ஞானகுரு பதில்
கேள்வி : நான் வாங்கித்தரும் சட்டையை என் மகன் போடுவதில்லை. எல்லாம் எனக்குத் தெரியும் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறான். இந்த தலைமுறையை நினைத்தால் பயமாக இருக்கிறது. என்ன செய்வது..?
- என். ரேவதி, சேலம்.
ஞானகுரு ;
மரியாதையை குழந்தையிடம் கட்டாயப்படுத்தி வாங்க முடியாது. அன்பாக வாங்கிக்கொடுத்த சட்டையைப் போடாதது குற்றம் இல்லை. என்னுடைய அன்பை நிராகரித்துவிட்டான் என்று அதை எடுத்துக்கொள்வதுதான் தவறு. அதனால், பிள்ளைக்கு எந்த மாதிரி சட்டை பிடிக்கும் என்று அவனையே தேர்வு செய்யச் சொல்லி வாங்குவதே சரியான தீர்வு.
எல்லாம் எனக்குத் தெரியும் என்பது சில விஷயங்களில் உண்மையாக இருக்கலாம். டெக்னாலஜி மூலம் பெற்றோருக்குத் தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகச் சொல்லுங்கள். அதேநேரம், அவர்கள் பெற்றோரைவிட புத்திசாலிகள் என்று அர்த்தமில்லை. அனுபவம் அதிகம் என்பதால் பெற்றோர் சொல்வதே சரி என்பதும் உண்மையில்லை.
இந்தத் தலைமுறையை நினைத்து பயப்படத் தேவையில்லை. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பார்த்து பயந்திருக்கிறது. காலம் கெட்டுப்போச்சு என்பது ராமாயணம் காலத்தில் இருந்து பேசப்படுவதுதான்.
மகனை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக புரிந்துகொள்வதற்கு நான்கு விஷயங்களைச் செய்யுங்கள்.
- நல்ல விஷயங்களுக்கு மனம் திறந்து பாராட்டுங்கள்.
- குறைவாக அறிவுரை கூறுங்கள்.
- அதிகமாகக் கேளுங்கள், பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
- பிள்ளையின் கருத்துக்கு மரியாதை கொடுங்கள்.
பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் போகலாம். ஆனால், என் கருத்தைக் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால், பெற்றோரை மதிப்பார்கள். பிரச்னை வரும்போது தேடிவருவார்கள். பிள்ளையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பெற்றோர் வெற்றி அல்ல. நல்ல முடிவு எடுக்கக்கூடியவராக வளர்ப்பதுதான் வெற்றி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
