ஏழ்மை மனப்பான்மை உள்ளவரால் ஒருபோதும் செல்வந்தராக முடியாது

மந்திரச்சொல்

ஏழ்மை மனப்பான்மை என்பது ஏழையாக இருப்பதைக் குறிப்பதில்லை. பணம் பற்றிய தவறான சிந்தனையுடன் வாழ்வதைக் குறிக்கிறது. அதாவது, பணம் கிடைத்ததும் செலவழிப்பது குறித்து யோசிப்பது ஏழ்மை மனப்பான்மை. அந்த பணத்தை எப்படி அதிகமாக்கலாம் என்று சிந்திப்பது பணக்கார மனப்பான்மை.

பணம் கையில் இருக்கிறதோ இல்லையோ, ஒரு பணக்காரர் போன்று சிந்திப்பதும் செயல்படுவதும்தான் செல்வந்தராகும் மனநிலை. அப்படித்தான் செல்வந்தர் வாரன் பஃபெட் சிறுவயதிலே பணம் பற்றி வேறுபட்ட சிந்தனை வைத்திருந்தார். பள்ளி வயதில் கிடைத்த பணத்தை உடனடியாக செலவழிக்காமல், மீண்டும் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தினார்.

பணம் கிடைத்தால் என்ன வாங்கலாம் என்று சிந்திப்பவர் நுகர்வோர். பணம் கிடைத்தால் அதை எப்படி வளர்க்கலாம் என்று சிந்திப்பவர் முதலீட்டாளர்.

பஃபெட்டின் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்தபோதும், ஆரம்ப காலத்தில் வாங்கிய வீட்டிலேயே நீண்ட காலம் வாழ்ந்தார். செல்வந்தராகத் தோன்றுவதற்காக பணத்தைச் செலவழிப்பது வேறு. செல்வந்தராக மாறுவதற்காக பணத்தைப் பயன்படுத்துவது வேறு என்பதை உணர்த்தினார்.

ஒருவருக்கு வரும் மாதச் சம்பளம் 50 ஆயிரத்தையும் செலவழித்துவிடுகிறார். அவருக்கு சம்பளம் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம் செலவும் உயர்கிறது என்றால் அங்கு செல்வம் உருவாகவில்லை. மற்றொருவர் வருமானம் உயரும்போது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, சேமிப்பு மற்றும் முதலீட்டையும் உயர்த்துகிறார் என்றால், அவருடைய பணம் மெதுவாக அவருக்காக வேலை செய்யத் தொடங்குகிறது. இதுதான் செல்வந்தராவதற்கு அடிப்படைத் தகுதி.  

ஏழ்மை மனப்பான்மை உள்ளவர், ’இப்போதே வாங்கவேண்டும், சம்பளம் வந்ததும் வாங்கலாம், இ.எம்.ஐ. என்றால் சமாளித்துவிடலாம். அடுத்தவரிடம் இருப்பது போன்று எனக்கும் வேண்டும்’ என்றெல்லாம் ஆசைப்படுவார். இந்த ஆசை அவரது இன்றைய வருமானம் மட்டுமின்றி, எதிர்கால வருமானத்தையும் அழித்துவிடலாம்.

செல்வத்தை உருவாக்குபவர் ஆசை வைத்திருக்கிறார். அதேநேரம், அந்த ஆசைக்கு ஒரு காலக்கெடு வைக்கிறார். இப்போது வாங்க வேண்டுமா அல்லது சில மாதங்கள் காத்திருந்து வாங்கலாமா என்று யோசிப்பார். செலவை தள்ளிப்போடுவது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

வருமானம் குறைவாக இருப்பவர் கூட நல்ல பணப் பழக்கங்களை மெதுவாக உருவாக்கலாம். 500 ரூபாய் சேமிப்பிலிருந்து தொடங்கலாம். கடனை கட்டுப்படுத்தலாம். தேவையற்ற செலவுகளை கண்டுபிடிக்கலாம். திறனை வளர்த்துக்கொள்ளலாம். வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தேடலாம். பின்னர் முதலீடு செய்யலாம்.

கையில் பணம் இல்லை என்றாலும் ஒரு பணக்காரர் போன்று சிந்தியுங்கள். பண மேலாண்மை உருவாகிவிடும். செல்வமும் குவிந்துவிடும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment