கேள்வி : தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்கிறார்களே, காரணம் என்ன..? – கே.இந்துமதி, அருப்புக்கோட்டை
ஞானகுரு :
மனிதருக்கு திடீர் சிக்கல், எதிர்பாராத தோல்வி, மோசமான இழப்பு ஏற்படும் நேரத்தில் கடவுள் மீது சந்தேகம் வந்துவிடும். அதாவது, நான் கடவுளுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன், எத்தனையோ மனிதர்களுக்கு நன்மை செய்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு ஏன் இப்படி சோதனை வரவேண்டும், கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்று சந்தேகப்படுவார்கள்.
இப்படி சந்தேகப்படுபவர்கள் மேலும் மேலும் சிந்தனை செய்யத் தொடங்கினால், கடவுளின் இருப்பும் கடவுள் நம்பிக்கையும் உடைந்து போய்விடும். ஏனென்றால் மனிதன் உருவாக்கிய ஒரு பிம்பமே கடவுள் என்ற உண்மை புரிந்துவிடும்.
அப்படியொரு நிலை ஏற்படுவது ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஆபத்து. அதனாலே சூது கவ்வும் தர்மம் வெல்லும் என்று பொய் சொல்லி கவலையில் இருப்பவனிடம் போலி ஆறுதலைத் திணிப்பார்கள். ‘தர்மம் தலை காக்கும்’, ‘தெய்வம் நின்று கொல்லும்’, ‘நல்லவர்களை கடவுள் சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார்’ போன்ற எல்லாமே போலி நம்பிக்கைகள். மனிதரின் ஒவ்வொரு செயலுக்கும் அவரே பொறுப்பு, கடவுளுக்கு மனிதரிடம் எந்த வேலையும் இல்லை.