மனம்

செத்துப் போன தாத்தாவை பார்க்க முடியுமா?

ஆசையும் பேய் பயமும் பேய்

கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லிப் பாருங்கள். யாரும் நம்ப மாட்டார்கள். அவர்களிடமே, நேற்று இரவு என்னுடைய செத்துப்போன தாத்தா பேயாக வந்தார் என்று சொல்லுங்கள். நிச்சயம் நம்புவார்கள்.

பேய்ப் படம் பார்க்கச் செல்கிறீர்கள். தியேட்டர் திரையின் மூலம் பேய் வராது என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனாலும் படம் பார்க்கும்போது பயம் வருகிறது. இதயம் துடிக்கும் சத்தம் கேட்கும் வகையில் திடுக்கிடுகிறீர்கள்..

திரையரங்கினுள் பேய் இல்லை என்று தெரிந்தாலும் பயப்படுவதற்கு காரணம் தெரியுமா? சின்ன வயதில் இருந்து பேய் பற்றி கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளும் மரணம் பற்றிய அச்சமும்தான்.

திரையில் காணப்படும் பேய் உண்மை இல்லை என்றாலும், பேய் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறான் மனிதன். தான் இதுவரை காணாத பேய் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில்தான், பேய்ப்படம் பார்க்கச் செல்கிறான் மனிதன். ஒரு பேய் படத்தை பார்த்துமுடித்ததும், ஏதோ சாதனை புரிந்ததுபோல் சந்தோஷப்படுகிறான்.

இன்னும் சொல்லப்போனால் மது குடிப்பதில் கிடைக்கும் போதையைப் போன்று பேய் படம் பார்த்து கொஞ்சம் இன்பமும், உள்ளூர கொஞ்சம் பயமும் அடைகிறான். படம் பார்ப்பதால் தன்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்பது உறுதியாக தெரிவதால்தான் படம் பார்க்க முன்வருகிறான், அதேநேரம் பயப்படவும் செய்கிறான்.

எனவே பேய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும், அச்சப்படுபவர்களும் பேயை உருவாக்கிவிடுகிறார்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால் பயமே பேய்.

? அப்படியென்றால் எதற்கும் பயப்படக்கூடாதா? 

பயம் இல்லாத மனிதர்கள் யாருமே இந்த உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பயம் இருக்கும். பெரும்பாலான மனிதர்களுக்கு இருட்டு, பாம்பு, கரப்பான்பூச்சிகளைக் கண்டால் பயம். இரவு நாய் குலைத்தால் பயந்து நடுங்குபவர்கள் உண்டு. ஏதாவது ஒன்றைக் கண்டு பயம் ஏற்படுவதற்கு காரணம், சம்பந்தபட்ட விஷயம் குறித்த தெளிவு இல்லை என்றுதான் அர்த்தம். இன்னொரு வகையில் சொல்வது என்றால் பயம் ஏற்படுவதற்கு காரணம் மனிதனே.

சின்ன வயதில் ஆசிரியரைக் கண்டு பயப்படுகிறாய். அவர் அடிப்பார் என்று பயம் கொள்கிறாய். நீ ஒழுங்காக படித்திருந்தால், ஒழுக்கமாக நடந்துகொண்டால் எந்த ஆசிரியருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை.

மேடை ஏறி பேசுவதற்கு பயம் கொள்வாய். அதற்கு பயிற்சி எடுத்திருந்தால் பயம் கொள்ள அவசியம் இல்லை. உயர் அதிகாரியைக் கண்டு பயப்படுகிறாய். மனைவியைக் கண்டு பயப்படுகிறாய். நீ எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அதிகாரியைக் கண்டும், மனைவியைக் கண்டும் பயப்படத் தேவை இல்லை. அதனால்தான் பெரும்பாலான பயம் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாக இருக்கிறான்.

? பயம் தேவையில்லாத ஒன்றா?

அப்படியில்லை, பயம் சில நேரங்களில் மிகவும் அவசியமான உணர்வு. எதற்கு பயப்பட வேண்டும் எந்த நேரத்தில் பயம் தேவையில்லை என்ற தெளிவுதான் அவசியம். ஏனென்றால் உயிரை காப்பாற்ற பயம் தேவை. உயிருக்கு நேரும் ஆபத்தை எச்சரிக்கவும், தப்பிக்கச் செய்யவும் பயம் என்ற உணர்வு பயன்படுகிறது. சமையல் எரிவாயு கசிவதை உணர்நதவுடன் பயம் கொள்வது அவசியம். அப்போதுதான் ஜன்னலைத் திறந்து, கசிவை நிறுத்தி குடும்ப உறுப்பினர்கள் உயிரை காப்பாற்ற முடியும்.

ஏதேனும் ஒரு மிருகத்திடம் சிக்கிக்கொண்டால் உடனே பயம் வரவேண்டும். எப்படி தப்புவது என்று மூளை வேலை செய்யவேண்டும். பயம் கொள்ளும்போது இரண்டு வகையான நிகழ்வுகள் ஏற்படுகிறது. ஒன்று தப்புவது இரண்டாவது எதிர்த்து நிற்பது. இந்த இரண்டு உணர்வுகளும் மனித வாழ்வுக்கு இன்றிமையாதது. தேவையான இடத்தில் தப்பிக்கவும், தேவையான இடத்தில் எதிர்த்து நிற்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

? பயத்தை எப்படி எதிர்த்து நிற்பது?

மனிதர்களுக்கு விதவிதமான பயம் இருக்கிறது. மருத்துவரீதியில் ஆயிரக்கணக்கான போபியா இருப்பதாக சொல்கிறார்கள். கருப்பு நிறம், கடல், லிஃப்ட், நகரும் படிக்கட்டு, தனிமை, இடி, மழை என்று ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக பயம் உண்டாகிறது. அனைத்து பயங்களில் இருந்தும் மீண்டுவிட முடியும். ஆம், மனதை திடமும் பலமும் கொண்டதாக மாற்றிக்கொண்டால் பயத்தை பயன் உள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும். பயம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆணிவேர் வரையிலும் சென்று அலசிப்பார். ஒவ்வொரு பயமும் நீயே ஏற்படுத்திக்கொண்டது என்பது புரியவரும். இந்த உண்மை அறிந்துகொண்டால் உன்னைக் கண்டு பயமே பயந்துவிடும்.

? கடைசியாக ஒரு கேள்வி, பேய் இருக்கிறதா.. இல்லையா?

கடவுளை நம்புபவனுக்கு நிச்சயம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *