கடவுளுக்கு நான்கு கேள்விகள்

எபிகுரஸ் எனும் தத்துவஞானி

மகிழ்ச்சியைத் தேட கற்றுக்கொடுத்த கிரேக்கத் தத்துவஞானி என்று போற்றப்படுபவர் கிரேக்கத்தைச் சேர்ந்த எபிகுரஸ். இவரது காலம் கி.மு. 341–270. இவரது கருத்துப்படி, வாழ்க்கையின் உயர்வான இலக்கு என்பது மகிழ்ச்சியாக வாழ்வதுதான். அதற்கு தெளிவான வழி காட்டுகிறார்.

மகிழ்ச்சி என்பது ஆடம்பரத்திலும் அளவுக்கு மீறிய ஆசைகளிலும் இல்லை. மனக்குழப்பம் இல்லாத அமைதி, உடல் வலி இல்லாத ஆரோக்கியம், பயமில்லாத வாழ்க்கை, நல்ல நண்பர்கள், எளிமையான வாழ்க்கையே உண்மையான மகிழ்ச்சி என்கிறார்.

எபிகுரஸ் காட்டிய வாழ்க்கைத் தத்துவத்தை சுருக்கமாகப் பார்க்கலாம்.

1. குறைவாக விரும்பினால், அதிகமாக மகிழலாம்

எவ்வளவு இருக்கிறது என்பதைவிட, எவ்வளவு வேண்டும் என்பதுதான் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. 50 லட்சம் வைத்திருப்பவர் 1 கோடிக்கு ஆசைப்பட்டால், அவர் ஏழை. அதேநேரம், 100 ரூபாய் வைத்திருப்பவர், இது போதும் என்று நினைத்தால், அவர் செல்வந்தர். அதிகம் வைத்திருப்பது செல்வம் அல்ல, குறைவான தேவைகளுடன் நிறைவாக வாழ்வதுதான் மகிழ்ச்சி.

2. மூன்று வகை ஆசைகள்

எபிகுரஸ் ஆசைகளை மூன்று வகைகளாகப் பிரித்தார். உணவு, தண்ணீர், உறக்கம், பாதுகாப்பு போன்றவை அத்தியாவசிய ஆசைகள். சிறந்த உணவு, ஆடம்பர வசதிகள் போன்றவை அவசியமில்லாத ஆசைகள். அளவில்லாத பணம், அதிகாரம், புகழ், சமூக அங்கீகாரம் போன்றவற்றை வீண் ஆசைகள். முதல் வகை ஆசைகளை நிறைவேற்றுவது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் மூன்றாவது வகை ஆசைகளுக்கு முடிவே கிடையாது.

3. மரணத்தை அழித்துவிடுங்கள்.

மரணம் பற்றிய எண்ணமே அவசியமில்லை என்கிறார் எபிகுரஸ். ஏனென்றால் உயிருடன் இருக்கும் போது மரணம் இல்லை, மரணம் வந்துவிட்டால் நாம் இல்லை. அதனால், மரண பயத்தில் வாழ்வது, நிகழாத ஒன்றை நினைத்து துன்பப்படும் நிலை என்கிறார்.  

4. கடவுள் தேவையில்லை

எபிகுரஸ் வாழ்ந்த காலத்தில் கடவுள்களின் கோபம், தண்டனை, மறுமை போன்ற நம்பிக்கைகள் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தின. எபிகுரஸ், மனிதன் கடவுள்களைப் பற்றிய அச்சத்தில் வாழக்கூடாது என்று வலியுறுத்தினார்.

5. நட்பு மிகப்பெரும் மகிழ்ச்சி

எபிகுரஸின் தத்துவத்தில் நட்புக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. நல்ல நண்பர்கள் துன்பத்தில் துணையாக இருப்பார்கள். பயத்தை குறைப்பார்கள். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவார்கள். தனிமையை உடைப்பார்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள். அதனால் நண்பர்களுடன் இருக்கச் சொல்கிறார்.

6. அதிகாரம் ஆபத்தானது.

புகழ், அதிகாரம், அரசியலை வாழ்க்கையின் இலக்காக வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார் எபிகுரஸ். ஏனென்றால் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டால் போட்டி, பொறாமை, பயம், எதிரிகள், மன அழுத்தம் உருவாகும். இது மன அமைதியை அழித்துவிடும். அதிகார லட்சியத்தில் வெற்றி அடைந்தாலும், அது தோல்விதான்.  

7. இன்பத்தை அனுபவியுங்கள்.

தேவைகள் குறைவாக இருக்கும்போது சிறிய விஷயங்கள்கூட பெரிய மகிழ்ச்சியாகத் தெரியும். ஒரு சாதாரண உணவு. நல்ல உரையாடல். அமைதியான தூக்கம். நோயில்லாத உடல். பயமில்லாத மனமே பெரிய செல்வங்கள். ஒரு விருந்துக்குப் பிறகு இன்னொரு விருந்து, ஒரு பொருள் வாங்கியதும் அடுத்து ஒரு பொருள், ஒரு பதவிக்குப் பிறகு வேறு ஒரு பதவி என்று புதிய சுகங்களைத் தேடுவது இன்பம் அல்ல.

8. எல்லாமே மாறிவிடும்

நல்லவை எளிதில் கிடைக்கக்கூடியது. அதேநேரம், தாங்க முடியாத துன்பம் நீண்ட காலம் நீடிப்பதில்லை என்கிறார் எபிகுரஸ். அதாவது எவ்வளவு எளிமையாக வாழத் தயாராக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி இருக்கிறது. வாழ்க்கையை பெரிதாக்குவதால் மகிழ்ச்சி வராது; தேவையற்ற ஆசைகளைச் சிறிதாக்குவதால் மனம் பெரிதாகிறது என்கிறார்.

அதேபோன்று சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எபிகுரஸ் கேட்ட நான்கு கேள்விகளுக்கு இன்று வரையிலும் பதில் இல்லை.  

இதோ அந்த நான்கு கேள்விகள்.

  1. கடவுளுக்கு தீமையைத் தடுக்கும் திறனும் விருப்பமும் உள்ளதா? அப்படி இருந்தால் அவர் ஏன் தீமைகளைத் தடுக்காமல் இருக்கிறார்?
  2. கடவுள் தீமையைத் தடுக்க விரும்புகிறார், ஆனால் அவரால் முடியவில்லை என்பது உங்கள் பதில் கருத்தா? அப்படியானால் கடவுள் சர்வ வல்லமையுள்ளவர் அல்ல.
  3. கடவுளால் தீமையைத் தடுக்க முடியும், ஆனால் அவர் அதைச் செய்வதில்லை என்பது உங்கள் பதில் கருத்தா? அப்படியானால் கடவுள் தீயவர்.
  4. கடவுள் தீமையைத் தடுக்கும் திறனும் விருப்பமும் இல்லாதவர் என்பது உங்கள் பதில் கருத்தா? அப்படியானால் அவரை நீங்கள் ஏன் கடவுள் என்று அழைக்க வேண்டும்?

நியாயமான கேள்விகள். கடவுள், மரணம் பற்றிய அச்சமில்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியின் திறவுகோல்.

Leave a Comment