டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம், ஹோமியோபதி மருத்துவர்
மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான எலும்பரிப்பு நோயை பெண்கள் அறியவேண்டியது அவசியம்.
நம் இந்தியாவில் 50 வயதைக் கடந்த பெண்களில் சுமார் 40 சதவீதம் பேர் எலும்பரிப்பு நோயினால் அவஸ்தைப்படுவதாக ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. மார்பகப் புற்றுநோய், இதய நோய், மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாத விலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம், அடைவதும் முக்கிய காரணம்.

எலும்புகள் வலுவாக இருப்பதுபோல் வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவை பலவீனமடைந்து கொண்டிருக்கலாம். சிறிய தவறி விழுதல்கூட எலும்பு முறிவை ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய ஒரு நோய்தான் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பரிப்பு நோய்.
எலும்பு ஏன் அரிக்கிறது
எலும்புகளின் அடர்த்தி குறைந்து, அவற்றின் உட்புறக் கட்டமைப்பு பலவீனமடைவதுதான் இந்த நோயின் அடிப்படை. உடலில் உள்ள எலும்புகள் உயிரற்ற பொருட்கள் அல்ல. அவை தொடர்ந்து பழைய திசுக்களை அகற்றி, புதிய எலும்புத் திசுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள திசுக்கள்.
இளம் வயதில் புதிய எலும்பு உருவாகும் வேகம் அதிகமாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது இந்தச் சமநிலை மாறுகிறது. பழைய எலும்புகள் அகற்றப்படும் வேகத்திற்கு இணையாகப் புதிய எலும்புகள் உருவாகாதபோது, எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. இதனால் எலும்புகள் தங்களுடைய வலிமையை இழந்து, எளிதில் முறியும் தன்மையைப் பெறுகின்றன.
இந்த நோயின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், ஆரம்பக் கட்டத்தில் பெரும்பாலும் எந்த அறிகுறியும் இருக்காது. உடலில் வலி இல்லை என்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று நினைத்துவிடக்கூடாது.
நோய் தீவிரமடைந்த பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகள்:
- சிறிய அளவில் கீழே விழுந்தால்கூட எலும்பு முறிவு ஏற்படலாம். இருமினாலும், சிரித்தாலும்கூட எலும்பு முறியலாம்.
- முதுகெலும்புகள் பலவீனமடைந்து நசுங்கலாம்.
- உயரம் படிப்படியாகக் குறையலாம்.
- முதுகு கூன் விழுந்ததுபோல் தோற்றமளிக்கலாம்.
- இடுப்பு எலும்பு முறிவு ஏற்படலாம்.
- மணிக்கட்டு மற்றும் முதுகெலும்புகளில் முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
குறிப்பாக வயதானவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால், அறுவை சிகிச்சை, நீண்டகால படுக்கை ஓய்வு, நடமாட்டக் குறைவு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படலாம்.
எலும்பரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போது கூட எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். சாதாரண சுளுக்கு கூட எலும்புமுறிவுக்கு காரணமாகி விடுகிறது. எலும்பு அரிப்பு வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோய் அல்ல. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். இருப்பினும் சிலருக்கு ஆபத்து அதிகம்.
முக்கிய ஆபத்துக் காரணிகள்
- வயது ஏறும்போது எலும்புகளின் அடர்த்தி இயல்பாகக் குறையத் தொடங்குகிறது.
- பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு அடர்த்தி வேகமாகக் குறையலாம்.
- உணவில் போதுமான கால்சியம் இல்லாதது எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி அவசியம்.
- நீண்டகாலம் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது எலும்புகளின் வலிமையைக் குறைக்கலாம்.
- பெற்றோருக்கு இடுப்பு எலும்பு முறிவு அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் ஆபத்து அதிகரிக்கலாம்.
- மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு ஆபத்து அதிகம்.
- புகைபிடித்தல் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
- நீண்டகாலம் ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவது எலும்பு அடர்த்தியைக் குறைக்கலாம்.
- தைராய்டு பிரச்சினைகள், முடக்கு வாதம், குடல் வழியாக ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவை காரணமாகலாம்.
ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இதனை சைலன்ட் கில்லர் நோய் என்கிறார்கள். நோய் பாதிப்பு அதிகரிக்கும் நேரத்தில் முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படும். சிறிய விபத்திலேயே எலும்பு முறிவு ஏற்படும். உயரம் குறைந்துவிடும். முதுகு வளைந்து கூன் விழுவது, முதுகெலும்புகள் நசுங்குவதால் திடீரெனக் கடுமையான முதுகுவலி ஏற்படலாம். எல்லா முதுகுவலியும் எலும்பு அரிப்பால் வருவதில்லை. அதேபோல் வலி இல்லாதவர்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் இருக்கலாம். எனவே அறிகுறிகளை மட்டும் வைத்து இந்த நோயைக் கண்டறிய முடியாது.
இந்த நோயைக் கண்டறிய மிகவும் முக்கியமான பரிசோதனை டெக்ஸா ஸ்கேன். இது குறைந்த அளவு எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி எலும்புகளின் அடர்த்தியை அளவிடும் பரிசோதனை. பொதுவாக இடுப்பு எலும்பு, முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
டெக்ஸா ஸ்கேன் பரிசோதனையில் டி.ஸ்கோர் முடிவுகள் -1 முதல் -2.5 வரை இருப்பது ஆஸ்டியோபினியா Osteopenia எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு ஆகும். -2.5 அல்லது அதற்குக் கீழ் இருப்பது ஆஸ்டியோபோரோசிச் Osteoporosis எனப்படும் எலும்பு அரிப்பு நோயாக கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பீடு மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சில நேரங்களில் மருத்துவர் ரத்தத்தில் கால்சியம், வைட்டமின் D, தைராய்டு, சிறுநீரகச் செயல்பாடு போன்றவற்றையும் பரிசோதிக்கச் சொல்வார். இவை எலும்பு பலவீனத்திற்கான காரணங்களைக் கண்டறிய உதவும்.
குணப்படுத்தும் வழிகள்
எலும்பு அரிப்பு நோய் கண்டறியப்பட்டுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டியதில்லை. சரியான சிகிச்சை மூலம் எலும்பு அடர்த்தியைப் பாதுகாக்கவும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். மருத்துவர்கள் நோயின் தீவிரம், வயது, எலும்பு அடர்த்தி, ஏற்கெனவே ஏற்பட்ட முறிவுகள் ஆகியவற்றைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.
இதற்கான மருந்துகள் எலும்புகள் உடைந்து சிதையும் வேகத்தைக் குறைக்கின்றன. எலும்பு இழப்பைக் குறைக்க உதவும் மருந்து. புதிய எலும்பு உருவாகும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்து. எலும்பு உருவாக்கத்தை அதிகரித்து, எலும்பு இழப்பையும் குறைக்க உதவும் மருந்து. மருந்துகளுடன் கால்சியம், வைட்டமின் டி மற்றும் உடற்பயிற்சியும் முக்கியம்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமல்லாமல் புரதம், வைட்டமின் டி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் தேவை. கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பன்னீர், கேழ்வரகு (ராகி), எள், பாதாம், முருங்கைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், எலும்புடன் சாப்பிடக்கூடிய சிறிய மீன்கள் உடலுக்கு நல்லது.
அதேபோல் போதிய அளவுக்கு வைட்டமின் டி கிடைப்பதற்கு பாதுகாப்பான அளவில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல், முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்பு நிறைந்த மீன்கள், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால் மற்றும் உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரதம் கிடைப்பதற்கு பருப்பு வகைகள், பயறு வகைகள், பால், முட்டை, மீன், இறைச்சி உடலுக்குத் தேவைப்படும். அதேநேரம், கால்சியம் மாத்திரைகள் அல்லது வைட்டமின் டி மாத்திரைகளைத் தாங்களாகவே அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. வயது, உணவுப் பழக்கம், உடல்நிலை, பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப மருத்துவர் அளவைத் தீர்மானிக்க வேண்டும்.
எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கு உணவு மட்டுமே போதாது. உடல் இயக்கமும் அவசியம். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டில் வழுக்காத தரை, போதிய வெளிச்சம், கைப்பிடிகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
ஏற்கெனவே எலும்பு பலவீனம் அல்லது முதுகெலும்பு முறிவு உள்ளவர்கள் குனிந்து நிமிரும் கடுமையான பயிற்சிகள், அதிக எடையைத் தூக்கும் பயிற்சிகளை மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையின்றிச் செய்யக்கூடாது.
பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு அடர்த்தி வேகமாகக் குறைகிறது. அதேபோல் ஆண்களுக்கும் வயது அதிகரிக்கும்போது எலும்பு அடர்த்தி குறைகிறது. குறிப்பாக 70 வயதுக்குப் பிறகு ஆண்களுக்கும் இந்த நோயின் அபாயம் அதிகரிக்கிறது.
ஆண்களிடம் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் குறைபாடு, புகைப்பழக்கம், நீண்டகால ஸ்டீராய்டு பயன்பாடு போன்றவையும் ஆபத்தை அதிகரிக்கலாம். எனவே எலும்பு அரிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் நோய் என்று நினைப்பது தவறு.
எலும்பு தேய்மானத்துக்கும் எலும்பு அரிப்புக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் ஒன்று அல்ல. எலும்பு அரிப்பில் எலும்பின் அடர்த்தி குறைகிறது. எலும்பு தேய்மானத்தில் மூட்டுகளில் உள்ள கருத்தெழும்பு தேய்கிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். முழங்கால் வலி இருப்பதாலேயே எலும்பு அரிப்பு இருக்கிறது என்று முடிவு செய்ய முடியாது. அதேபோல் எலும்பு அரிப்பு இருந்தாலும் மூட்டுவலி இல்லாமல் இருக்கலாம்.
எலும்பு அரிப்பு நோய் ஒரே நாளில் உருவாவதில்லை. பல ஆண்டுகளாகத் தெரியாமல் வளரக்கூடியது. எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகுதான் பலருக்கு இந்த நோய் இருப்பதே தெரியவருகிறது. ஆனால் சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தேவையான பரிசோதனைகள், உரிய மருந்துகள் ஆகியவற்றின் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
எலும்பரிப்பு நோய்க்கு ஹோமியோபதியில் Calcarea Carb, Arnica, Platina போன்ற நல்ல மருந்துகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் ஹோமியோபதியில் பிரத்யேகமாக பரிசோதனை செய்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படுவதால், வாழ்க்கை முறை மாற்றமடைந்து இயல்பாக வாழ வழி கிடைகிறது.
எலும்புகள் முறிந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, முறிவதற்கு முன்பே அவற்றின் வலிமையைப் பரிசோதித்துக் கொள்வதுதான் உண்மையான மருத்துவ முன்னெச்சரிக்கை.
தொடர்புக்கு : 9841108754
