மகிழ்ச்சி தரும் உடல் ஓவியம்

Image

கலர் கலரா வரையுறாங்க



ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக, ஓவியக்கலை பண்டையக்காலம் தொட்டு இன்றுவரை மதிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. சுவர், காகிதம், ஓலை, துணி போன்றவற்றில் வரையப்பட்ட ஓவியம், இப்போது மனித உடலில் வரையும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஆம், இன்றைய நாகரிக உலகில், உடல் ஓவியம் என்பது மிகப்பெரும் கலையாகும்.

தங்கள் உடலில் ஓவியம் வரைந்துகொண்டு அதை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்காக உடலில் வர்ணம் தீட்டிக்கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள். வர்ணம் என்றாலே மகிழ்ச்சி என்று தான் அர்த்தம்.


இதுகுறித்து சென்னை பெருங்குடியைச் (கல்லுக்குட்டை) சேர்ந்த பிரபல ஜே.கே. டாட்டூஸ் மற்றும் ஃபேஸ் பெயிண்டிங் செய்துவரும் ஓவியரான ஆர். ஜெகன்குமாரைச் சந்தித்துப் பேசினோம். “முகத்தில் ஓவியம் வரைவது என்பது தற்போது ஃபேஷனாக இருக்கிறது. முகத்தில் மட்டுமல்லாது சிலர் உடல் முழுவதுமே வரைந்துகொள்கிறார்கள். இன்னும் சிலரோ சிம்பிளாக கை, கால், கழுத்துப் பகுதிகளில் வரைந்துகொள்கின்றனர். இந்த, ஓவியம் வரைவதால், யாருக்கும் அலர்ஜி ஏற்படுவதில்லை என்பதால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும் வேண்டியதில்லை.

இது, சாதாரண பெயிண்ட் கொண்டு வரையப்படுகிறது. இந்த வகை பெயிண்ட் அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது.  இப்போது  திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மால்கள், மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எங்களைப்போன்ற ஓவியர்களை வரவழைத்து தாங்கள் விரும்பியபடி முக ஓவியங்களை வரைந்துகொள்வது விழாவின் ஒரு பகுதியாகவே மாறி வருகிறது.  
இந்த ஓவியம், சாதாரணமாகத் தண்ணீர் பட்டாலே அழிந்துவிடும். அதனால், இதற்கு யாரும் எதிர்ப்பது தெரிவிப்பதில்லை.  கல்லூரி மாணவர்கள். அதிலும், பெண்கள்தான் இதுபோன்று அதிகம் வரைந்துகொள்கின்றனர்.  முகத்தில் ஓவியங்களை வரைந்துகொண்டு டிக்-டாக்கிலும் ஈடுபடுகின்றனர். அதனால், இந்த முக ஓவியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

தனி நபர் ஒருவருக்கு இதுபோன்று ஓர் ஓவியம் வரைந்தால் ரூபாய் 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் விசேஷ இடங்களுக்கு நாங்களே நேரடியாகச் சென்று ஓவியம் வரைந்தோமானால் ரூபாய் 2,000 கேட்போம். அங்கு, மூன்று மணி நேரத்திற்குள் எத்தனை பேருக்கு ஓவியம் வரைய முடிகிறதோ, அவ்வளவு பேருக்கு மட்டும் அந்தத் தொகைக்கு ஓவியம் வரைவோம். ஒருசிலர், தாங்களே ஓவியராக இருப்பதால், அவர்களே தங்களது குழந்தைகளுக்கு வீட்டிலேயே இதுபோன்ற ஓவியங்களை வரைந்து அழகு பார்க்கின்றனர்.

இயல்பாகவே குழந்தைகளுக்கு தங்கள் உடலில் ஓவியம் வரைவதற்கு பிரியப்படுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த உருவத்தை வரைந்துகொண்டு, அந்த  உருவமாகவே மாறி நடித்து விளையாடுகின்றனர். குழந்தைகள் விஷயத்தில் ஒரு விஷயத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, நாம் தேர்ந்தெடுத்த வண்ணப்பூச்சு குழந்தையின் தோலுக்கு அலர்ஜியை உண்டாக்காது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக, சிறிய அளவில் வண்ணப்பூச்சைச் சருமத்தில் தடவி  சிறிது  நேரம் காத்திருக்கலாம். அதுபோல் கண்கள், மூக்கு மற்றும் உதடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகுந்த கவனத்துடன் வண்ணம் தீட்ட வேண்டும். முடி இருக்கும் பகுதிகளில் வண்ணம் தீட்டுவது சற்றுச் சிரமமானது. காரணம், முடி இருப்பதால் நேர்த்தியாக ஓவியத்தை வரையமுடியாது.

கல்லூரி மாணவிகள் தங்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும், தோழிகளுக்கு அனுப்பி சந்தோஷப்படுவதையும் பார்ப்பதே பேரானந்தமாக இருக்கும். இது அனைவரையும் வசீகரிக்கும் கலை”  என்கிறார்.

பொழுது போகவில்லை என்று கவலைப்படுபவர்கள் மட்டுமின்றி, தங்களை வித்தியாசப்படுத்த நினைப்பவர்களுக்கும் உடல் ஓவியம் ஒரு நல்ல அடையாளம்.

Leave a Comment