சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான நாள்

கவிஞர் வைரமுத்து சொல்லும் செய்தி

சர்க்கரை நோயை வருவதற்கு முன்பாக கண்டறிந்து தடுப்பதை நோக்கமாக கொண்டு அதன் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்சுலினை கண்டுபிடித்த சர் ஃபிரடெரிக் பாண்டிங் பிறந்த தினமான நவ.14ஆம் தேதி, 1991-ம் ஆண்டு சர்வதேச நீரிழிவு சம்மேளனம் (IDF) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் உலக சர்க்கரை நோய் தினமாக அறிவிக்கப்பட்டது 2026ஆம் ஆண்டுக்கான உலக நீரிழிவு தினம், “நீரிழிவு நோய்க்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது

உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் நமது நாடு முன்னிலையில் இருக்கிறது. முன்பெல்லாம் முதுமைப் பருவத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த இந்நோய், தற்போது வயது வித்தியாசமின்றி இளமைப் பருவத்திலேயே ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டின் மக்கள் தொகையில் 5 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.

​வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்நோய்க்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. ​உடல் உழைப்பின்மை ​நவீன காலத்தில் நாம் செய்யும் தொழிலின் தன்மை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, ​முறையற்ற மற்றும் துரித உணவுப் பழக்கவழக்கங்கள் ​அதிகப்படியான மன அழுத்தம் ​சுற்றுச்சூழல் மாற்றங்கள் ​உடல் பருமன் மற்றும் அசைவற்ற வாழ்க்கை நிலை ​ஆகிய காரணங்களால்தான் சர்க்கரை நோய் நம்மை எளிதில் தாக்குகிறது.

சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், நோய் வருவதற்கு முன்பே தற்காத்துக்கொள்ளவும் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ​ ​நமது உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்க, அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக்கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டும். ​அதிகாலையில் விழித்தெழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

​தினமும் தவறாமல் நடைப்பயிற்சி, யோகா மற்றும் மன ஒருமைப்பாட்டிற்கான தியானம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். ​உரிய நேரத்தில், அளவான மற்றும் சத்தான உணவை உண்ண வேண்டும். ​அன்றாட உணவில் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் மற்றும் நமது பாரம்பரிய சிறுதானிய உணவுகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ​ ​

இன்றைய நீரிழிவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் பதிவு அனைவருக்கும் தைரியம் தரக்கூடிய ஒன்று. இதோ அவரது பதிவு.

’’இன்று உலக நீரிழிவு நாள் இந்தியாவில் நீரிழிவு 20விழுக்காடு என்கிறார்கள் ‘சக்கர’வர்த்திகளே சலனப்படாதீர்கள் நீரிழிவு என்பது நோய் அல்ல; குறைபாடு உணவு மருந்து உடற்பயிற்சி மூன்றும் இருந்தால் முறியடிக்கலாம் நீரிழிவு எனக்கும் உள்ளது என்று சொல்லத் தயக்கமில்லை எனக்கு நீரிழிவுதான் எழுத்தாளர்களின் முதல்விருது.

அது கண்டறியப்பட்ட பின்புதான் உடல்நலம் குறித்து விழிப்பானேன் கணையம் கல்லீரல் கண் குறித்து அறிவு பெற்றேன்; வாழ்க்கை முறையை ஒழுங்கு செய்தேன் உண்ணும் பொருளில் என்ன உள்ளது என்று எண்ணி உண்ணுங்கள் அஞ்ச வேண்டாம் யாரும். மாவுச்சத்து குறைத்துப் புரதத்துக்கு மாறுங்கள் நார்ச்சத்து மிக்க பொருளை நாடி உண்ணுங்கள்.

ஆப்பிள் பப்பாளி அளவோடு கொள்ளுங்கள் முக்கனியும் வேண்டாம்; வேறு எக்கனியும் வேண்டாம் சுறுசுறுப்புதான் முதல் மருந்து நடக்க நடக்க நன்மை நடக்கும் நீரிழிவு இல்லாதவர்கள் அறுபதில் மறைவதும் உண்டு; நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு தொடுவதும் உண்டு வாழ்த்துக்கள்; வாழுங்கள்’’ என்கிறார்

Leave a Comment