• Home
  • யாக்கை
  • கண்ணடியுங்க, ஆரோக்கியத்துக்கு நல்லது.

கண்ணடியுங்க, ஆரோக்கியத்துக்கு நல்லது.

Image

ஆச்சர்ய கண் நலக் குறிப்புகள்

செல்போனும் கம்ப்யூட்டரும் இன்று மனிதனின் இரு கரங்களாகிவிட்டன. எந்த நேரமும் இந்த கண்ணாடி திரையின் முன்னே மனிதர்கள் நிற்பதால், அதிகம் பாதிக்கப்படுவது, கண்கள்தான். அதோடு போதிய ஊட்டச்சத்துக்களும் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், கண் அழுத்தம், பார்வை குறைபாடு, இரட்டை பார்வை போன்ற பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன. அப்படியொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு சில எளிய குறிப்புகள் இங்கே…  

  • தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். தூங்கப் போவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவற்றை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்.
  • கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே குளிர்ந்த தண்ணீர் ஊற்றி கண்களை கழுவ வேண்டும். பின்னர் குறைந்தது 5 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். இது, கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
  • இரண்டு உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாக தேய்த்து, சிறிது சூடானதும், அதனை கண்களில் வைத்து மெல்லிய அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை தினமும் 5 முறை செய்தால், கண் பார்வை நன்கு அதிகரிக்கும்.
  • கண்களைச் சுழற்றும் பயிற்சியை அனைவரும் செய்ய வேண்டும். முதலில் சிறிது நேரம் கண்களை ஒரு திசையில் சுழற்ற வேண்டும். பின்னர் மறு திசையில் சுழற்றவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் பார்வை மேம்படும்.
  • சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். பின்னர், உங்களது விரலை கண் முன்னே வைத்து, அந்தப் பொருளையும், விரலையும் மாறிமாறிப் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வது, கண் தசைகளுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.
  • பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.
  • ஒவ்வொரு 20 நிமிட இடைவேளையில், 20 அடி தள்ளி இருக்கும் பொருளை 20 நொடிகள் பார்த்தால், கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். அதேபோல், ஓர் இடத்தில் அமர்ந்து, 2 நொடிகள் கண்களை மூடி, பின்னர் திறக்க வேண்டும்.
  • வெயிலில் சென்றுவந்ததும், உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்பநிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே கண்ணையும் முகத்தையும் தண்ணீரால் கழுவவேண்டும்.
  • கண்ணை சிமிட்டுவது போன்று, ஒரு கண்ணை மூடி மறு கண்ணை திறப்பது என தினமும் 10 முறையாவது செய்வது கண்ணுக்கு நல்லது.
  • கேரட், முட்டைக்கோஸ், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகிய  பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகளை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Comment