ஞானகுரு பதில்
கேள்வி : ஆலய வழிபாடு எப்படி உருவானது..? ஆலயம் கட்டுவதற்கு உதவினால் நன்மை கிடைக்கும் என்பது உண்மையா.?
- பி.சாந்தி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
ஆன்மிகத்துக்கு அடிப்படை பயம். தீ, மின்னல், மழை, பாம்பு போன்றவை ஆதிகால மனிதருக்குப் பயம் கொடுத்தது. இந்த பயத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை வந்தது.
கடவுள் தனக்கும் தன்னை சேர்ந்தவருக்கும் முழு நேரமும் அருள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆலயத்தை உருவாக்கி, அதற்குள் கடவுளை கட்டிப் போட்டார்கள்.
இந்த சுயநலம் அதிகரிப்பதாலே தெருவுக்குத் தெரு ஆலயங்கள் முளைக்கின்றன. கோயில் கட்ட பணம் கொடுத்தால் நன்மை நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
கோயில் கட்டுவதற்கு பணம் கொடுத்தால் நல்லது நடக்கும் என்பது உண்மை. பணம் கொடுப்பவருக்கு நன்மை நடக்கும் என்பது உறுதியில்லை. ஆனால், ஆலயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இதனால் நிச்சயம் நிறைய நன்மை கிடைக்கும்.
அவர்கள்தான் வருமானத்தைப் பெருக்குவதற்கு பிரதோஷம், நட்சத்திரப் பூஜை, கும்பாபிஷேகம் என்று விதவிதமாக காரணம் சொல்லி பணம் கேட்கிறார்கள். இவர்கள் வீசும் ஆசையைத் தூண்டிலில் மாட்டி ஏமாந்துவிடாதீர்கள்.
உடம்புதான் ஆலயம் என்று உண்மை சொன்ன சித்தர்களை நம்புங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு பணம் செலவழியுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
