ஒரு புதிய விளக்கம்.
சவூதி அரேபியாவில் நடந்த கொடூர மரண தண்டனை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீதர் சுப்பிரமணியம் எழுதியிருக்கும் சிந்திக்கவைக்கும் பதிவு இது.
பங்களாதேஷைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மெக்காவில் இருக்கும் ஒரு மசூதிக்கு உள்ளே ‘ஒழுக்கக்கேடான’ செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த செயலுக்காக அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. மூன்று வருடங்களாக சிறையில் கிடந்த அவர்களை சவுதி அரசு சமீபத்தில் தலையைக் கொய்து அந்த தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. தலையற்ற முண்டங்களின் உடலை பங்களாதேஷுக்கும் அனுப்பி இருக்கிறது.
தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து அவர்கள் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை. பங்களாதேச தூதரகத்துக்குக் கூட முன்னறிவிப்பு இருக்கவில்லை. நடந்தது என்ன என்பதிலும் தெளிவில்லை. சிலர் அவர்கள் திருமணமான தம்பதியினர் என்று சொல்கின்றனர். சிலர் அவர்கள் திருமணமாகாதவர்கள் என்று சொல்கின்றனர். அந்தப் பெண் கருத்தரித்திருந்தாள் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு என்பதில் தெளிவின்மை இவற்றைக் காரணம் காட்டி ‘இது தெரியாமல் அந்த தண்டனையை எப்படி விமர்சிக்க முடியும்?’ என்று சிலர் – குறிப்பாக முஸ்லிம்கள் – வாதிடுகின்றனர்.
இதுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு பேச்சுக்கு அவர்கள் தம்பதியினர் அல்ல என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் காதலர்களாக இருக்கட்டும். அல்லது சுத்தமாகத் தெரியாத strangers என்றே கூட வைத்துக் கொள்வோம். அவர்கள் மசூதிக்குள் முத்தம் கொடுத்துக் கொண்டார்களா அல்லது அதையும் தாண்டி வேறு ஏதாவது செய்தார்களா என்பதும் தெரியாது. சரி, அதையும் தாண்டி செய்ய முயற்சித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருந்திருந்தால் அவர்கள் தலையைக் கொய்தது சரி என்று ஏற்றுக் கொள்வோமா? கொடுத்த தண்டனை சரிதான் என்று வாதிடுவோமா? அப்படி செய்வீர்கள் எனில் மதத்தினால் உங்கள் மூளை அழுகிப் போய் நாற்றமெடுக்கிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
சவுதி நிறைவேற்றிய இந்த தண்டனை மத்திய காலங்களில் நியாயப்படுத்தப்படுத்தக் கூடியதாக இருக்கலாம். காரணம், உலகெங்கும் அனைவரின் மூளைகளும் அவரவர் மதங்களினால் அழுகிப் போய்க் கிடந்த காலங்கள் அவை. விளைவு, வன்முறையே வாழ்வியலாக அக்காலம் உழன்றது. ஆனால் மதம் பேசும் மூடத்தனங்களைத் தாண்டி மக்கள் வாழ முயற்சிக்கும் காலம் இது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் வளர்ந்து, புனித நூல்கள் பேசும் அனைத்து விஷயங்களுமே கட்டுக்கதைகள்தான் என்று அறுதியாக நிரூபணமான காலத்தில் வாழ்கிறோம்.
ஒழுக்கம் என்பது எது ஒழுக்கக் கேடு என்பது எது என்பதை மதங்கள் சொல்லுவதை விடுத்து, மனித உரிமைகள் சார்ந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டு வாழ முயல்கிறோம். அந்த இருவரும் நிஜமாகவே மசூதிக்குள் பாலியல் உறவு கொள்ள முயற்சித்திருந்தால், அதுவும் சவுதி போன்ற ஒரு வன்முறை தேசத்துக்குள் அப்படிப்பட்ட செயலை முயற்சித்திருந்தால் அந்த செயலை விட அந்த முட்டாள்தனத்துக்குதான் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நான் வாதிடுவேன்.
சரி அதெல்லாம் ஏத்துக்க முடியாது. மசூதிக்குள் அவ்வளவு புனிதத்தன்மை இருக்கிறது, அது இந்தத் தம்பதியினரால் கெட்டுப் போய் விட்டது என்று நீங்கள் நிஜமாகவே நம்பினால், மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு இரண்டு மூன்று மாதங்கள், அதிக பட்சம் ஆறு மாதங்கள் கொடுக்கலாம். இதுவே ரொம்ப ஓவர் என்றுதான் என்னைப் போன்றோர் விமர்சிப்போம். ஆனால் தலையைக் கொய்து போடுவது? எனவே நாம் கேட்க வேண்டிய கேள்வி: அவர்கள் கல்யாணம் ஆனவர்களா இல்லையா என்பதல்ல. எது எப்படி இருந்தாலும் சவுதியின் குரூர வன்முறை நியாயமா இல்லையா என்பதுதான்!
கடைசியாக ஒன்று: ஒழுக்கம் பற்றிப் பேசும் உரிமை உலகில் எந்த மதத்துக்குமே கிடையாது. நவீன மனித உரிமைப் பார்வையில் ஆராய்ந்தால் தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், பைபிள், குரான், ஹதீஸ் முழுக்கவுமே ஒழுக்கக்கேடுகளும், வன்முறைகளும், கொடும் குற்றங்களும் விரவிக் கிடக்கின்றன. அவற்றில் பலவற்றை எனது ‘கடவுள் எனும் ஸ்பைடர்மேன்’ புத்தகம் மேற்கோள்களுடன் விளக்குகிறது. இதில் எந்தப் புத்தகத்தையும் முழுமையாக பின்பற்றி இன்று வாழவே இயலாது. அப்படி வாழ முயல்பவர் இன்றைய உலக சட்டங்களின்படி ஜெயிலுக்குத்தான் போக வேண்டி இருக்கும். அவர்களை ‘அடிப்படைவாதிகள்’ என்றும் இகழ்ந்து விமர்சிக்கிறோம்.
அதாவது, எந்த ஒரு மதமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு வரியையும் அப்படியே பின்பற்றி வாழ முயல்வதே கொடும் குற்றம் என்று நிலவும் காலகட்டம் இது. அப்படிப்பட்ட மதங்களில் எந்த மாதிரி புனிதத்தன்மை இருக்க முடியும்? அழுக்குகளும், குற்றங்களும், குரூர வரலாறும் நிரம்பியவைதான் நமது உலக மதங்கள். சொல்லப் போனால் புனிதங்கள் எனும் பெயரைச் சொல்லித்தான் பெரும் வன்முறைகள் வரலாறு முழுக்க அரங்கேறி இருக்கின்றன. அப்படிப்பட்ட ரத்த வரலாற்றின் இன்னொரு அத்தியாயம்தான் அந்த தம்பதியினரின் படுகொலை.
