ஞானகுரு பதில்
கேள்வி : வீட்டில் பெரியவர்கள், முதியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதால் என்ன நன்மை கிடைக்கும்..?
- எஸ்.நல்லதம்பி, உறையூர்.
ஞானகுரு :
நீண்ட காலம் வாழும் மனிதர்கள் என்பது மட்டும் ஆசிர்வாதம் வழங்குவதற்கு தகுதி கிடையாது. முதியோர்கள் ஆசிர்வாதத்தால் பலன் கிடைக்கும் என்றால் நூறாண்டுகள் தாண்டியும் உயிர் வாழும் மரங்கள், ஆமை, திமிங்கலம் போன்ற உயிரினங்களிடம்தான் ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
நல்லபடியாக வாழுங்கள் என்று வாழ்த்துவதால் மட்டும் யாரும் 100 ஆண்டுகள் வாழ்ந்துவிடுவதில்லை. செத்துப்போ என்று சாபம் கொடுப்பதால் யாரும் செத்துவிட மாட்டார்கள். வயது முதிர்ந்தவர்களை மதிப்பதும், அவர்களுடைய அனுபவங்களை பயன்படுத்திக் கொள்வதும் குடும்ப ஆரோக்கியத்திற்கு நல்லது. முதியவர்களை மதிப்பது மனிதநேயம்.
அதேநேரம், யார் காலில் விழுவதும் அவசியம் இல்லை. இது, அடிமைத்தனத்தின் மிச்சம். முதியோர்கள் மீது இருக்கும் அன்பை கட்டித் தழுவி, கையைப் பிடித்து சொல்லுங்கள். நல்ல வார்த்தைகள் பேசுங்கள். காலில் விழுந்து அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
