டாஸ்மாக்கை மூடுங்க. 10 லட்சம் குடுங்க

Image

ஸ்டாலினுக்கு எதிராக திருமா போர்க்கொடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டது ஆதி திராவிடர் மக்களுக்குத் தான். ஆகவே, நேரடியாக அங்கு சென்று ஆறுதல் கூறினார் திருமாவளவன். அதேநேரம், டாஸ்மாக்கை மூட வாய்ப்பில்லை என்று கூறிய ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் வெடி விபத்துக்கும் 10 லட்சம் இழப்பீடு கேட்டு ஆவேசம் காட்டியிருக்கிறார்.

இது குறித்து திருமாவளவன், ‘’கள்ளச் சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்புகளை விட டாஸ்மாக் மூலமாக சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தை பெருமளவில் சேதப்படுத்துகின்றன. இளம் தலைமுறையினர் ஆற்றல் இழந்து பலியாகி வருகின்றனர்.

தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும். கள்ளச்சாராயம் விற்ற ஓரிருவர்களை கைது செய்வது கவனக்குறைவான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது போதுமான நடவடிக்கை அல்ல. பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும். அது திமுகவிற்கு பெரிய அளவிலே வெகு மக்களுடைய செல்வாக்கை பெருக்கும். குறிப்பாக தாய்மார்கள் பெரிய நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.

கள்ளக்குறிச்சியில் நான் சென்று மக்களிடம் கேட்டபோது ‘கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள்’ என்று மக்கள் கூறவில்லை. “டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுங்கள்” என்றுதான் கோரிக்கை வைத்தனர். அரசு மதுபானக் கடைகளை படிப்படியாக மூட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளில் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். பல லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடாக அது அமையும்’’ என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம் என்பது ஏற்க முடியாது, அவர்களுக்கும் 10 லட்சம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஸ்டாலின் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துவதற்கு திருமாவளவன் திட்டமிட்டுவது, அடுத்த கட்ட அரசியல் நகர்வாகவே அனைவரும் பார்க்கிறார்கள். கூட்டணியை உடைப்பாரா திருமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Comment