மனசுக்கும் உடம்புக்கும் ஆர்ட் தெரபி

Image
  • ஓவியர் லோகு ராமசாமி

வர்ண ஓவியங்கள் பார்வைக்கு இதமளிப்பது மட்டுமின்றி, மனிதர்களின் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களை விட, ஆழ்ந்து யோசிக்க  வைக்கும் நவீன ஓவியங்களுக்கு அடர்த்தி அதிகம். அது, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு அனுபவங்களைத் தரும் என்கிறார் லோகு ராமசாமி. அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவந்தாலும் தமிழ் நாட்டின் கிராம மரபுகளையும், கலாச்சாரத்தையும் மறக்காமல் தொடர்ந்து வண்ணமாக்கி வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து திரும்பும் லோகுவிடம் பேசினோம்.

ஓவியத்தின் பக்கம் எப்படி திரும்பினீர்கள்..?

லோகு :

மதுரையில் நான் படித்த 1990களில் கலை, இலக்கியம், அரசியல், நாடகம், ஓவியம், சினிமா என்று அனைத்து துறைகளிலும் ஒரு புதிய எழுச்சி உருவானது. அப்போது நிஜ நாடக இயக்கம், நவீன கவிதைகள் என்று புதுப்புது முயற்சிகள் அரங்கமேறின.

எனக்கு அப்போது ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. மேலமாசி வீதியில் இயங்கிவந்த ரஃபீக் கலைக்கூடம் என்னைப் போன்ற பலருடைய ஆர்வத்துக்கு உரம் போட்டது. நான் ஓவியத்தை முறைப்படி கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் வரைந்து வரைந்து என்னை நானே மெருகேற்றிக் கொண்டே இருந்தேன். 1992ம் ஆண்டு என் ஓவியம் ஒன்று பிரான்ஸில் நடைபெற்ற இன்டர்நேஷனல் ஓவியக் கண்காட்சிக்குத் தேர்வானது. அப்போது இந்தியாவிலிருந்து என்னுடைய ஓவியமும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஓவியரின் படமும் மட்டுமே தேர்வு பெற்றன. இந்த அங்கீகாரத்தை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அத்தனை நாளிதழ்களும், இதழ்களும் கொண்டாடின.

இந்த வெளிச்சம் காரணமாக தொடர்ந்து நானும் என்னைப் போன்ற ஓவியர்களும் சேர்ந்து நிறைய வரையவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று காட்சிப்படுத்தவும் செய்தோம். தொடர்ந்து ஓவியத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டதால் முழுநேர ஓவியனாக மாறி நிறைய வரையத் தொடங்கினேன்.  

அந்த காலகட்டத்தில் ஒரு அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஃபீல்ட் அசிஸ்டென்ட், டிரான்ஸ்லேட்டர் என்றெல்லாம் பகுதிநேரமாக பணியாற்றி வந்தேன். அங்கு படிக்க வந்த அமெரிக்க மாணவி ஒருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அது காதலாக உருமாறியது. அவரையே திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்குச் சென்று பணியாற்றி வருகிறேன். இப்போது எனக்கு 3 பிள்ளைகள். அனைவருக்கும் தமிழில் பெயர் வைத்திருக்கிறோம். மருத்துவப் பணியுடன் ஓவியக் கண்காட்சிகளையும் தொடர்ந்து நடத்திவருகிறேன்.

உங்கள் ஓவியத்தின் தனித்துவம் என்று எதை சொல்வீர்கள்..?

லோகு :

தாந்திரீகத்தின் அடிப்படையிலான குறியீடுகள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். பெளத்தம், இந்து மத வழிபாடுகளில் குறியீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது வழிபாட்டில் சதுரம், முக்கோணம், செவ்வகம் போன்ற குறியீடுகள் சடங்கு, சம்பிரதாயங்களில் முக்கியப் பங்கு வகிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். கோயில், வீடுகளில் செப்புத் தகடுகள், யந்திரங்களைப் பயன்படுத்தி சக்தி வழிபாடு நடக்கின்றன. கிராம கோயில்கள், திருவிழாக்கள், குலதெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை ஓவியமாக கொண்டுவருவதை என்னுடைய பாணியாக வைத்திருக்கிறேன். தாந்திரீகக் குறியீடுகளின் ஒழுங்குமுறையை எல்லா பொருட்களிலும், உயிர்களிடமும் காண முடியும். நம் மனித உடலும் ஒரு சிறப்பான தாந்திரீக யந்திரம் என்றே சொல்லலாம்

இதற்கு எந்த வகையிலான வண்ணங்களைப் பயன்படுத்துகிறீர்கள்..?

லோகு :

தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை விட செம்புக்கு தமிழர்கள் வாழ்வில் தனியிடம் இருக்கிறது. செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதையும், செம்புத் தகடுகளில் குறியீடுகள் செய்து பயன்படுத்துவதையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே, ஓவியத்துக்குள் இந்த செம்புத் தகடுகளைக் கொண்டுவருவதற்கான பரிசோதனை முயற்சிகளைத் தொடங்கினேன்.

ஆரம்பகாலத்தில் ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், ஆயில் பேஸ்ட் ஸ்கல்ப்சர் என்று பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்தேன். எதிலும் திருப்தி கிடைக்காத  காலகட்டத்தில் போட்டோ ஸ்டூடியோக்களில் கலர் கரெக்‌ஷன் செய்வதற்கு பிரத்யேக கலர் இங்க் பயன்படுத்துவதைப் பார்த்தேன். அதனை என்னுடைய ஓவியத்தில் பயன்படுத்தி வரைந்தபோது, எனக்கு ஒரு புதிய உலகத்திற்கு கதவு திறந்தது. வாட்டர் கலரில் போட்டோ ஸ்டூடியோ மையைக் கலந்து வாட்டர் பேஸ்ட் ஓவியத்துக்கு மிகச்சிறந்த வரவேற்பும் கிடைத்தது.

இந்த வாட்டர் பேஸ்ட் ஓவியத்தில் எப்படியாவது காப்பரை சேர்க்க நினைத்தேன். நீண்ட காலம் நடந்த பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு காப்பர் மெட்டலை நூல் போன்றும் புள்ளியாகவும் ஓவியத்தில் இணைக்கவும், தைக்கவும் செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்தேன். காகிதத்தில் ஒட்டிக்கொள்வதற்காக காப்பரை சூடாக்கும்போது, ஓவியம் மேலும் புதுமையாகிவிடுகிறது.

ஓவியத்துக்கும் உங்கள் மருத்துவத் துறைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது..?

லோகு :

ஆர்ட் தெரபி சிகிச்சை முறைகள் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பள்ளி வயதிலேயே ஓவியத்தை பாடத்திட்டத்தில் கொண்டுவருகிறார்கள். ஓவியம் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கிறது. பொறுமை, நம்பிக்கை, கூர்மையான பார்வை, பிரச்னைகளுக்குத் தீர்வு, நேர்மறை சிந்தனை, மன அமைதி, மனநிறைவு போன்றவற்றை ஓவியத்தின் மூலம் பெற்றுவிட முடியும்.

அலைபாயும் மனம் கொண்டவர்களை ஒருமுகப்படுத்துவதற்கும், அவர்களுக்கு ஞாபகசக்தியைக் கூட்டுவதற்கும் ஓவியத்தை தெரபியாகப் பயன்படுத்துகிறார்கள். மனதை அமைதியடையச் செய்யும் தன்மை ஓவியத்துக்கு உண்டு. ஆட்டிஸம் பாதித்தவர்கள், மனநலம் தடுமாறுபவர்களுக்கும் ஓவியம் வரையச் சொல்வதன் மூலம் பாடம் கற்பித்துவிட முடியும். வார்த்தைகளில் தரமுடியாத ஆறுதலை, நம்பிக்கையை ஓவியம் மூலம் கொடுத்துவிட முடியும்.