ஞானகுரு பதில்
கேள்வி : ஒரு சிலருக்கு மட்டும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறதே, அது தான் அதிர்ஷ்டமா.?
- எஸ்.ராமலட்சுமி, திண்டுக்கல்.
ஞானகுரு :
கிரிக்கெட்டில் ஒரு சில கேப்டன்கள் தொடர்ந்து டாஸ் ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள். இதனை அதிர்ஷ்டம் அல்லது திறமை என்று சொல்லிவிட முடியாது. அதாவது டாஸ் போடும்போது எல்லோருக்கும் 50% வெற்றிக்குத்தான் வாய்ப்பு உண்டு. ஆனாலும், சிலருக்கு தொடர்ந்து டாஸில் வெற்றி கிடைப்பது தற்செயல் மட்டுமே. இதை அதிர்ஷ்டம் அல்லது நல்ல நேரம் என்று சொல்வது சரியில்லை. இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
ஏனென்றால் டாஸில் ஜெயிப்பதால் மட்டும் யாராலும் போட்டியை வென்றுவிட முடியாது. அதேநேரம், தொடர் வெற்றி பெறுபவர்களை ஆழ்ந்து நோக்கினால், அவர்களிடம் சில அடிப்படை தன்மைகள் இருப்பதை அறிய முடியும். அதாவது, அவருடைய நோக்கம், கொள்கை மிகவும் தெளிவாக நேர்க்கோட்டில் இருக்கும். எத்தனை தடைகள் வந்தாலும் முயற்சியைக் கைவிட மாட்டார். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார். கூட்டு முயற்சியை ஊக்குவிப்பவராக இருப்பார்.
இப்படி பல்வேறு குணநலன்கள் நிரம்பியிருப்பவருக்கு மட்டுமே வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் என்பது உண்மை அல்ல. பயிற்சியும் முயற்சியும் உள்ளவருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் வரும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
