• Home
  • சக்சஸ்
  • பெருந்தலைவரின் ஈடுஇணையற்ற கே பிளான்

பெருந்தலைவரின் ஈடுஇணையற்ற கே பிளான்

Image

அதிகாரத்தை தூக்கியெறிந்த புரட்சியாளர்

அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் நோக்கமும் லட்சியமுமாக இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க முடிகிறதோ இல்லையோ கட்சிக்காவது தலைவராக இருக்க வேண்டும் என்று நாற்காலி போட்டி நடத்தும் அரசியல்வாதிகளை தினம் தினம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

தமிழக முதல்வர் எனும் பதவியில் இருந்த நேரத்தில், அதை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் பணிக்கு ஒருவரால் செல்ல முடியும் என்றால், அதற்கு எத்தகைய மனதிடமும் உறுதியும் தாண்டி மக்கள் மீது பேரன்பு இருக்க வேண்டும். அத்தகைய பண்பு கொண்ட ஒரே தலைவர் காமராஜர் மட்டுமே.

அவருக்கு முன்பும் யாரும் அப்படி இருந்ததில்லை, இனியும் யாரும் அப்படி இருக்கப்போவதில்லை. அதனாலே அவர் பெருந்தலைவராகவும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பதவிப் போட்டி நடப்பதும் சேவை மனப்பான்மை இல்லாதவர்கள் பதவிக்கு வருவதைக் கண்டும் மனம் வெறுத்த பெருந்தலைவர், கே திட்டத்தைக் கொண்டுவந்தார்

1963 ஹைதராபாதில் நடந்த கட்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம், முதன்முதலாக இது குறித்துப் பேசினார் காமராஜ். அன்று அவர் பேசுகையில், ‘’ஆட்சியும் அதிகாரமும் கட்சியில் உள்ள எந்தவொரு தனி நபரின் சொத்தாக இருக்கக் கூடாது. அந்த வகையில், எந்தவொரு தனி நபரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவியிலும் தொடருவது கட்சிக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை.

எனவே நான் முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் முழு நேரத்தை செலவிட்டு கட்சியை ஆணி வேர் அளவில் வலுப்படுத்தப்போகிறேன்’’ என்று காமராஜ் தெரிவித்தார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசிய நேரு, ’’காமராஜ் வகுத்த திட்டம் இதுவரை எந்தவொரு கட்சியும் சிந்திக்காத, ஈடு இணையற்ற திட்டம். இது அவருடைய பெயரில் கே திட்டம் என்றே இனி அழைக்கப்படும்.

தமிழ்நாடுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்த இரு வாரங்களில் காங்கிரஸ் ஆளும் மத்திய, மாநில அரசுகளில் யாரெல்லாம் பதவி விலகுவார்கள், கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற பட்டியலை வெளியிட்டார் நேரு.

அதன் விளைவாக, அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி (உள்துறை), மொரார்ஜி தேசாய் (நிதித்துறை), ஜெகஜீவன் ராம் (அஞ்சல் துறை), எஸ்.கே. பாட்டீல் (உணவுத்துறை), கோபால் ரெட்டி (வானொலி ஒலிபரப்பு), ஸ்ரீ மாலி (கல்வி) மற்றும் மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜ் (தமிழ்நாடு), பட்நாயக் (ஒரிசா), சி.பி. குப்தா (உத்தர பிரதேசம்), பினோதானந்த்ஜா (பிஹார்), மந்த்லாய் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.

1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டார். ஒரு வகையில் அது உண்மை தான். ஏனென்றால், அதன்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மலரவே இல்லை.

காமராஜின் அதிரடி அறிவிப்பாலும் செயல்பாடுகளாலும் நெகிழ்ச்சி அடைந்த நேரு, அவர்தான் அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தொடக்கத்தில் அதை ஏற்க மறுத்த காமராஜ், நேருவின் மூன்று மாத அழுத்தத்துக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1964ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பதவியேற்றார். அதனாலே கிங் மேக்கர் ஆகும் வாய்ப்பும் கிடைத்தது.

Leave a Comment