ஞானகுரு பதில்
கேள்வி : வீடு என்றால் கணவன், மனைவிக்குள் சண்டை இருக்கத்தானே செய்யும். இது, குழந்தையைப் பாதிக்குமா..?
- சி.ரித்து குமார், நெய்வேலி.
ஞானகுரு :
பெற்றோர் சண்டையில் பிள்ளைக்கு ரத்தம் வழியும் என்கிறது உளவியல். வீடு என்றால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. சண்டை போடுவதும் இயல்பு. ஆனால், அந்த சண்டை எப்படி நடக்கிறது என்பதுதான் பிள்ளையைப் பாதிக்கிறது.
அதாவது கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் அவர்கள் சகஜமாக பேசத் தொடங்கிவிட்டால், அது பிள்ளையை அதிகம் பாதிக்காது. கருத்து வேறுபாடு வரும், தீர்ந்துவிடும் என்று பிள்ளை கற்றுக்கொள்ளும்.
ஆனால், சண்டையில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது, அவமானப்படுத்துவது, திட்டுவது, பொருட்களை உடைப்பது, பல நாட்கள் பேசாமல் இருப்பது போன்றவை குழந்தையின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடும்.
அப்பாவும் அம்மாவும் நிஜமாக அன்பானவர்கள் இல்லை, அடிப்பார்கள், கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிடும். கெட்ட வார்த்தைகளும், கோபமான முகமும் பிள்ளையின் மூளையில் நிரந்தரமாக பதிந்துவிடும். இருவரும் பிரிவார்களா, யாருடைய உயிருக்காவது ஆபத்து வருமா என்ற பயம் உள்ளத்தை வாட்டியெடுக்கும்.
எனவே, பிள்ளையின் முன்பு சண்டை போடாதீர்கள். தவிர்க்க முடியாமல் சண்டையை பிள்ளை பார்த்துவிட்டால் இரண்டு பேரும் சேர்ந்து சமாதானம் செய்யுங்கள். ‘’கருத்துவேறுபாடு காரணமாக இப்படி சண்டை போட்டோம். உண்மையில் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். இதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை.” என்று அன்புடன் சொல்லுங்கள். இதனால் குழந்தைக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
