டாக்டர் எம்.ஜெயராஜா, இதயநோய் நிபுணர், சூரியா மருத்துவமனை, சென்னை.
உடல் எடை குறைப்புக்கு ஊசிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் உண்மைத் தன்மையை விளக்குகிறார் மருத்துவர்.
இந்தியாவில் உடல் பருமன் நோய் வேகவேகமாக அதிகரித்துவருகிறது. நான்கு பேரில் ஒரு இந்தியருக்கு இந்த பிரச்னை இருக்கிறது. உடல் பருமன் என்பது வாயைக் கட்டுப்படுத்தாமல் அதிக உணவு சாப்பிடுவதால் மட்டும் ஏற்படுவது அல்ல. மரபியல், ஹார்மோன்கள், தூக்கம், உணவுச் சூழல், சில மருந்துகள் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன.
உடல் பருமன் என்பது வெறுமனே தோற்றப் பிரச்னை மட்டுமல்ல. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, கொழுப்புக் கல்லீரல் நோய், மூட்டுவலி, குறட்டை மற்றும் சில வகை புற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மருத்துவநிலை. அதோடு, மனசோர்வுக்கும் வழி வகுக்கிறது.
பி.எம்.ஐ. கணக்கீடு
இந்தியர்களுக்கு உடல் கொழுப்பு பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சேர்வதால் உடல் பருமனைக் கண்டறிய பி.எம்.ஐ. எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் மட்டும் போதாது. இடுப்புச் சுற்றுளவு மிகவும் முக்கியமான அளவுகோல்.
இந்தியர்களில் பலருக்கு பி.எம்.ஐ. அதிகமாக இல்லாவிட்டாலும் வயிற்றுக் கொழுப்பு எனப்படும் தொப்பை பெரிதாக இருப்பதால் நீரிழிவு மற்றும் இதயநோய் அபாயம் ஏற்படுகிறது.
ஆண்களின் இடுப்பளவு 90 செ.மீ.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 80 செ.மீ.க்கு அதிகமாகவும் இருந்தால், அது அதிகப்படியான வயிற்றுக் கொழுப்பின் அறிகுறியாகும். நடு வயிற்றின் கீழ்ப்பகுதியான இடுப்பு அளவை ஒப்பிடும்போது ஆண்கள்க்கு 0.90க்கு கீழும் பெண்களுக்கு 0.85க்கு கீழும் இருப்பதுதான் ஆரோக்கியமான அளவீடாக கருதப்படுகிறது.
எடை குறைப்புக்கான முதல் படி ஆரோக்கியமான உணவு முறை, தொடர்ச்சியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தக் கட்டுப்பாடு. சிலருக்கு இவை எல்லாமே கிடைத்தாலும் எடைகுறைப்பு போதிய அளவு பலன் தருவதில்லை.

விற்பனையாகும் ஊசிகள்
சமீபத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் ஜிஎல்பி-1 (GLP-1) மருந்துகள் உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகின்றன. இந்தியாவில் வீகோவி (Wegovy), ஒசெம்பிக் (Ozempic) மற்றும் மெளன்ஜாரோ (Mounjaro) போன்ற மருந்துகள் கிடைக்கின்றன.
உண்மையில் இந்த மருந்துகள் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இது உடல் எடைக் குறைப்பில் வியக்கத்தக்க ஆற்றலுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டது. அதோடு சிறுநீரகம், இதயம், மூளை, கல்லீரல் செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது.
இவை வெறும் பசியைக் கட்டுப்படுத்தும் சாதாரண மருந்துகள் அல்ல. உடல் எடை குறையும்போது மூட்டுவலி குறைகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
- வீகோவி என்பது செமாகுளூட்டைடு (Semaglutide) என்ற மருந்தைக் கொண்டது. இது GLP-1 எனப்படும் குடல் ஹார்மோனைப் போன்று செயல்படுகிறது.
- ஒசெம்பிக்கிலும் செமாகுளூட்டைடுதான் உள்ளது. இது முதன்மையாக வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது; சில நோயாளிகளுக்கு உடல் எடையும் குறையலாம்.
- மெளன்ஜாரோ என்பது டிர்செபடைடு (Tirzepatide) என்ற மருந்தைக் கொண்டது. இது GIP மற்றும் GLP-1 ஆகிய இரண்டு ஹார்மோன் சுரப்பிகளிலும் செயல்படுகிறது.
இந்த மருந்துகள் மூளையில் பசியைக் கட்டுப்படுத்தும் மையங்களின் செயல்பாட்டைப் பாதித்து, குறைந்த உணவிலே வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்த உதவுகின்றன. மேலும், வயிற்றிலிருந்து உணவு வெளியேறும் வேகத்தையும் குறைக்கின்றன. இதனால் உணவு சாப்பிடும் அளவு இயல்பாகக் குறையக்கூடும்.
இவை ஒரே மூலப்பொருளைக் கொண்டிருந்தாலும், வீகோவி மற்றும் ஒசெம்பிக் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடுகள் வேறுபடுகின்றன. அதனால், இவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தக்கூடாது. இந்த ஊசிகளுக்கு மாதச் செலவு சுமார் 1,500 முதல் 26 ஆயிரம் வரை இருக்கலாம்.
பொதுவாக ஜிஎல்பி-1 மருந்துகளை வாரத்திற்கு ஒரு முறை நாமே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளலாம். இந்த ஊசிகள் பெரும்பாலும் வலி இல்லாதவை. இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மாதத்திற்கு சுமார் 1 முதல் 2 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும்.
அதனால் விரைவான எடை குறைப்பை விரும்பும் திரையுலகினர், ஊடகத் துறையினர் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் ஜோடிகள் மத்தியில் ஜிஎல்பி-1 மருந்துகள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன.
அதேநேரம், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த ஊசிகள் தேவையில்லை. பி.எம்.ஐ., உடல் பருமனால் ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள், முந்தைய சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவர் முடிவு செய்ய வேண்டும்.
நன்மைகள்
அடிக்கடி பசி எடுப்பது, உணவு உண்ட பின்னரும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவலாம்.
மேலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்துவதுடன் எடை குறைப்பதற்கும் உதவலாம். சில மருந்துகள், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கூடுதல் நன்மைகளையும் கொண்டுள்ளன.
அதிக எடையால் ஏற்படும் மூட்டு வலி, நடப்பதில் சிரமம், தூக்கத்தில் மூச்சுத் தடை போன்ற சில பிரச்சினைகள் எடை குறைவதால் மேம்படலாம்.
உடல் பருமனை மருத்துவப் பிரச்சினையாக அணுகுவதால் எல்லோருக்கும் இந்த நன்மைகள் கிடைக்குமா என்பது தனிநபரின் உடல்நிலை மற்றும் மருந்து பயன்படுத்துவதற்கான காரணத்தைப் பொறுத்தது.
மகிழ்ச்சி தரக்கூடிய ஹெடோனிக் ஈட்டிங்கிற்கு இந்த ஊசி வழிவகுக்கிறது. அதாவது சாக்லேட், காபி போன்றவை உடலுக்கு கலோரி தருவதுடன் மகிழ்ச்சியும் கொடுக்கிறது. அப்படி மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டும் ஹெடோனிக் ஈட்டிங் பழக்கம் உருவாகிறது.
இதன் காரணமாக மது குடிக்கும் பழக்கம், சிகரெட் புகைக்கும் விருப்பம் குறைவதும் குறிப்பிடத்தக்கது.
பக்கவிளைவுகள்
எந்த மருந்துக்கும் நன்மைகளுடன் சில பக்கவிளைவுகள் இருக்கும். எனவே, இந்த ஊசிகளிலும் பொதுவான பக்கவிளைவுகள் முதல் அரிதாக ஏற்படக்கூடிய தீவிரமான பிரச்சினைகள் வரை உள்ளன.
பொதுவாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, செரிமானக் கோளாறு, பசி அதிகமாகக் குறைதல், வயிறு நிறைந்த உணர்வு போன்றவை தென்படலாம்.
எனவே, இந்த மருந்துகள் எல்லோருக்கும் ஏற்றவை அல்ல. ஒருசில நோய் பாதிப்பு உள்ள நபர்களுக்கு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். குறிப்பாக கீழ்க்கண்ட பிரச்னை இருப்பவர்கள் இந்த ஊசியை தவிர்ப்பது நல்லது.
- கர்ப்பமாக இருப்பவர்கள், கர்ப்பம் தரிக்கத் திட்டமிடுபவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஊசியை பயன்படுத்தக்கூடாது.
- புற்றுநோய் குறிப்பாக தைராய்டு புற்றுநோய் உள்ளவர்கள், குடும்ப வரலாறு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.
- சில மருந்துகளுக்கு கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள்.
- கணையம், பித்தப்பை, சிறுநீரகம் அல்லது ஜீரண மண்டலத்தில் கடுமையான பிரச்னை உள்ளவர்கள்.
- நீரிழிவு காரணமாக கண் ரெட்டினாவில் பாதிப்பு உள்ளவர்கள்.
ஜி.எல்.பி. மருந்துகளை பயன்படுத்தும்போது தசைகள் பலவீனமடையாமல் இருக்க அதிகமான புரதச்சத்து உணவு மற்றும் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
பசி எடுக்கவில்லை என்பதனால் பலரும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகிறார்கள். இது பக்கவிளைவுகளை உருவாக்கலாம். மருந்தை நிறுத்தியபிறகு மீண்டும் எடை கூடாமல் இருக்க நல்ல உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் தொடர்ந்து அவசியம்.
என் மருத்துவ அனுபவத்தில் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய பெரும்பாலானவர்கள் தங்களின் ஆரம்ப உடல் எடையில் சுமார் 15% முதல் 25% வரை எடை குறைவதைப் பார்த்துவருகிறேன்.
அதேநேரம், ஊசியை நிறுத்திவிட்டால் பலருக்கு மீண்டும் உடல் எடை அதிகரிக்கலாம். இதுதான் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மை. இந்த மருந்துகள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவற்றை நிறுத்திய பின்னர் பசி மீண்டும் அதிகரிக்கலாம்; உடல் எடையைப் பராமரிப்பதும் கடினமாகலாம்.
எனவே, இந்த ஊசிகளை ஒரு குறுகியகால அழகு சிகிச்சையாக மட்டும் பார்க்கக் கூடாது. சிலருக்கு உடல் பருமன் ஒரு நீண்டகால நோயாக இருப்பதால், நீண்டகால மருந்துச் சிகிச்சை தேவைப்படலாம். எப்போது நிறுத்துவது அல்லது தொடர்ந்து பயன்படுத்துவது என்பதை மருத்துவருடன் ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றம்
மருந்துகள் சிறப்பாகச் செயல்படுவதற்கும், எடை குறைந்த பிறகு அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வாழ்க்கைமுறை மாற வேண்டியது அவசியம். குறிப்பாக காய்கறிகள், பருப்பு வகைகள், தேவையான புரதச்சத்து, முழுத்தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மிகக் குறைவாகச் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் கவனிக்க வேண்டும்.
உடல்நிலைக்கு ஏற்ற நடைப்பயிற்சி, தசை வலிமையைப் பாதுகாக்கும் பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எடை வேகமாகக் குறையும்போது தசைகளும் குறைய வாய்ப்புள்ளதால், புரதச்சத்து மற்றும் தசை வலிமையைப் பாதுகாப்பதற்கு போதுமான திரவங்கள் அருந்தவேண்டியது அவசியம். ஏற்கெனவே நோய்கள் இருந்தால் பயிற்சியின் அளவை மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
கவனிக்க வேண்டியவை
- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடங்க வேண்டாம்.
- சமூக வலைதளங்கள், உறுதிப்படுத்தப்படாத இணையதளங்கள் அல்லது தெரியாத விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டாம்.
- மருந்தின் அசல் தன்மை, காலாவதி தேதி, சேமிப்பு வழிமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
- பிறர் பயன்படுத்தும் ஊசியை பகிர்ந்து பயன்படுத்தக் கூடாது.
- ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகளையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- அறுவைச் சிகிச்சை அல்லது பரிசோதனைக்கு முன்பு இந்த மருந்து பயன்படுத்துவதை மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
வீகோவி, ஒசெம்பிக், மெளன்ஜாரோ போன்ற மருந்துகள் உடல் பருமன் சிகிச்சையில் முக்கியமான மருத்துவ முன்னேற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இவை சரியான நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய மருந்துகள் என்றாலும், ஆபத்தில்லாத அதிசய ஊசிகளும் அல்ல.
உடல் எடையைக் குறைப்பது மட்டுமே இலக்காக இருக்கக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நலம், தசை வலிமை, ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
உடல் பருமனால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் ஒருவருக்கு, மருத்துவரின் கண்காணிப்பில் இந்த ஊசிகள் பெரும் நன்மையைத் தரும். ஆனால், அழகுக்குப் பயன்படுத்துவது அல்லது மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்துவது ஆபத்தானது.
சரியான நோயாளிகளுக்கு, சரியான மருத்துவரின் கண்காணிப்பில் பயன்படுத்தினால் மட்டுமே இந்த மருந்துகள் நல்ல பலன் தரும் வரப்பிரசாதமாக அமையும்.
