ஞானகுரு பதில்
கேள்வி : தங்கத்தில் புது டிசைன் நகையைப் பார்த்தாலே வாங்கும் ஆசை வருகிறது. இந்த ஆசையை எப்படி குறைப்பது..?
- பரிமளம். காங்கேயம்.
ஞானகுரு :
மனிதரின் காலுக்குக் கீழே, அதாவது பூமிக்குள் பிரித்தெடுக்கப்படாத தங்கம் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் செல்வந்தர் வீடுகளிலும் தங்கம் கட்டி கட்டியாகக் குவிந்து கிடக்கிறது. தங்கம் மட்டுமே அத்தனை நாடுகளிலும் செல்லுபடியாகும் ஒரே பணம். எனவே தங்கத்துக்காக கொலைகள், கொள்ளைகள் காலம்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. தங்கத்தை பாதுகாக்கும் மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தங்கம் மட்டும் அப்படியே இருக்கிறது.
தங்கம் மனிதர்களை வசீகரிப்பதற்கு ஒரு ருசிகரமான கற்பனைக் கதை இருக்கிறது. அதாவது கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடந்த சண்டையில் சாத்தான் தோற்றுப் போகிறது. பாதாள லோகத்தில் பதுங்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களை பூமியில் விட்டுச்செல்வதற்கு கடவுளிடம் சாத்தான் அனுமதி கேட்கிறது. கடவுளும் அனுமதிக்கிறார். உடனே தங்கத்தையும் பொறாமை குணத்தையும் பூமியில் சாத்தான் விட்டுச் சென்றதாக கதை முடியும்.
இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் உங்கள் ஆசைக்கு இதில் பதில் இருக்கிறது. தங்கமும், பொறாமைக் குணமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இந்த இரண்டும் யாருக்கும் ஒருபோதும் நிம்மதி தராது. எனவே, தங்கத்தை சாத்தானாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே, தங்கத்திலிருந்து விடுதலை தரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
