மந்திரச்சொல்
மரம் ஒரே நாளில் வளர்ந்து நிழல் தருவதில்லை. ஒருவருக்கு நல்ல பெயர் ஒரே நாளில் கிடைப்பதில்லை. நல்ல உறவு ஒரே நாளில் உருவாவதில்லை. திறமை ஒரே நாளில் உச்சம் அடைவதில்லை. காலம், பொறுமை, தோல்வி, திருத்தம், தொடர் முயற்சி போன்றவை சேர்ந்துதான் நிலைத்த மதிப்பை உருவாக்குகின்றன.
இதற்கு வாழும் உதாரணம் சுந்தர் பிச்சை. சென்னையில் எளிய நடுத்தரக் குடும்பப் பின்னணியில் வளர்ந்த சுந்தர் பிச்சைக்கு, உலகின் மிகப்பிரபலமான கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு எளிதாகக் கிடைக்கவில்லை.
இந்தியாவில் ஐஐடி படித்து அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். 2014ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் ஒரு சாதாரண தயாரிப்பு மேலாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அங்கிருந்து குரோம், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகளுடன் பணியாற்றி, படிப்படியாகப் பொறுப்புகளை அதிகரித்துக் கொண்டு, 2015-ல் கூகுள் சிஇஓ ஆனார். 2019ல் ஆல்பபெட் சிஇஓ பொறுப்பையும் ஏற்றார்.
அவர் ஒரே தாவலில் உயரத்தை அடையவில்லை. கல்வி, திறமை, சிறிய பொறுப்பு, பெரிய பொறுப்பு, தலைமை என்று படிப்படியாகச் சென்றார். அதனால் இன்று உலகின் முக்கியமான நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் உழைத்து வெற்றியைத் தாங்கும் மனநிலை, திறமையை வளர்த்துக்கொண்டார்.
எளிதாகக் கிடைத்த ஒன்றை நாம் எளிதாக இழப்பதற்கு வாய்ப்புள்ளது; ஆனால் போராடிப் பெற்ற ஒன்றை மனம் ஆழமாகப் பாதுகாக்கிறது. நாம் ஒன்றை பெறுவதற்காக நேரம், முயற்சி, பணம், உணர்ச்சிகளை முதலீடு செய்யும்போது, அதை இழக்க விரும்பாத மனநிலை உருவாகிறது. அதனால்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த முதல் சம்பளம் என்பது, பெற்றோரிடம் இருந்து எளிதாகக் கிடைக்கும் ரூபாயைவிட அதிக அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. கஷ்டம் ஒரு பொருளுக்கு விலையை மட்டும் கொடுப்பதில்லை; அதற்கு அர்த்தத்தையும் கொடுக்கிறது.
இதை உறவுகளிலும் பார்க்கலாம். எந்த சண்டையும் இல்லாத உறவு என்பதல்ல நல்ல உறவு. சண்டை வந்தபோதும் பேசிக்கொண்டு, புரிந்துகொண்டு, மன்னித்து, எல்லைகளைத் திருத்தி, மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பிய உறவுதான் பல நேரங்களில் ஆழமான உறவாகிறது. ஏனென்றால், சிரமத்தை கடந்து உருவான உறவுக்கு வரலாறு இருக்கும். வரலாறு இருக்கும் இடத்தில் பிணைப்பு இருக்கும். அதேபோல் உடனடி வெற்றியும் நீண்டகால வெற்றியும் ஒன்றல்ல.
ஒரு நாளில் உடலை மாற்றும் ஆசையைவிட, தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் நீண்ட காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிப்பதைவிட, ஆண்டுகள் கடந்து சேமித்து, முதலீடு செய்து, பணத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.
அதனால் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று தாமதமாகக் கிடைத்தால் அதை தோல்வி என்று நினைக்காதீர்கள். சில நேரங்களில் தாமதம் என்பது மறுப்பு அல்ல. நீங்கள் பெறப்போகும் விஷயத்தைத் தாங்கும் அளவுக்கு உங்களையே வாழ்க்கை தயார்படுத்துகிறது.
விரைவாக வந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் போராடிப் பெற்ற வெற்றி தன்னம்பிக்கையை தருகிறது. விரைவாக கிடைத்த பணம் வசதியைத் தரலாம்.
ஆனால் உழைத்து உருவாக்கிய செல்வம் நிதி ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. எளிதாக கிடைத்த உறவு சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் சோதனைகளைத் தாண்டி பாதுகாக்கப்பட்ட உறவு நம்பிக்கையை உருவாக்குகிறது.
விதை மண்ணுக்குள் இருக்கும் காலத்தைப் பார்த்து அது வளரவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது வெளியே தெரியாமல் வேர் விட்டுக்கொண்டிருக்கலாம். அதுபோலத்தான் சில வெற்றிகள் தாமதமாக வருகின்றன;
ஆனால் அவை வந்த பிறகு எளிதாகப் போய்விடாதபடி உங்களை முதலில் வலிமையானவராக மாற்றிவிட்டு வருகின்றன.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
