குப்பைக்கு நோ
கடல் என்றதும் பரந்து விரிந்த பிரமாண்டம் கண்ணுக்குள் தெரியும். அழகான நீல நிறக் கடலுக்கு ஒரு விசித்திர குணம் உண்டு.
உயிருள்ள அனைத்தையும் கடல் தனக்குள் பத்திரமாக வைத்துக் கொள்ளும். உயிர் இல்லாதவற்றை கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். மனிதர்கள் கடலில் குப்பைகளை கொட்டலாம், அசுத்தம் செய்யலாம். ஆனால் கடல் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அலைகளின் வழியாக எல்லா குப்பைகளையும் கரைக்குத் தள்ளிவிடுகிறது.
நல்லதை ஏற்றுக்கொண்டு கெட்டதை வெளியே தள்ளும் கடலாக மனதை மாற்றுங்கள். ஏனென்றால் சிலர் நம் மீது கோபம், வெறுப்பு, அவமதிப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வுகளை கொட்டிவிட்டுச் செல்வார்கள். மனதைக் காயப்படுத்தும் அந்த உணர்வுகளை அப்படியே மனதுக்குள் வைத்திருந்தால் வேதனையும் வலியும் மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும். எனவே, அவற்றை எல்லாம் குப்பையாக நினைத்து வெளியே வீசிவிட்டால் மனமும் கடல் போலத் தூய்மையாக மாறிவிடும்.
கடல் அமைதியாகத் தோன்றினாலும், அது எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும். அலைகள் தொடர்ந்து கரையைத் தொடுகின்றன. தனக்கு தேவையில்லாத எல்லாவற்றையும் வெளியே தள்ளுகின்றன.
அதேபோல் நமது மனதிலும் வெளியேற்றும் சக்தி இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். கோபம் வந்தால் மனதில் வைத்திருக்காமல் சரியான வழியில் வெளியேற்ற வேண்டும். துக்கம் வந்தால் அழுது வெளியேற்ற வேண்டும். நம்பிக்கைத் துரோகத்தை மன்னித்து வெளியேற்றலாம். உடலைத் தூய்மைப்படுத்துவது போன்று தினமும் மனதையும் தூய்மைப்படுத்துங்கள்.
அன்பை வைத்துக்கொள்ளுங்கள். நல்ல நினைவுகளை வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையை வைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியை வைத்துக்கொள்ளுங்கள்.
கோபம், வெறுப்பு, அவமானம், துரோகம், பொறாமை, கசப்பு போன்ற மனக்குப்பைகளை வெளியே வீசுங்கள். வாழ்க்கை கடல் போல் ஆழமாகவும் அழகாகவும் மாறிவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
