ஒன்றை அடைய வேண்டும் என்றால், இன்னொன்றை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மந்திரச்சொல்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக உயர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெற்றிக்குப் பின்னால் அபாரமான திறமை மட்டுமல்ல, கடுமையான சுயக்கட்டுப்பாடு இருந்தது.

கால்பந்தில் மிகப்பெரிய சாதனை படைப்பதற்காக உடல் தகுதியைப் பாதுகாப்பதற்கு உணவுப் பழக்கம், தூக்கம், உடற்பயிற்சி, பயிற்சி நேரம் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார். மற்றவர்கள் ஓய்வெடுக்கும் நேரத்திலும் கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஒரு மனிதன் எதை அடைய விரும்புகிறான் என்பதைவிட, அதை அடைவதற்காக எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதை ரொனால்டோவின் வாழ்க்கை உணர்த்துகிறது.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்றால், அதற்காக வேறொன்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஓய்வு நேரத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் சுவையான உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

இதுதான் வாழ்க்கையின் அடிப்படை விதி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கே அவர்கள் விரும்பும் இலக்கு கிடைக்கிறது.

விட்டுக்கொடுப்பதைத் தோல்வியாக நினைக்கத் தேவையில்லை. உண்மையில், எல்லா விட்டுக்கொடுத்தல்களும் இழப்புகள் அல்ல. ஒரு மணி நேரம் பொழுதுபோக்கைக் குறைத்து உடற்பயிற்சி செய்வது நாளைய ஆரோக்கியத்திற்கான முதலீடு. இன்று ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நாளைய நிதிச் சுதந்திரத்திற்கான முதலீடு. கோபத்தில் பேசாமல் அமைதியாக இருப்பது குடும்ப உறவுகளின் மகிழ்ச்சிக்கான முதலீடு.

அதேநேரம், இந்தத் தத்துவத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம் என்று அர்த்தமில்லை. பணத்திற்காக உடல்நலத்தை இழக்கக் கூடாது. பதவிக்காக நேர்மையை இழக்கக் கூடாது. வெற்றிக்காகக் குடும்பத்தின் அன்பை இழக்கக் கூடாது. மற்றவர்களின் பாராட்டுக்காக சுயமரியாதையை இழக்கக் கூடாது.

எதை விட்டுக்கொடுக்க வேண்டும், எதைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் உண்மையான வாழ்க்கை அறிவு இருக்கிறது. வெற்றியை அடைய சில வசதிகளைத் தியாகம் செய்யலாம். ஆனால் வெற்றியை அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையையே தியாகம் செய்துவிடக் கூடாது.

ஒவ்வொரு பெரிய வெற்றிக்குப் பின்னாலும், பல சிறிய ஆசைகள் காத்திருக்கின்றன. இன்று எதை விட்டுக்கொடுக்கிறீர்கள் என்பது, நாளை நீங்கள் எதை அடையப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment