அடேங்கப்பா, ஆச்சர்ய தகவலா இருக்குதே

Image

தகவல் களஞ்சியம் 1

                  கை கொடுக்கும் கை

தமிழில் ஓர் எழுத்து வார்த்தை. அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தம் தரக்கூடியது… என்ன வார்த்தை என்பது தெரியுமா?

கை என்பதுதான். சரியா..

மிகவும் சரி. கை என்பது மனித உறுப்பினைக் குறிக்கிறது. அதே சொல் எப்படியெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?

கை கொடுத்தான் என்றால் உதவினான் என்று அர்த்தம்.

கையைக் கடித்துவிட்டது என்றால் நட்டமாகி விட்டது என்று அர்த்தம்.

கை ரொம்பத் தாராளம் என்றால் ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்பவர்.

கை சுத்தமில்லை என்றால் நேர்மை இல்லாதவன் என்று அர்த்தம்.

கையால் ஆகாதவன் என்றால் எதற்கும் பயன்படாதவன். இதேபோன்று இன்னமும் கைகூடி வரவேண்டும், அவனை கை கழுவு, கை விட்டுவிட்டான், ஒரு கை குறையுது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று இடத்திற்குத் தகுந்தாற்போல் அர்த்தம் சொல்கிறது, கை’.

                          மிதக்கும் பாறை

ராமேஸ்வரம் சென்று வருபவர்கள் நிச்சயம் மிதக்கும் பாறையைப் பார்த்து ரசித்திருப்பார்கள். அது எப்படி மிதக்கிறது என தெரியுமா?

அதுதான் அதிசயம். நான் கையால் தொட்டுப் பார்த்திருக்கிறேன், மிகவும் லேசாகத்தான் இருக்கும். 

‘நீ பார்த்தது வழக்கமான பாறை அல்ல, பவளப் பாறை என்றுதான் சொல்லவேண்டும்.. ஜெல்லி மீன் இனத்தைச் சேர்ந்த பவளம் என்று அழைக்கப்படும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்  ஒன்றுசேர்ந்து பவளப் பாறையாக மாற்றம் அடைகிறது. இந்த பவளப் பாறைகளைச் சுற்றி ஏராளமான மீன் இனங்களும் சின்னஞ்சிறு உயிரினங்களும் வசிக்கின்றன.

இந்த பவளப் பாறைகளை ஆதாயத்துக்காக மனிதர்கள் வெட்டி எடுப்பதால், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை அந்தமான் மற்றும் லட்சத் தீவுகளில் இந்தப் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.

                   மாடியில் தோட்டம் வீட்டுக்குள் ஏசி

கோடை காலத்தில் வீட்டுக்குள் படுத்து இருந்தாலும் உச்சி வெயில் காரணமாக உடல் அனல் போல் கொதிக்கும். இந்த நிலையை மாற்றுவதற்கு ஏ.சி., ஏர்கூலர் போன்றவற்றைத் தேடி ஓடுவதைவிட எளிய சிம்பிளான வழி இருக்கிறது.

அது என்ன வழி?

வீட்டு மாடியில் தோட்டம் போடுவதுதான். கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, கீரைகள் போன்றவற்றை மாடியில் சுலபமாக வளர்க்க முடியும். இந்த செடிகளை வளர்க்கும்போது ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன் வீட்டின் வெப்பமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதற்கு அரசு உதவியும் கிடைக்கிறது. தோட்டம் அமைப்பதற்குத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதின் பைகள் போன்றவற்றை அரசு மானிய விலையில் கொடுக்கிறது. மாடியில் நிறைய இடம் இருந்தால்தான் வளர்க்கமுடியும் என்பதில்லை, 200 சதுர அடி இடமே போதுமானது. மொட்டை மாடியெங்கும் பச்சைத் தோட்டமாகிவிட்டால் சூரியனைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதே இல்லை.

             சூரியன் மேற்கே தோன்றும்

சூரியன் கிழக்கே உதிக்கும் என்றுதான் நாம் பாடங்களில் படிக்கிறோம். ஆனால் வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கே உதிக்கிறது. இதற்குக் காரணம் தெரியுமா?

பூமி போன்ற கிரகங்கள் எல்லாம் மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கின்றன. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளி மாலுமிகளுக்கு வழி காட்டும் நட்சத்திரமாகவும் செயல்புரிகிறது. இது விடியலிலும் மாலை, இரவு நேரமும் வானில் தெரியும். அதனால் இதனைத்தான் நம் தமிழர்கள் விடி வெள்ளி என்று சொல்வார்கள்.

இது கொஞ்சம் சோம்பேறி கிரகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகிறது. இங்கே 480 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பதால், ஈயம், இரும்பு போன்றவை எளிதில் உருகிவிடும். அதனால் இங்கே உயிரினம் வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லையாம்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்