டீன் ஏஜ் குறும்பு
எது சரி, எது தவறு என்று சொல்லித்தராத காரணத்தாலே பள்ளி, கல்லூரிகளில் பெண்களின் ஆடையில் மாதவிடாய் கறையைப் பார்த்து கேலி செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது என்கிறார் டாக்டர் கார்த்திக்.
“இந்த இடத்தில்தான் செக்ஸ் எஜூகேஷன் நம் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு உதவும். நமக்கு ஆணுறுப்பு, விதைப்பை வளர்வதைப்போல பெண்களுக்கு மார்பகம் வளரும்; இடுப்பு விரிவடையும், மாதந்தோறும் ரத்தப்போக்கு நிகழும், அந்த நேரத்தில் அவர்களுக்கு வலி இருக்கும், சோர்வாக இருப்பார்கள்’ என்பதை சிறுவர்களுக்கு அவர்களுடைய டீன் ஏஜின் ஆரம்பத்திலிருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை சொல்லித் தராதபட்சத்தில்தான், பெண்களின் ஆடையில் ரத்தத்திட்டு இருந்தால் பையன்கள் அதைக் கேலி, கிண்டல் செய்கிறார்கள்.
எனவே, ஆண் பிள்ளை வளர்ப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். பொதுவாக அப்பாக்கள்தான் இந்த வயதில் ஆண் பிள்ளை வளர்ப்பில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். இதுதான் சிம்பிளான, சரியான தீர்வு.
நீங்கள் அவர்களுக்குக் காதுகொடுத்தால், அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். பதின்ம வயது சிறுவர்களிடம் ஒரு தோழன் போலவும் நடந்துகொள்ளுங்கள். முக்கியமாக, மகனுடைய கண் முன்னால் அவனுடைய அம்மாவுக்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள். பின்னாளில் அவன் மற்றப் பெண்களுக்கு மரியாதை கொடுப்பான்.’’ என்கிறார்.
