வெண்புள்ளிகளுக்கு இயற்கை மருத்துவம்
வயதாகும் நேரத்தில் தோலில் நிறம் மாற்றம் ஏற்படுவது சகஜம் என்று அலட்சியம் காட்டுவது அவசியமில்லை.
உடலுக்குள் வரும் நோய் பிறர் கண்களுக்குத் தெரிவதில்லை. வலி, வேதனையை மறைத்துக்கொண்டு இயல்பாக இருப்பதுபோன்று நடிக்க முடியும். ஆனால், தோலில் ஒரு நோய், பிரச்னை, மாற்றம் வரும்போது மற்றவர்கள் கண்களுக்குத் தெரிந்துவிடும். எனவே, குழந்தை முதல் பெரியவர் வரை தோல் நோய்க்கு ரொம்பவே அஞ்சுகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு தோல் நோய் என்றாலே பெரும் கவலையாகிறது.
தோலில் என்ன மாற்றம் என்றாலும், அதாவது தோலில் ஏற்படும் அரிப்பு, தோல் உரிதல், தோல்களில் நிற மாற்றம் போன்றவை கடுமையாக மனதைப் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக வெண் புள்ளிகள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதற்காக உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சில வகை வெண்புள்ளி நோய்கள் மட்டுமே குணமாகின்றது. சில வகை வெண்புள்ளி நோய்கள் வாழ்நாள் முழுவதும் குணமாகாமல் நீடித்து துயரப்படுத்துகிறது.
தோலில் ஏற்படும் வெண் புள்ளிகள் குறிப்பாக முகம், உதடு, கண்கள், கைகள், கால்கள், வெளிப்புறமாகத் தெரியும் பகுதிகளில் தோன்றுபவை மிகுந்த வேதனையையும் மன அழுத்தத்தையும் கொடுக்கிறது.
வெண்புள்ளி நோய் வகைகள்
- சூரிய ஒளி படும் இடங்களில் மட்டும் அதாவது கைகள், கை விரல்கள், கால், பாதங்கள், கழுத்து பகுதி, இடுப்பு பகுதிகள் போன்ற இடங்களில் மட்டும் ஏற்படும் வெண் புள்ளிகள்
- அடுத்த வகை முடி அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் ஏற்படும் வெண் புள்ளி நோய். அதாவது ஆண் பெண் இருவருக்கும் புருவங்கள் மற்றும் தலைப் பகுதியிலும் ஆண்களுக்கு தாடி மீசை போன்ற இடங்களில் வரும்.
- உடலின் உட்புற திசுக்களில் இருந்து மட்டும் வெளி வரும் வெண் புள்ளி நோய் குறிப்பாக இது வாயின் உட்புறத்தில், உதட்டில், ஆண்குறி, பெண்குறிகளில் ஏற்படும் வெண்புள்ளி நோய்
- உடல் முழுவதும் ஏற்படுகின்ற வெண்புள்ளி நோய். இது எங்கு ஆரம்பிக்கிறது, எப்படி ஆரம்பிக்கும் என்று தெரியாது, லேசாக வெண்புள்ளி உடலில் தெரியும். திடீரென்று பின்னர் உடல் முழுவதும் பரவி விடும்.
- மருந்துகள், ஊசிகள், உணவு அல்லது சுற்றுப்புற சூழல்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் ஏற்படும் வெண்புள்ளி நோய்.
- உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் அளவு அதிகமாகும் நேரத்தில், உடலில் உலோக சத்துக்கள் குறைபாடு, அல்லது மிகுதியாக இருத்தல், போன்ற காரணங்ககளால் ஏற்படும் வெண் புள்ளி நோய்.
தோல் நோய்கள், தோலில் நிற மாற்றங்கள், அரிப்புகள், வெண் புள்ளிகள், அடை போன்று பரவக் கூடிய எக்சிமா என்ற கரப்பான் போன்ற பிரச்சினைகளில் லுக்கோடெர்மா என்ற வெண்புள்ளி நோய் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது சமீப காலமாக சிறு குழந்தைகள் கூட பாதிக்கப் படுகின்றனர். அலோபதி மருத்துவம் கை கொடுக்காத நிலையில் கை வைத்தியம், இயற்கை வைத்தியம் செய்து பார்க்கலாம். அந்த வகையில் வீட்டிலேயே செய்யக் கூடிய சில மருந்துகளைப் பார்க்கலாம்.
இயற்கை வைத்தியம்
காட்டு சீரகம் அல்லது கருஞ்சீரகம், மிளகு, எள் ஆகிய மூன்றையும் தலா ஐந்து கிராம் எடுத்துக்கொண்டு நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, நூறு மில்லி கசாயமாக சுருக்கி, இறக்கி வடிகட்டி, ஒரு வேளை மருந்தாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்.
அதேபோல் கருஞ்சீரகம், மிளகு, எள் ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு மைய அரைத்துப் பசையாக்கி வெண் புள்ளிகள் இருக்கும் இடங்களில் மேற் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தி வர வெண் புள்ளிகள் வேகமாகக் குணமாகி வரும் வெண் புள்ளிகள் மீது பூசி அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவி வர, உடலில் இருக்கும் வெண் புள்ளிகள் படிபடியாகக் குறைந்து கொண்டே வரும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு வெண் புள்ளி இருந்த இடங்கள் சிறு சிறு கருப்பு புள்ளிகளாக மாறத்தொடங்கும். சில மாதங்களில் முற்றிலுமாகக் குணமாகி விடும்
காட்டு அத்தி வேர் அல்லது மரப் பட்டை, முறைப் படி சுத்தி செய்த கார்போக அரிசி, வாய் விடங்கம் ஆகியவை தலா இரண்டு கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளைக்கான மருந்தாகக் குடித்து வர வேண்டும். கடுமையான கசப்பு சுவையுடன் இருக்கும். அதனால் தேவைப்பட்டால் தேன் அல்லது பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தும் காலை இரவு என தினமும் இரண்டு வேளைகள் உணவுக்கு அரைமணி நேரம் முன் குடித்து வர வெண் புள்ளி நோய் குணமாகும். வெண்புள்ளி சரியாகும் வரை தினமும் குடித்து வர வேண்டும். சிலருக்கு நூறு நாட்கள் ஆகலாம்.

கார்போக அரிசியை முறைப்படி சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தோல் முழுவதும் தடிப்புகளும் அரிப்புகளும் வாந்தி வயிற்றுப் போக்கு தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் எனவே முறையாக சுத்தம் செய்த கார்போக அரிசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், இது ஒரு தொற்று நோய் இல்லை என்பதை உறவினர், நண்பர்களிடம் விளக்கமாக, தைரியமாக சொல்லிவிட்டால், யாரும் இதனை அச்சத்துடன் அணுக மாட்டார்கள்.
