மைனர் சொத்தை வாங்கலாமா..?

வழக்கறிஞர் நிலா விளக்கம்

மைனர் பெயரில் இருக்கும் சொத்தை விற்பனை செய்கிறோம் என்று பெற்றோர் முன்வந்தாலும், அதை யாரும் வாங்கக்கூடாது. ஏனென்றால், பெத்த அப்பா, அம்மாவாக இருந்தாலும் மைனர் பெயரில் இருக்கும் சொத்துக்களை எளிதாக விற்பனை செய்ய முடியாது. அப்படி விற்பனை செய்ய வேண்டுமென்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

இந்திய சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டவர் சிறுவராகக் கருதப்படுவார். சிறுவனின் பெயரில் இருக்கும் மரபுச் சொத்து, தானம், பரிசு, அல்லது உயில் மூலம் வந்த சொத்து எல்லாமே சிறுவர் சொத்துகளாகக் கருதப்படும்.

இந்த சொத்துக்களை பெற்றோரால் சட்ட அனுமதி இல்லாமல் விற்க முடியாது. கார்டியன் அண்ட் வார்ட்ஸ் ஆக்ட் 1890-ன் கீழ் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். மாவட்ட நீதிமன்றம் அல்லது குடும்ப நீதிமன்றத்தில் என்ன காரணத்துக்காக சொத்து விற்பனை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

சிறுவனின் படிப்பு, விடுதி, மருத்துவச் செலவு, சொத்துப் பராமரிப்பு போன்ற காரணங்கள் உண்மை என்றால்  மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கும். இப்படி நீதிமன்ற அனுமதி இல்லாமல் விற்பனை செய்தால், அது சட்டப்படி செல்லுபடியாகாது. எனவே, சிறுவன் மேஜராக மாறியதும் அந்த விற்பனையை ரத்து செய்ய முடியும்.

Leave a Comment