கவுன்சிலிங் கதைகள்
அம்மா வைதேகியை அழைத்துவந்தார் அரவிந்தராஜன்.
மதுரையில் பணியாற்றிய அரவிந்த், சமீபத்தில் பெங்களூருக்கு மாறுதலாகிப் போனதில் இருந்தே அவர் வீட்டில் குழப்பம். அடிக்கடி மயக்கமாகி விழுந்துவிடும் அம்மா, இப்போது மகனிடமும், கணவர் பழனியப்பனுடனும் சரிவரப் பேசுவதில்லை. தனிமையில் அழுவது, திடீரென எங்காவது போய் திக்குத்தெரியாமல் விழிப்பதுமாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நண்பர் மூலம் எங்கள் மையத்துக்கு அம்மாவை அழைத்துவந்தார் அரவிந்தராஜன்.

தனிமையில் வைதேகி வாயை திறக்கவே இல்லை. ‘எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை… நல்லாத்தான் இருக்கேன்’ என்று திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் படித்த பள்ளி, அவரது தந்தை என்று சிறு வயது ஞாபகங்களைக் கிளறியதும், கொஞ்சம் பிரகாசமானார். அதன்பிறகு அவரிடம் பேசுவதும், பிரச்னைகளை அறிவதும் சுலபமாகிப் போனது.
கல்லூரி முடித்து வேலைக்குச் சென்ற வரையிலும் அரவிந்தனை கைக்குள் வைத்தே வளர்த்திருக்கிறார் வைதேகி. அரவிந்தனை நன்றாக கவனிக்கவேண்டும் என்பதற்காக ஒரே பிள்ளையுடன் நிறுத்திக்கொண்டார். அரவிந்தனுக்கு நல்ல சாப்பாடு, நல்ல படிப்பு, சிறந்த டியூஷன் என்று தகுதிக்கு மீறி செலவழித்து மகனுக்காகவே வாழ்ந்திருக்கிறார். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த பழனியப்பன் இவர்கள் வழியில் தலையிட்டதே இல்லை.
அரவிந்தனுக்கு புரமோஷன் கிடைத்ததுமே, பெற்றோரை பெங்களூருக்கு வரச்சொல்லி கேட்டான். ஆனால், அந்த முடிவில் வைதேகிக்கும் பழனியப்பனுக்கும் உடன்பாடு இல்லை.
பெங்களூருக்கு அரவிந்தன் கிளம்பிய தினத்தில் விடிய விடிய அழுது தீர்த்திருக்கிறார் வைதேகி. ‘சின்னப் பிள்ளை மாதிரி அழாதீங்க..’ என்று சமாதானம் சொன்ன அரவிந்தன், அவனது நண்பர்களிடம், ‘இனி மதுரையை மறந்திட வேண்டியதுதான், நீங்க பெங்களூருக்கு வாங்க’ என்று பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறான்.
தன்னுடைய அழுகையை கொஞ்சமும் மதிக்காமல் அரவிந்தன் ஊருக்கு குஷியுடன் கிளம்பியதில் வைதேகிக்கு பேரதிர்ச்சி. தன்னுடைய பாசத்தை, தியாகத்தை மகன் மதிக்கவேயில்லை என்ற வேதனை. சாப்பிடப் பிடிக்காமல், யாருடனும் பேசப் பிடிக்காமல் தனிமையிலிருந்து உடலைக் கெடுத்திருக்கிறார். தனக்கென்று யாரும் இல்லை, தான் ஒரு அனாதை, இனியும் எதற்கு வாழ வேண்டும் என்றே கேட்டார் வைதேகி.
‘’டெஸ்ட்ல எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஏன் மயக்கம் வருதுன்னு எனக்கு நிஜமா தெரியலை, ஆனா, நான் நடிக்கிறதா சொல்றாங்க..’’ என்றார் ஆற்றாமையுடன்.
‘’யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க… நீங்களா தப்பா புரிஞ்சுக்கிறீங்க..’’
‘’இல்லை, இந்த முறை மயக்கம்னு சொன்னதும் அரவிந்த் பெருசா ரியாக்ட் செய்யலை. நான் உசுரோட இருக்கிறது எல்லோருக்கும் இடைஞ்சலா இருக்குது…’’
‘’நீங்க மனசுக்குள்ள எப்படி வேதனைப்படுறீங்கன்னு புரியுது… ஆனா, நீங்க மட்டும்தான் இப்படி வேதனைப்படுறதா நினைக்காதீங்க… ஒரு பிள்ளை வளர்க்கிற நிறைய அம்மாக்கள் இப்படித்தான் கஷ்டப்படுறாங்க…’’
‘’ஆனா… என்னை மாதிரி யாரும் உசுரைக் கொடுத்து வளர்த்திருக்க மாட்டாங்க..’’
‘’நிஜமா இருக்கலாம்… ஒரு அம்மாவா உங்க கடமையை சிறப்பா செஞ்சிருக்கீங்க. அதே நேரத்துல அரவிந்த் எதிர்காலத்தை பார்க்க மறுக்குறீங்க…’’
’’அப்படின்னா, அரவிந்த் செய்றது சரின்னு சொல்றீங்களா… அவனுக்கு எந்த முடிவும் தெளிவா எடுக்கத் தெரியாது. அங்கே அழகான பொண்ணுங்க நிறைய பேர் இருப்பாங்க. அவனை மயக்கி கல்யாணம் முடிச்சுட்டாங்கன்னா… குடுக்குற சம்பளம் போதும்னு மதுரையில இருக்கச் சொல்லுங்க…’’ என்றாள்.
அவருடைய பிரச்னையை நேரடியக சுட்டிக்காட்ட விரும்பினேன். செல்போனில் இருந்து, கூட்டுக்கு வெளியே ஏக்கத்துடன் நிற்கும் ஒரு புறாவின் படத்தைக் காட்டி… அதுகுறித்து பேசினேன்.
‘’கூண்டில் இருந்த குஞ்சுகள் திடீரென காணாமல் போய்விட்டால், தாய் புறா பரிதவிக்கிற வேதனையை எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம்னு சொல்வோம். அந்த குஞ்சுகளை மனிதர்கள் எடுத்திருக்கலாம் அல்லது பாம்பு சாப்பிட்டிருக்கலாம். குஞ்சுகளுக்கு என்னாச்சுன்னு தெரியாமல் அந்த புறா சில மணி நேரம் பரிதவிக்கும். கூட்டை சுற்றிச்சுற்றி வரும். பதறி பதறி எங்கெங்கோ பறந்து திரும்பிவந்து பார்க்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் இல்லாமையை ஏற்றுக்கொள்ளும். அதன் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடும். அந்த பறவையின் நிலையில்தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். நீங்களும் நிஜ உலகத்துக்குத் திரும்பணும்….’’
அமைதியாக இருந்த வைதேகியின் கண்கள் கலங்கி கண்ணீர் சிந்தியது.
‘’இதனை ஏற்றுக்கொள்வது கடினமான விஷயம்தான். ஆனால், மாறத்தான் வேண்டும். யாருடைய துணையும் இல்லாமல் ஒரு மகனை நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்கள். அதேபோல் இனி உங்கள் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும். இன்னமும் உங்கள் நிழலில் அரவிந்தன் இருக்கவேண்டும் என்று நினைப்பது சரியில்லை. அவராக முடிவுகள் எடுப்பதற்கும், தவறுகள் செய்தாலும் அவரே திருத்துவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்போது, அவருக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். அவருடைய வாழ்க்கையை அவர் வாழட்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்…’’
‘’ஏன் அவனுக்கு எங்கள் மீது அன்பு இல்லை..?’’
‘’அன்பு இருப்பதாலே உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறார். உங்களை பெங்களூரு அழைக்கிறார். நான் கேட்பதற்கு மனதை தொட்டு உண்மையான பதிலை சொல்லுங்கள்… உங்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் தந்தைக்கும் தாய்க்கும் எத்தனை தூரம் அன்பு கொடுத்தீர்கள்..?’’
‘’திருமணம் முடித்ததும் வீட்டுக்காரரை கவனிக்கவே நேரம் இல்லை, இவன் பிறந்த பிறகு கணவரையே நான் சரியாக கவனிக்கவில்லை. இவன் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். அதனால் என் பெற்றோரை கவனிக்கவில்லை…’’
‘’உங்கள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருந்த உங்கள் தாயும் இப்படித்தானே வேதனைப்பட்டிருப்பார்…’’
‘’அந்த கர்மாதான் என்னை தாக்குகிறது என்கிறீர்களா..?’’
‘’இல்லவே இல்லை. எல்லா காலங்களிலும் பிள்ளை மீது பெற்றோர் மிகுந்த அன்பு வைக்கிறார்கள். அந்த பிள்ளை அவர்களுடைய பிள்ளை மீதுதான் மிகுந்த அன்பு வைக்கிறார்கள். அப்படித்தான் நீங்கள் இருந்தீர்கள். உங்கள் பிள்ளையும் இருப்பார். அனைத்து மனிதர்களும் இருப்பார்கள்…’’
வைதேகி இப்போது அழாமல், ’’அடுத்து நான் என்ன செய்வது என்றே புரியவில்லை, என் பிள்ளை இல்லாமல் நான் என்ன செய்யமுடியும்..?’’
‘’முதலில் ஆரோக்கியத்திற்கு நன்றாக சாப்பிடுங்கள். இத்தனை நாட்களும் பிள்ளைக்காக வாழ்ந்தது போதும், இனி உங்களுக்காக வாழுங்கள்..’’
‘’எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது..?’’
‘’இனி பொருளாதார அழுத்தம் இல்லாத வாழ்க்கை இருக்கிறது. உங்களிடம் இருக்கும் நிறைவான அனுபவங்களை முழுமையாக பயன்படுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த வகையில் எழுந்தரியுங்கள், சாப்பிடுங்கள், உடுத்துங்கள், பயணியுங்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக தன்னுடைய வேலையை விடுவதற்கு உங்கள் கணவர் தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட மனிதருக்கும் மகிழ்ச்சி கொடுங்கள். இருவரும் புதிய தம்பதி போன்று வாழ்க்கையைத் தொடங்குங்கள்..’’
‘’நாங்கள் பெங்களூரு போய் இருக்கலாமா..?’’
‘’அது உங்கள் விருப்பம். ஆனால், என்றாவது ஒரு நாள் அரவிந்தன் திருமணம் முடித்துக்கொள்வார், தனிக்குடித்தனம் போவார், அவர் குடும்பத்துக்காக வாழத் தொடங்குவார்… அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நிம்மதியான வாழ்வுக்கு நல்லது. உங்கள் அமைதியும் மகிழ்ச்சியும்தான் அரவிந்தனுக்கும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தரும்…’’ என்றேன்.
இப்போது வைதேகிக்கு ஓரளவு தெளிவு வந்திருந்தாலும், இது முழு புரிதல் இல்லை. தனிமையில் மீண்டும் அவர் தடுமாறலாம். ஆகவே, அவர் மனதை திசை மாற்றுவதற்கு சில பயிற்சிகளும், அடுத்து வரும்போது எழுதி வருவதற்கு சில வீட்டுப் பாடங்களும் கொடுத்து அனுப்பினேன். நாலைந்து முறை வந்த வைதேகி அதன் பிறகு வரவில்லை.
ஆம், அவருக்கு வாழ்க்கை புரிந்துவிட்டது. இப்போது மூன்று பிள்ளைகளுக்கு மாலையில் டியூஷன் எடுக்கிறார். கணவருடன் சுற்றுலா செல்கிறார். அவ்வப்போது பெங்களூரு போய் வருகிறார். இன்ஸ்டாகிராம் பார்த்து பொழுதைக் கழிக்கிறார். மகன் விரைவில் அமெரிக்கா போகப்போவதை எண்ணி மகிழ்கிறார். இதுதான், அம்மா.
- எஸ்.கே.முருகன்,
மன வள ஆலோசகர்.
தொடர்புக்கு : 9840903586