விருதுநகர் கைவிட்டது நாகர்கோவில் அரவணைத்தது.
பெருந்தலைவர் காமராஜர் மீது மக்களுக்கு பெருமதிப்பும், மரியாதையும் இருந்தது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சீரமைப்பதற்காக முதல்வர் பதவியில் இருந்து விலகி கட்சி சேவையில் இறங்கினார். இது ஒரு தற்கொலை முயற்சி என்று பெரியார் கூறியதை காமராஜர் ஏற்கவில்லை. காமராஜின் ராஜினாமாவுக்குப் பிறகு தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார். அவரது அமைச்சரவை 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பதவியேற்றது.
நேருவின் வற்புறுத்தல் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1964ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பதவியேற்றார். இதன் காரணமாக இந்தியா முழுக்க காமராஜர் செல்ல நேர்ந்தது. தமிழகத்தின் மீது முழு அக்கறையும் அவரால் செலுத்த இயலவில்லை.
வாக்கு அரசியலுக்காக பொய் சொல்லும் பழக்கம் காமராஜருக்குக் கிடையாது. ஆனால், அப்போது மிக வேகமாக வளர்ந்துவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடையில் விதவிதமாக வாக்குறுதிகள் அள்ளித் தெளித்தார்கள். ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று மேடையில் பேசி மக்களிடம் ஆசையைத் தூண்டினார்கள். எல்லா இடங்களிலும் அது பேசுபொருளானது.
சாத்தியமேயில்லை என்பதால் காமராஜர் இது குறித்து எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லை. காமராஜர் அடிக்கடி வெளி மாநிலம் செல்வதை வைத்து, பல்வேறு இடங்களில் சொத்து வாங்கிப் போட்டிருக்கிறார் என்று பேசினார்கள். இதற்கும் காமராஜர் பதில் பேசவில்லை. இருக்குன்னு சொன்னா அவங்கதான் ஆதாரம் காட்டணும் என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரான விருதுநகரில் போட்டியிட்டார் காமராஜ். விருதுநகர் தொகுதியில் அந்த ஆண்டு நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 82,606 வாக்குகள் பதிவாகின. காமராஜுக்கு 32,136 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. சீனிவாசனுக்கு 33,506 வாக்குகள் கிடைத்தன. சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றுப் போனார்.
காமராஜரின் தோல்விக்குக் காரணம் தி.மு.க.வினரின் வாக்குறுதிகள் மட்டுமல்ல, அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கழுத்தில் கட்டுப்போட்ட அவரது புகைப்படத்தைப் போட்டே தி.மு.க.வினர் வாக்கு கேட்டார்கள். புரட்சித்தலைவருக்கு விழுந்த அனுதாப ஓட்டுகளே ஆட்சி மாற்றத்துக்கும் காமராஜர் தோல்விக்கும் காரணமானது.
மேலும் விருதுநகரில் பெரும் செல்வந்தர்கள் பலரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தார்கள். காமராஜர் முதல்வராக இருந்தாலும் விருதுநகர் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்று மக்களிடம் வெறுப்பை விதைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.
காமராஜரின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத தொண்டர்கள் வாக்குச்சீட்டில் மோசடி என்று புகார் சொன்னார்கள். அவர்களிடம் காமராஜர், ‘இது தான் ஜனநாயகத்தின் மகிமை’ என்று பெருந்தன்மையுடன் கூறினார்.
காமராஜரின் தோல்வி டெல்லி வரை எதிரொலித்தது. காமராஜரால் பதவியில் அமர வைக்கப்பட்ட இந்திராகாந்தி, ‘’பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற ஒருவர், கட்சி தேர்தல்களில் போட்டியிடும் தார்மிக உரிமை கிடையாது’ என்று பேசியதால், 1967ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு 1969ல் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை வற்புறுத்தி நிறுத்தினார். அந்த தேர்தலில் காமராஜர் மகத்தான வெற்றி பெற்றார். காமராஜ் உயிரிழக்கும் வரை நாகர்கோவில் தொகுதியின் எம்.பி ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.