கேள்வி: வாழ்வில் ஜெயிப்பதற்கு கல்வி அறிவு மட்டும் போதுமா? – ஏ.சுவாதி மணிகண்டன், சூலூர்.
ஞானகுரு :
கல்வி என்பது அறிவு. ஏதேனும் ஒரு துறையில் தேர்ந்த அறிவு பெறுவதற்கு கல்வி உதவுகிறது. இந்த அறிவை மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவருக்கு வாழ்க்கையில் உயர்வு கிடைப்பது எளிது. அதேநேரம், ஆசைப்படும் துறையை கல்வியாக கற்பது மிகவும் சிறப்பான ஒன்று. பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்திற்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததும், அதற்காக சினிமா கல்லூரியில் சேர்ந்து பயின்றது தான் அவரது உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. எல்லோரும் இன்ஜினியரிங் கற்கிறார்கள், டாக்டர் ஆகிறார்கள் என்பதற்காக கல்வி கற்பவர்கள் வாழ்நாள் முழுக்க ஒரு சம்பளக்காரர்களாக வாழலாமே தவிர, அந்த துறையின் உச்சத்தை அடைய மாட்டார்கள்.
இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வேலையில் திருப்தி இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் வேலை செய்யும் துறையில் போதிய அறிவும் ஆர்வமும் இல்லாதது தான். அதேநேரம் கல்வி இல்லாமலும் உயர்வும் வெற்றியும் கிடைக்கவே செய்கிறது. இதற்கு அதீத ஆர்வமும் திட்டமிட்ட உழைப்பும் வேண்டும். வாழ்க்கையை நகர்த்துவதற்கு கல்வி அறிவு குறைவாக இருந்தாலே போதும். வாழ்க்கையை ஜெயிப்பதற்கு கல்வி அறிவைத் தாண்டியும் ஆர்வம் வேண்டும்.