போர்க்களத்தில் எதிரியைக் கண்டவுடன் வீழ்த்திவிட வேண்டும். கொஞ்சம் தயங்கினால் அவர் நம்மை வீழ்த்திவிடுவார்.

மந்திரச்சொல்

முடிவு எடுக்கவேண்டிய தருணம் மிகவும் முக்கியமானது. போர்க்களத்தில் மட்டுமின்றி, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, நிறுவனச் சிக்கல்களில் முடிவு எடுப்பதற்கு தயங்கிநிற்பது எதிரிக்கு வாய்ப்பு கொடுத்துவிடும்.  

அலெக்சாண்டரின் வெற்றிக்கு அவரது படையின் வேகம், சூழ்நிலைக்கேற்ப விரைவாக முடிவெடுக்கும் திறன் முக்கியக் காரணங்களாக இருந்தன. எதிரிக்கு தன்னைச் சீரமைத்துக்கொள்ளும் நேரத்தைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் அவரது போர் தந்திரம்.

நெப்போலியனுக்கு வேகமே ஆயுதம். எதிரியின் படைகள் ஒன்றாகச் சேர்ந்து தங்களைத் தயார்படுத்துவதற்கு முன்பே, அவற்றைத் தனித்தனியாகச் சந்தித்து தாக்கும் யுக்தியைப் பயன்படுத்தினார். எதிரிக்கு முடிவெடுக்க நேரம் குறைந்தால், அங்கு குழப்பம் அதிகரிக்கும். போர் என்பது ஆயுதங்களின் மோதல் மட்டுமல்ல, நேரத்தின் மீதான போட்டி.

சத்திரபதி சிவாஜியின் போர் முறைகளில் வேகம், திடீர் தாக்குதல், நிலப்பரப்பை நன்கு பயன்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை. அப்சல் கானை எதிர்கொண்ட சூழலில் சிவாஜி வெறும் உடல் வலிமையால் மோதவில்லை. சூழ்நிலையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமிடல் முக்கிய பங்கு வகித்தது. எதிரியை வெல்வது என்பது எப்போதும் வலிமையாக இருப்பது அல்ல. எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில், பலவீனத்தைப் பயன்படுத்துவது.

மனித மூளைக்கு ஒரு விசித்திரப் பழக்கம் இருக்கிறது. ஒரு ஆபத்தை எதிர்கொள்ளும்போது சிலர் உடனடியாகச் செயல்படுவார்கள். நிறைய பேர் மீண்டும் மீண்டும் யோசிப்பார்கள். அதிகமாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியாமல் போகும் இடைவெளி, சில நேரங்களில் எதிரியின் வாய்ப்பாக மாறுகிறது. அதனால் தலைமைத்துவத்தில் ஒரு முக்கியத் திறமை என்பது, வேகமாக முடிவெடுப்பது அல்ல, சரியான நேரத்தில் முடிவெடுப்பது.

பயம், தயக்கம், தள்ளிப்போடுதல், வாய்ப்பை இழத்தல், தவறான பழக்கம் காரணமாக முடிவெடுக்க முடியாத மனநிலை இருக்கலாம். பல ஆண்டுகளாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கலாம். இன்னும் கொஞ்சம் பணம் சேரட்டும்,“சரியான நேரம் வரட்டும் என்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறார்.

அதே நேரத்தில் மற்றொருவர் சிறிய அளவில் தொடங்கி, தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறிவிடுகிறார். இப்போது முதல் மனிதர், “நான் ஏன் தொடங்கவில்லை?” என்று யோசித்தால், அவருடைய மிகப்பெரிய எதிரி வேறு யாருமல்ல, அவரது தயக்கம்தான் என்பது புரியும். வாழ்க்கையில் முடிவெடுக்காமல் இருந்தால் சூழ்நிலை நமக்குப் பதிலாக முடிவெடுத்துவிடும்.

அதனால்தான் சிறந்த போர்வீரர் என்பவர் எப்போதும் முதலில் தாக்குபவர் அல்ல. எப்போது காத்திருக்க வேண்டும், எப்போது நகர வேண்டும், எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பதை அறிந்தவன்தான் உண்மையான போர்வீரன்.

ஒரு கணத்தின் தயக்கம் ஒரு வாய்ப்பை இழக்கச் செய்யலாம். ஒரு சரியான நேரத்தின் முடிவு ஒரு வாழ்க்கையையே மாற்றலாம். போர்க்களத்தில் அது யுத்தத் தந்திரம். வாழ்க்கையில் அது முடிவெடுக்கும் தைரியம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment