அன்புக்கு ஏங்கும் மனிதருக்கு அறிவுரை கொடுக்காதீர்கள்!

மந்திரச்சொல்

மனம் உடைந்த நிலையில் ஒரு நண்பர் தேடி வருகிறார் என்றால், முதலில் அவரை அமைதிப்படுத்துங்கள். முழுமையாக மனம்விட்டுப் பேசுவதற்கு அனுமதியுங்கள். அதுதான், அந்த நேரத்தில் அவருக்குத் தேவை. துன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, அவரது வேதனை குறைந்துவிடும்.

துயரத்தில் இருப்பவர் என்ன தவறு செய்தார், அதை எப்படி சரி செய்யலாம் என்று ஆராய்வதும், அறிவுரை சொல்வதும் அனாவசியம்.

உலகம் முழுவதும் ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றவர்களின் அன்னையாக அறியப்படுபவர் மதர் தெரசா. 1910-ஆம் ஆண்டு பிறந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு வந்து ஆசிரியராகப் பணியாற்றினார். 1950-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை நிறுவினார். ஆதரவற்றவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், துணையற்றவர்களுக்கும் உதவுவதில் கவனம் செலுத்தினார்.

அவரது சேவை, மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்துகொள்வதில் அக்கறை காட்டியது. உணவு, மருத்துவத்துடன் அவரது சேவை நிற்கவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அன்பும் மரியாதையும் முக்கியம் என்பதை, சேவையின் ஒரு பகுதியாக மக்களுக்கு தெரசா உணர்த்தினார். மனிதத் தன்மையை மதிப்பதுதான் உண்மையான சேவை என்பதுதான் தெரசா வாழ்க்கை சொல்லித்தரும் தத்துவம்.

ஒருவர் தன்னுடைய பிரச்சினையை சொல்லும்போது, ஒரு நல்ல தீர்வு தோன்றலாம். ஆனால், சரியான அறிவுரைகூட தவறான நேரத்தில் சொல்லப்பட்டால், அது அக்கறையாக தென்படாது. ஏனென்றால், தன்னுடைய பிரச்சினையை மற்றவர்களிடம் பேசுவதற்கு முன்வரவே அதிக மனவலிமை தேவை. அந்த நேரத்தில் தீர்வு சொல்லப்படும்போது, “என் வலியைப் புரிந்துகொள்ளாமல் என்னைத் திருத்த முயற்சிக்கிறார்’’ என்று அவர் உணரலாம்.

குடும்ப உறவுகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தியாகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

ஒருவர் பணம் சம்பாதிப்பதை அன்பாக வெளிப்படுத்துகிறார். இன்னொருவர் நேரம் ஒதுக்குவதை அன்பாக உணர்கிறார். ஒருவர் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதை அக்கறையாக நினைக்கிறார். இன்னொருவர் அமைதியாகக் கேட்பதையே அக்கறையாக உணர்கிறார். இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல் இருவரும் அன்பு செலுத்திக்கொண்டே இருந்தாலும், அன்பு கிடைக்கவில்லை என்று உணரக்கூடும்.

எனவே, குடும்பத்தில் ஒருவர் மனம் திறந்து பேசும்போது, உடனடியாகத் தீர்ப்பு சொல்லாதீர்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

அன்புக்கு ஏங்கும் மனிதருக்கு அறிவுரை தேவையில்லை என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படலாம். தவறான முடிவுகளை எடுப்பதைத் தடுக்கவும், ஆபத்திலிருந்து பாதுகாக்கவும் அறிவுரை அவசியமாகலாம். ஆனால், அறிவுரை சொல்லும் முன்பு அவருடைய மனநிலையை அதற்கேற்ப மாற்றுங்கள்.

அதேநேரம், துயரத்தில் இருப்பவர் வாழ்க்கையை உடனே மாற்றிவிட நினைக்காதீர்கள். சில நேரங்களில் அவருக்கு ஒரு தீர்வு தேவைப்படலாம். சில நேரங்களில் ஒரு வழிகாட்டுதல் தேவைப்படலாம். இன்னும் சில நேரங்களில், தனது வலியைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் போதும் என்ற மனநிலை இருக்கலாம்.

அந்த நேரத்தில் அவருடைய வலியைச் சிறுமைப்படுத்தாமல் கேட்டாலே போதும். ஏனென்றால், அறிவுரை சொல்லும் மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்கள் கிடைப்பதுதான் அரிது. அப்படிப்பட்ட மனிதராக மாறுங்கள்.

உறவுகளைப் பாதுகாக்க அன்பானவராக இருங்கள். மனிதர்கள் உங்கள் அறிவை மறந்துவிடலாம். ஆனால், கஷ்டப்பட்ட நேரத்தில், எப்படி நடத்தினீர்கள் என்பதை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment