பிறந்த நாள் நினைவுகள்
தொண்டு செய்து பழுத்த பழம். தூயதாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும். மனக்குகையில் சிறுத்தை எழும் அவர் தான் தந்தை பெரியார். பாதிக்கப்பட்ட மனிதருக்காக காலம் முழுக்க உழைத்தவர்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட பயண நாட்கள் 8200, மொத்த தொலைவு 13,19,662 கி.மீ. உலகில் இவ்வளவு நீண்ட அளவு பொது வாழ்க்கை என்பது வேறு எவருக்கும் கிட்டியிருக்காது.
அவருடைய கூட்டங்களில் கேட்கப்படக்கூடிய கேள்விகள், அவர் மேடையிலோ அல்லது கூட்டங்களில் பேசும் பொழுதே கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார் பெரியார். மிக குதர்க்கமான கேள்விகள் எல்லாம் வரும். அதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லுவார் பெரியார். காரணம்,“மக்களுக்கு விடை சொல்லுவதற்காகவே வந்திருக்கிறேன்” என்பார். குழப்பத்தில் இருப்பவனை தெளிவுப்படுத்துவதே முக்கியமான பணி என்பதை பெரியார் உணர்ந்திருந்தார்.
ஒரு கூட்டத்திலே அப்படித்தான் பெரியாரை கேலி செய்யும் விதமாக ஒருவர் துண்டுத் தாளிலே கேள்வி ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த துண்டுச் சீட்டில் எழுதி இருந்ததுஎன்னவென்றால், “நான் ஒரு முட்டாள்” என்று எழுதி இருந்தது. இதை ஒலி பெருக்கியிலேயே பெரியார் படிப்பார் என்று தான் அந்த நபர் எழுதி இருந்தார்.
ஆனால், எவ்வாறு சாமர்த்தியமாக பதில் அளித்தார் தெரியுமா பெரியார்? யாரோ ஒருவர் தன்னுடைய பெயரை மட்டும் எழுதிவிட்டு, கேள்வியை எழுதாமல்கொடுத்துவிட்டார்” என்றார் பெரியார். எவ்வளவு புத்திக் கூர்மையோடு பதில் அளித்தார் என்று பாருங்கள்.
சமூகம் என்பது பல்வேறு குடும்பங்களை கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு மனிதர்களை கொண்டது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை முறையை சரி செய்யாமல் சமூக நீதியை உருவாக்க முடியாது என்பதில் பெரியார் கண்ணும் கருத்தமாக இருந்தார். பெரியார் கண்ட வாழ்வியல் என்பது, வெறும் ஒழுங்கை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல. நல்லவனாக இருக்க வேண்டும்; ஆனால், அது சமூகத்திற்காக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் வாழ்வியல் நோக்கமாக இருந்தது என்பதே நமக்கு கிடைக்கும் பாடம்.
கடவுள் இல்லை என்றார். கடவுளை பரப்புகிறவனை அயோக்கியன் என்றார். மதம் ஒழிய வேண்டும் என்றார். இந்து மதத்தை சனியன் என்றார். பிள்ளையாரை நடுத்தெருவில் உடைத்தார். ராமனையும் கிருஷ்ணனையும் தோலுரித்தார். பார்ப்பானியம் ஒழிய வேண்டும் என்றார். அரசியலமைப்பை திருத்தி இடஒதுக்கீட்டை காத்தார். அரசியல் சட்டத்தை எரித்தார். தமிழ்நாடு நீங்கிய இந்திய படத்தை எரித்தார். தேசிய கொடியை எரிக்க தேதி குறித்தார். சாதிப்பெயரை தார் கொண்டு அழித்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்றார். பெண்ணுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, பிரதிநித்துவம் வேண்டுப் என்றார்.
காவல்துறையிலும் பள்ளிக்கல்வியிலும் பாதி இடம் ஆதி திராவிடருக்கும் பெண்களுக்குமே அளிக்கப்பட வேண்டும் என்றார். இடைநிலை சாதிகளின் சாதிப்பற்றும் அடிமைத்தனம் என்றார். புத்தருக்கு விழா எடுத்தார். குறளுக்கு மாநாடு நடத்தினார். அம்பேத்கரை ஆதரித்து அவரையே தலைவர் என்றார்.
பக்தி இலக்கியத் தமிழை தாய்ப்பால் பைத்தியம் என்றார். உடையில் எளிமை வேண்டும் என்றார். ஆதி திராவிருக்காக அத்துணை மாநாடு நடத்தி அவர்களுக்காக நின்றார். குலக்கல்வி, தட்சணப்பிரதேசம், இந்தி இவை அனைத்தையும் விரட்டி அடித்தார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கிளர்ச்சி செய்ய முனைந்தார்.
இன்னும் என்னதான் செய்யவில்லை..? அதனால் அவர் பெரியார்.
