மந்திரச்சொல்
ரோட்டோரம் பூ விற்கும் ஒருவருக்கு மழை பெய்வது நஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதே மழை, குடை விற்பவருக்கு நல்ல வருமானம் தரும். ஒருவருக்கு மோசமான நாளாகத் தெரியும் அந்த நாள், இன்னொருவருக்கு நல்ல நாளாக அமைகிறது.
எல்லா நாட்களும் நமக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, பாறையை தலையால் உடைப்பதற்கு சமம். வலி மட்டுமே மிஞ்சும். சில நாட்கள் நமக்கான கதவுகள் திறக்கும். சில நாட்கள் மூடியே இருக்கும். சில நாட்கள் நம்மை ஓட வைக்கும், சில நாட்கள் நம்மை சிந்திக்க வைக்கும். இன்றைய நாளுக்கு வருத்தப்படாமல், ’இந்த நாள் இப்படித்தான்’ என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே முக்கியம்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவனுக்கு அந்த நாள் மோசமான நாளாகத் தோன்றலாம். ஆனால் அந்தத் தோல்வியே அவனுடைய பலவீனத்தைப் புரிய வைத்து, அடுத்து வெற்றி பெறச் செய்யலாம். வேலைக்குத் தேர்வாகவில்லை என்ற கடிதம் ஒருவருக்கு முடிவாகத் தோன்றலாம். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, ’அந்த வேலை கிடைக்காததால்தான் புதிய பாதையில் சென்றேன்’ என்று அவர் நினைக்கலாம்.
ஒரு உறவு முறிவது அந்த நேரத்தில் மிகப்பெரிய இழப்பாகத் தோன்றலாம். ஆனால் அந்த அனுபவம், தன்னை மதிக்காத உறவிலிருந்து வெளியே வரவும், எதிர்காலத்தில் நல்ல முடிவுகளை எடுக்கவும் கற்றுக்கொடுக்கலாம். சில கதவுகள் மூடப்படுவது தண்டனை அல்ல. சில நேரங்களில் அது வேறு கதவைத் தேடச் சொல்லும் வழிகாட்டுதல்.
வெயிலும் மழையும் மாறி மாறி வருவதுபோல் வெற்றி, தோல்வியும் மாறி மாறி கிடைப்பதுதான் வாழ்க்கை. எப்போதும் வெற்றி மட்டுமே கிடைத்தால் வெற்றியின் மதிப்பு தெரியாது. எப்போதும் பணம் இருந்தால் பணத்தின் அருமை தெரியாது. எப்போதும் நம்மைச் சுற்றி மனிதர்கள் இருந்தால் தனிமையின் பாடம் தெரியாது. எப்போதும் உடல்நலம் இருந்தால் ஆரோக்கியத்தின் மதிப்பு புரியாது.
அதற்காக வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை விரும்ப வேண்டும் என்று அர்த்தமில்லை. கஷ்டம் வரும்போது, எனக்கு ஏன் கஷ்டம் வந்தது என்று தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளாமல், ’இதுவும் கடந்து போகும்’ என்று ஏற்கவேண்டும்.
இன்று எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் இருக்கலாம். நம்பிய ஒருவர் உங்களை ஏமாற்றியிருக்கலாம். சரியான முயற்சிக்கு பாராட்டு கிடைக்காமல் இருக்கலாம். திட்டம் தோல்வியடைந்திருக்கலாம். மனதிற்குப் பிடித்த எதுவுமே நடக்காமல் இருக்கலாம். அதனால் வாழ்க்கையே உங்களுக்கு எதிராகிவிட்டது என்று அர்த்தமல்ல. ஒரு நாள் மோசமாக இருப்பதல் முழு வாழ்க்கையும் மோசமாகாது
.
தோல்வி, இழப்பு, நிராகரிப்பை ஏற்றுக்கொள்வது சரணடைவது அல்ல, இப்போது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்ததைச் செய்கிறேன், என்னால் மாற்ற முடியாததைப் பற்றி கவலைப்பட்டு என்னை நானே சிதைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று உறுதி எடுப்பதுதான் மன நிம்மதிக்குப் பரிசு.
காற்றை நிறுத்த முடியாது. ஆனால் பாய்மரத்தை மாற்றி படகின் திசையை மாற்ற முடியும். மழையை நிறுத்த முடியாது. ஆனால் குடையை எடுத்துக்கொண்டு நடக்க முடியும். வாழ்க்கையில் வரும் எல்லா பிரச்னைகளையும் தடுக்க முடியாது. ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் நமது மனநிலையை மாற்ற முடியும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமில்லாமல் இருக்கலாம். நாளை உங்கள் நாளாக அமையலாம். அதுவரை நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
