இப்படி ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடித்து விடுவேன். நான் வீட்டிலேயே இருந்து பணிபுரிவதால் எனக்கு இது சாத்தியமாய் இருக்கிறது. வெளியே சென்றாலும் தண்ணீர் பாட்டிலும் சின்னச் சின்ன உணவு வகைகளும் எடுத்துச் சென்று விடுவேன். நான் பசித்த பிறகுதான் சாப்பிடுவேன். நன்றாகப் பசித்த பிறகு அந்த நேரம் தாண்டியும் சாப்பிடக்கூடாது. அப்படிப்பட்ட வேளைகளில் வெந்நீர் குடித்து விடுவேன்.

ஒருவரின் உடல் தோற்றத்தின் பின்னணியில் அவர் சாப்பிடும் உணவு இருக்கிறது. என்னை எல்லாரும் ஜிம் பாடியா? என்று கேட்பார்கள். நான் அப்படியெல்லாம் கடினமாக உடற்பயிற்சி செய்வதில்லை .எனது உணவு முறைதான் காரணமாக இருக்கும் .

நான் ஒரு கிலோ மீன் வாங்கி அதை வேக வைத்து முள் எடுத்துவிட்டு அதை மிக்ஸியில் அடித்து மிளகுத்தூள், தேன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துவிட்டு ஒரு நாள் பூராவும் அவ்வப்போது சாப்பிடுவேன். இது என்னிடம் உள்ள ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம். இதை மாதத்தில் ஓரிரு நாட்கள் செய்வேன்.

நான் எப்போதும் சொல்வது உணவுகளின் மீது குற்றம் சொல்லக்கூடாது .உடலில் தான் குற்றம் இருக்கிறது.

கோடைக் காலங்களில் அதிகம் பழங்கள் கிடைக்கும். நம் இறைவனின் படைப்பின் ஆச்சரியம் இது. கோடைக் காலங்களில் நமக்கு நீர் இழப்பு ஏற்படும் என்று ஏராளமான பழங்களை அப்போது உண்பதற்காக படைத்திருக்கிறார். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பனை நுங்கு, பனங்கிழங்கு மிகவும் நல்லது. நுங்கை அதன் மேல் தோலோடு சாப்பிட வேண்டும் .அந்த மேல் தோலை நீக்கி காயவைத்து அதை பவுடர் ஆக்கி அதில் தேன், நெய் கலந்தும் சாப்பிடலாம். மிக நல்ல உணவு.

உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவற்றில் எனக்கு குரு என்றால் அது எனது முப்பாட்டன்தான். அதாவது என்னுடைய அப்பாவின் தாத்தா. அவர்தான் எனக்கு இந்த விஷயங்களில் குரு. அவர் பெயர் கிட்ட மராஜா அவர் 108 வயது வரை வாழ்ந்த மாமனிதர். எங்கள் தாத்தா இறந்தபோது கூட அவரது அப்பா இருந்தார். அவர் நூறு வயதில் கூட மீன் சமையல் செய்து போடுவார் என்று என் அப்பா கூறிஇருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்யாமலேயே அகன்ற தோள்களுடன் கட்டான உடலுடன் கம்பீரமாக இருப்பாராம். நான் என் சிறுவயதில் பார்த்தபோது கூட அவர் அந்த வயதில் கம்பீரமாகத்தான் எனக்குத் தெரிந்தார். அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்த்து சில பழக்கங்களை நான் என் ஏழு வயதிலிருந்து பின்பற்றி வருகிறேன்.

காலையைப் போன்றே தினமும் இரவு குளித்த பிறகு தான் சாப்பிடுவேன். சாப்பிட்ட பிறகு பல் துலக்குவேன். பிறகுதான் தூங்கச் செல்வேன். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவேன். அதில் குறைவுபட்டால் பகலில் இரண்டு மணி நேரம் தூங்கி ஈடு செய்து கொள்வேன். இரவு தூங்கும் முன்பு விளக்கெண்ணெய் விட்டுக் கொள்வது நான் தொடர்ந்து வருகிற பழக்கம். அதாவது உச்சந்தலையில்,இரு கண்களுக்கு கீழே, மூக்கின் இருதுவாரங்களில், தொப்புளில் ,உள்நாக்கில், இரண்டு காதுகளில், ஆசனவாயில், உறுப்பு நுனியில் என்று விளக்கெண்ணெய் ஒரு சொட்டு விட்டுக் கொள்வது என் வழக்கம்.

எங்கள் ஊரான ராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சீசனில் வண்டி வண்டியாக வரும். அப்போது அவற்றை மொத்தமாக வாங்குவார்கள். தோல் நீக்கி உள்ளே உள்ள குருத்தை எடுத்து வீட்டு மொட்டை மாடியில் காயவைத்து அதை உரலில் போட்டு எங்கள் வீட்டுப் பாட்டிகள் இடிப்பார்கள். பிறகு மாவாக்கி சலித்து அதை ஒரு குதிரில் சேமித்து வைப்பார்கள். அதை அடுத்த ஆண்டு தான் பயன்படுத்துவார்கள்.

காலையில் அந்த பவுடருடன் பாலைச் சேர்த்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். அதே போல்  மாங்காயை நிறைய வாங்கி இரண்டாக வெட்டி அதையும் குதிரில் போட்டு நல்லெண்ணெய், தேன் இரண்டையும் ஊற்றி அடுத்த ஆண்டு எடுத்து சாப்பிடுவார்கள். ஓராண்டு செய்வதை அடுத்த ஆண்டு தான் எடுத்துச் சாப்பிடுவோம். அவை பெரிய அற்புதமான உணவாக இருக்கும் .இது எங்கள் தாத்தாவின் பக்குவம்.

மனித ஆரோக்கியம் வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல, மனம் சாந்ததும் கூட. மனம் தெளிவாக இருந்தால் உடல் தெளிவாக இருக்கும். மனம் சோர்வடைந்து விட்டால் உடல் சோர்வடைந்து விடும். எதையும் மனதில் வைத்துப் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை முதலில் விட்டு விட வேண்டும்.

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால் நாம் சில செயல்களைச் செய்வதன் மூலம் கவலைகளுக்கு ஆளாகிறோம். ஆசைப்படக்கூடாது என்று நான் சொல்ல மாட்டேன் .ஆனால் தகுதி உள்ளவற்றிற்கு ஆசைப்பட வேண்டும். .நீங்கள் ஒரு பெண்ணை  விரும்புகிறீர்கள். ஆனால் அந்தப் பெண் உங்களை விரும்பவில்லை, என்றால் அதற்குக் கவலைப்படுவதா? அந்தப் பெண் உங்களை விரும்பும் அளவிற்கு உங்கள் தகுதி இருக்க வேண்டும்; அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நமது உடல் உறுப்புகள் எல்லாமே அதன் வேலையைச் சரியாகவே செய்கின்றன. நாம்தான் அதைக் கவனிப்பதில்லை. எனவே, உடல் சொல்வதை அறிந்து கொள்ளுங்கள். உடல் கேட்பதை நாம் கொடுத்தே தீர வேண்டும் ,தள்ளிப் போடக்கூடாது, செக்ஸ் உள்பட. தாகம் எடுத்தால் உடனே நீர் குடிக்க வேண்டும் இப்படி உடல் சொல்வதைக் கேட்க வேண்டும்.

சாப்பிடுதல், குளித்தல் போன்றவற்றை நிதானமாக மெதுவாகச் செய்ய வேண்டும். குளிக்கும்போது ஷவரில் குளிப்பது ஆரோக்கியம் அல்ல. வாளியில் நீரை எடுத்து முதலில் கால்களில் ஊற்றி மெல்ல மெல்ல மேலே ஊற்றிக் குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள சூடு வெளியேறும். குளத்தில் இறங்கி மெல்ல மெல்ல அமர்ந்து குளிப்பது போல் இருக்க வேண்டும்.

எனக்கு கேரளா உணவு வகைகள் மிகவும் பிடிக்கும் அதில் இளநீர் பாயசம் மிகவும் பிடித்த ஒன்று. கோவாவில் கோக்கனட்  பிரியாணி  என்று ஒன்று உண்டு. கொப்பரைத் தேங்காய் எடுத்து அதற்குள் அரிசி மற்ற பொருள்கள் எல்லாம் போட்டு நெருப்பில் சுட்டு வேக வைத்துச் செய்யப்படும் அந்தப் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும். இது கோவாவின் பாரம்பரிய உணவு. மலேசியாவில் செய்யப்படும் துவரம் பருப்பு பாயசம் மிக ருசியாக இருக்கும். வட இந்திய உணவு வகைகள் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும்.

நமது செட்டிநாட்டு காரைக்குடி உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். பாரம்பரிய உணவுகளில் நம் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்கு வேறு இடம் இல்லை என்று சொல்லுவேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும் .மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பாணியில் ருசியில் இருக்கும்.

எப்போதும் எனக்கு உணவு சூடாக இருக்க வேண்டும். அறுசுவை என்பதில் ஆறு சுவை தாண்டி ஏழாவது சுவை இருக்கிறது என்றால் அது சூடு தான். சுடச்சுட கிடைப்பது தான் பாரம்பரியம்.

காலையில் தண்ணீருக்குப் பதில் தக்காளி, இஞ்சி, நெல்லிக்காய், வெள்ளைப் பூசணிக்காய், சீசனில் கிடைக்கும்போது தர்பூசணி என்று எடுத்து இவற்றைச் சிறு துண்டுகளாக்கி ஜூஸாகக் குடித்தால் மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எல்லாமே எளிதில் கிடைக்கும் பொருள்கள்தான், நாம் தான் செய்ய வேண்டும்.

தக்காளிசாறு மிகவும் பிடிக்கும். அது ரத்தத்தை சுத்திகரிக்கும் .ஏபிசி என்ற ஒரு பார்முலாவில் ஜூஸ் குடிப்பேன். ஏ -ஆம்லா அதாவது நெல்லிக்காய், பி- பீட்ரூட், சி -கேரட். இது மூன்றையும் சேர்த்து ஜூஸாக்கி சாப்பிட்டால் நம்முடைய தோலின் தன்மையே மாறிவிடும்.

நான் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அது ஒரு பக்கம் இருந்தாலும் நான் எங்கு சென்றாலும் நடந்தே செல்வேன், .இப்போதெல்லாம் கார், பைக் என்று வாங்குவது சுலபம் என்கிற நிலை இருந்தாலும் கூட எனக்கு கார் வாங்க வேண்டும், பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை. ஏனென்றால் தேவையான அளவுக்கு நான் நடந்து சென்று விடுவேன்.

காருக்கான முதலீடு என்று பார்த்தால் அதனால் நமக்கு பெரிய இழப்புதான். 10 லட்ச ரூபாய் கார் வாங்குகிறீர்கள் என்றால் அதை ஐந்தாண்டுகள் கழித்து விற்றால் இரண்டு லட்சம் கூட போகாது. அதற்கு 10 லட்சம் ரூபாயில் ஒரு சிறிய வீடு வாங்கி வாடகைக்கு விட்டால் கூட பத்து ஆண்டுகள் கழித்து இருமடங்காக விற்கலாம். கார் வாங்குவதை விட வீடு வாங்குவது நல்லது. கார் வாங்கிய பிறகுதான் உடல் இயக்கம் குறைந்து எல்லா நோய்களும் நமக்கு வர ஆரம்பிக்கும். டூ வீலர் அதைவிட டேஞ்சர். எனக்கு இப்படி வாகனங்கள் வாங்குவது என்கிற எண்ணம் சிறு வயதிலிருந்தே கிடையாது. இப்போது எல்லாம் எங்கு வேண்டுமென்றாலும் சுலபமாக ஆன்லைனிலேயே கார், பைக் புக் செய்து சென்றுவிடலாம். ஊர் உலகமெல்லாம் சுற்றினாலும் பெரும்பாலும் நடந்து செல்வதை நான் தவிர்க்க மாட்டேன்.

நான் அடிக்கடி வெளியூர் செல்வதால் நான் முடிந்தவரை நடந்து செல்வேன். நடந்து களைப்பு வரும் ,ஜாலியாக மகிழ்ச்சியாகவும் இருக்கும். அங்கங்கே சாப்பிட்டு விடுவேன். வந்து படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடும்.

ஒழுங்காகச் சாப்பிட்டு ஒழுங்காக இருந்தாலே நமக்கு நோயும் இல்லை. மருந்தும்  தேவையில்லை.

நம் உடம்பு சரியாக இருந்தால் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும் ? நமக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும்  அதற்கான காரணம் நம் உடலில் தான் இருக்கும். தலைவலி என்றால் கூட அதற்கு நான்கு காரணங்கள் தான் இருக்க வேண்டும். 1. தூக்கமில்லாமல் இருக்கலாம். 2. பசி இல்லாமல் இருக்கலாம், 3. இரவு கண் விழித்திருக்கலாம், 4. மலச்சிக்கல் இருக்கலாம். அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருக்கலாம். இதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

இந்தக் காலத்தில் நவீன மருத்துவமனைகள் நோயை நீக்கி விடுவதில்லை. மறைக்கவே உதவுகின்றன. இப்போது உடல் பருமனால் தொப்பை இருக்கிறது என்றால் அதை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டுமே தவிர மறைக்க என்னென்னமோ செய்கிறார்கள். அதுபோல்தான் நவீன மருத்துவங்கள் நோயை மறைக்கின்றன, குறைப்பது நீக்குவது கிடையாது. நாம் நம் உடலை நேசிக்க வேண்டும். அந்த உடல் நம்மைக் காப்பாற்றும் இதுதான் என் கருத்து”.

  • அருள்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *