அனைத்து மனிதருக்கும் பொதுவானவை
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. ஒவ்வொரு நபரின் வாழ்வியல் சூழலும் உடல் நலனும் வெவ்வேறு வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், மனிதர்களின் மனம் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரே வகையில் செயலாற்றுகிறது. அதனாலே லட்சியம், நம்பிக்கை, பயிற்சி, முயற்சி, பொறுமை ஆகியவற்றைக் கடைபிடிப்பவர்கள் எப்படியேனும் வெற்றியைத் தொட்டு விடுகிறார்கள்.
உலகம் முழுவதுமுள்ள மனிதர்கள் வெற்றிக்கு உதவும் ஐந்து விதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கும் இது ஏற்றதாகவே இருக்கும்.
- மர்ஃபி விதி
’மழையில் நனைந்துவிட்டதால் ஜலதோஷம் பிடித்துவிடக் கூடாது’ என்று நினைக்கிறீர்கள். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவி பிடிப்பது, விக்ஸ் போடுவது என்றெல்லாம் நிறைய செய்கிறீர்கள். ஆனாலும், ஜலதோஷம் பிடித்தே விடுகிறது. ஆம், எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம் என்பதே மர்ஃபி விதி. ஏதேனும் ஒரு வேலை செய்யும் நேரத்தில் இது தப்பாகத்தான் முடியும் என்ற எண்ணம் தோன்றினால், நிச்சயம் அது தப்பாக முடிந்துவிடும். இதை மாற்ற வேண்டும் என்றால் நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்வது மட்டுமே ஒரே வழி.
- கிட்லின் விதி
நிறைய அலுவலகங்களில் அதிகாரிகள் அறையில் ஒரு போர்டு மாட்டப்பட்டிருக்கும். அதில் தற்போதைய பிரச்னை பற்றியும் அதற்கு என்னென்ன தீர்வுகள் என்பது குறித்தும் எழுதி வைத்திருப்பார்கள். ஒரு பிரச்னை உருவாகிறது என்றால், அந்த பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி விட்டாலே, அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி கிடைத்துவிடும் என்பதே கிட்லின் விதி. எழுதுவது என்பது ஒரு முழுமையான ஆய்வு போன்றது. அந்த பிரச்னையில் இருந்து விலகி நின்று பார்க்கும் நபர்களுக்குத் தான், அதைப் பற்றி தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத முடியும். ஆகவே, ஏதேனும் ஒரு பிரச்னை வருகிறது என்றால், முதலில் அது என்ன பிரச்னை என்று முழுதாக எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள். எழுதும் நேரத்திலேயே அதற்கான விடை கிடைத்துவிடும் எனப்படும் கிட்லின் விதி எளிதான வெற்றிக்கு வழி.
- கில்பர்ட் விதி
ஒரு டெய்லரிங் கடையில் 10 பேர் வேலை செய்கிறார்கள் என்றால், யார் துணியை கட் செய்வது, யார் தைப்பது, யார் பட்டன் வைப்பது, யார் அயர்ன் செய்து அடுக்குவது என்று மிகத்தெளிவாக வேலைகள் வரையறுத்துக் கொடுக்கப்பட வேண்டும். ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும் வகையில் செயல் திட்டம் வகுத்துக் கொடுப்பதே வெற்றிக்கு எளிய வழி என்பது கில்பர்ட் விதி.
அவரவர் வேலையை அவரவர்கள் வழியில் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கை வைத்தால், உருப்படியாக ஒரு வேலையும் நடக்காது. எனவே, ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பதே முக்கியம் என்பது கில்பர்ட் விதி.
இந்த செயலில் வேறு யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. திட்டம் வகுப்பவரைத் தவிர மற்ற அனைவரும் திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டுமே இருக்க வேண்டும். வேறு யாரேனும் தீர்வு தருபவர்களாக, வழி காட்டுபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி ஒருவர் இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய திட்டத்தை நிறைவேற்ற பயன் அளிக்காது. ஆகவே, மிகத்தெளிவான செயல்முறைகளை வகுப்பது மட்டுமே திட்டத்தைக் குழப்பமில்லாமல் முடிக்கும் வழி.
- வில்சன் விதி
ஒரு ஹோட்டல் சிறப்பாக நடக்கிறது என்பதற்காக அதில் எந்த மாறுதலும் செய்யாமல் புதிய திறமையைக் காட்டாமல் நடத்திக்கொண்டே இருந்தால், அந்த ஹோட்டல் மிக விரைவில் போட்டியாளர்களிடம் தோற்றுப் போய்விடும். எனவே, வெற்றி அடைந்தவர் என்றாலும் மென்மேலும் திறமையை வளர்த்துக்கொள்ளவும், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் மட்டுமே தொடர் வெற்றி கிடைக்கும் என்பது வில்சன் விதி. அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் தேடி வரும். ஒரு மருத்துவர் புதுப்புது மருந்துகள், புதுப்புது மருத்துவ வழிமுறைகளை படிக்கவில்லை என்றால் புதியவர்களுடன் போட்டியிட முடியாமல் பின்னுக்குத் தள்ளப்படுவார். ஆகவே, திறமையை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது வில்சன் விதி.
- ஃபாக்லேன்ட் விதி
ஒரு நிறுவனம் அல்லது தொழில் நன்றாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், நிறுவனத்திற்கு சொந்தமாக ஒரு இடம் சும்மா இருக்கிறது என்பதற்காக அங்கே ஒரு புதிய ஷோ ரூம் போடுவது, பொழுதுபோக்கு மையம் கட்டுவது என்று தேவை இல்லாத விஷயம் எதுவும் செய்யக்கூடாது. அதாவது, தேவை இல்லாத நேரங்களில் தேவை இல்லாத முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே ஃபால்கேன்ட் விதி. நிறைய நிறுவனங்கள் தேவையில்லாத முடிவுகள் எடுப்பதாலே தோற்றுப் போகின்றன.
இந்த ஐந்து விதிகளும் நிறுவனத்தின் வெற்றிக்கும், தனி நபரின் வெற்றிக்கும் பயன் தரக்கூடியவை. ஆகவே, எந்த ஒரு குழப்பம் வரும் நேரத்திலும் இந்த விதிகளை நினைத்துப் பாருங்கள், வெற்றி கிடைத்துவிடும்.