உங்களை இயக்குவது யார்..?

வாக்கிங் தத்துவம்

காலை எழுந்து வாக்கிங் செல்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் 200 மீட்டரில் ஒருவர் நடந்துகொண்டு இருக்கிறார். அவர் கிட்டத்தட்ட நீங்கள் செல்லும் வேகத்தில்தான் நடக்கிறார் என்பதுபோல் தெரிகிறது. எனவே, அதனால், அவரை சீக்கிரம் பிடித்து விடலாம் நினைக்கிறீர்கள்.

உடனடியாக கொஞ்சம் வேகத்தை அதிகரித்து அவரை நோக்கி நடக்கிறீர்கள். சிறிது சிறிதாக இருவருக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துகொண்டே வருகிறது.

சில நிமிடங்களில் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி 50 மீட்டராகக் குறைகிறது. இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டினால் அவரைப் பிடித்து விடலாம் என்ற எண்ணம் வருகிறது. அதனால் வேகத்தை மீண்டும் அதிகரிக்கிறீர்கள்.

ஒரு வழியாக அவர் அருகே வந்துவிட்டீர்கள். அதே வேகத்தில் அவரை தாண்டியும் விட்டீர்கள். இப்போது மனதுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது. இப்போது பக்கத்தில் வருபவர் முகத்தைப் பார்க்கிறீர்கள். அதில், எந்த மாற்றமும் இல்லை. அவர் நீங்கள் தாண்டிச் சென்றதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், ஜாலியாக நடந்துகொண்டு இருக்கிறார்.

அப்போதுதான், அவருடன் போட்டியிட்டது ஏன் என்று யோசிக்கிறீர்கள்.  அவருடன் போட்டியிட்டதால் சில சிக்கல் நடந்திருப்பதும் புரிகிறது. அதாவது, அவரை முந்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்த காரணத்தால், வீட்டுக்குத் திரும்ப வேண்டிய வளைவைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்.

நடைப்பயிற்சியில் வழக்கமாகக் கிடைக்கும் மன அமைதி இல்லாமல் போட்டி மனப்பான்மையில் இருந்திருக்கிறீர்கள். எப்போதும் உங்களைப் பார்த்து சிரிக்கும் சில நபர்களைக் கண்டுகொள்ளாமல் தாண்டியிருக்கிறீர்கள். சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்கவில்லை.

ஒருவரை தாண்ட வேண்டும் என்று போட்டியிட்டதில் வெற்றி கிடைத்தது என்றாலும் இழந்தது அதிகம் என்பது புரிகிறது. அதேபோல், இப்படி போட்டியிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதும் தெரிகிறது. ஆனால், வாழ்க்கையில் இதைத்தான் நிறைய பேர் கடைப்பிடிக்கிறார்கள்.

நண்பர்கள், சேர்ந்து பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், குடும்ப உறவுகளுடன் போட்டியிட்டு, அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கண்ணைக் கட்டிய குதிரை போன்று ஓடுகிறார்கள். வாழ்வின் பெரும்பாலான நேரத்தையும், ஆற்றலையும் ஓடுவதிலேயே தொலைத்து, சேர வேண்டிய உண்மையான பாதையை தொலைக்கிறார்கள்.

எப்பொழுதும் உங்களுக்கு முன் யாராவது ஒருவர் போய்க்கொண்டுதான் இருப்பார். அவருக்கு நல்ல வேலை இருக்கலாம். நல்ல கார் இருக்கலாம். அவருக்கு வங்கியில் நிறைய பணம் இருக்கலாம். அழகான மனைவி இருக்கலாம்.

அவருக்கு எப்படி கிடைத்தது? எங்கே செல்கிறார்கள்,? என்ன அணிகிறார்கள்? என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதில் கவனம் செலுத்தினால் சொந்த வாழ்க்கையை வாழ முடியாது. யாருடன் போட்டி போடுகிறீர்களோ, அவரை போலவே மாறிவிடுவீர்கள்.

எனவே, ஒவ்வொரு நபரும் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால், யாருடனும் போட்டி போடாத நேரத்தில் மட்டுமே, ஒருவர் இயல்பான நபராக, தனித்தன்மை மிக்கவராக இருக்க முடியும்.

நீங்கள் யாருக்கும் போட்டி இல்லை. யாரும் உங்களுக்குப் போட்டி இல்லை.  அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு மட்டுமே சொந்தம். ஒப்பீடு செய்வதும், போட்டி மனப்பான்மையும் மன மகிழ்ச்சியை திருடிவிடும். மற்றவரை காப்பியடிக்க விரும்புபவருக்கு நிம்மதி காணாமல் போய்விடும்.

எனவே, உங்களுடன் மட்டுமே போட்டியிடுங்கள். உங்கள் அறிவை பெருக்குங்கள். உங்கள் உறவை பெருக்குங்கள். உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்குங்கள்.

Leave a Comment