தேர்தல் சின்னத்தை எடுத்துட்டு மோதிப் பாருங்க

Image

சென்னை போராட்டத்தில் சீமான் சவால்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், கூலிப்படை கலாச்சாரம், அரசின் அடக்குமுறைகள் என முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறியதைக் கண்டித்தும், மின் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘’நாட்டில் நடக்கும் நிறைய கொலைகள் போதையில் தான் நடக்கிறது. அதனால் போதும் தி.மு.க. இனிமேலும் இந்த ஆட்சி தொடரக்கூடாது.

நிரந்தரச் சின்னத்தை வைத்துக்க்கொண்டு தான் தொடர்ந்து வெற்றி அடைகிறார்கள். ஆனால், எங்களுக்கு மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் புதுச் சின்னம் கொடுக்கிறார்கள். யாருக்கும் நிரந்தர சின்னம் இருக்கக்கூடாது.

இப்ப வந்து போட்டி போட்டிப் பாருங்க. உதயசூரியனை தூக்கிப் போடுங்க, இரட்டை இலை வேண்டாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் புதுப்புதுச் சின்னம் கொடுங்க. அது இல்லைன்னா அமெரிக்காவைப் போல எல்லோருக்கும் புதுப்புது எண் கொடுத்துட்டு மோதிப் பாருங்க…’’ என்று சவால் விட்டார் சீமான்.

‘’நாட்டில் தலைமையே சரியில்லை. தலை இல்லாத முண்டம் போல திரியுது அ.தி.மு.க. சட்டை போடாத முண்டமாத் திரியுது தி.மு.க.’’ என்று கடுமையாகப் பேசினார். பின்னர் வயநாடு குறித்து, ‘’மரங்களை வெட்டாதீங்கன்னு போதிக்கும் போது புரிவதில்லை பாதிக்கும் போதுதான் தெரிகிறது. கேரள நிலச்சரிவு நிகழ்வு என்பது ஒரு பெரும் துயரம். மரங்களை அழித்துவிட்டு அதை அழித்தவர்களே அதுதான் காரணம் என பேசுவதுதான் இடி விழுந்தார் போல் உள்ளது.’’ என்று கூறினார்.

Leave a Comment