ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்ஸ்
திருமணம் முடிப்பதே இன்றைய சூழலில் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்டு மாப்பிள்ளை, பொண்ணு தேடுகிறார்கள். பிரமாண்டமாக செலவழித்து திருமணம் முடிக்கிறார்கள்.
காலம் முழுவதும் சேர்ந்து வாழப்போகிறோம், வாழ்க்கை ஒளிமயமாகத் திகழும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் திருமண பந்தத்தில் நுழைகிறார்கள். ஆனால், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் இன்னொரு நபரை அனுசரித்துச்செல்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் இரண்டு பேருமே கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதனால் நிறைய திருமணங்கள் தோல்வியைத் தழுவுகின்றன.
இதுபோன்ற தோல்வியைத் தடுப்பதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அது, திருமணத்திற்கு முன்பு கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது.
இன்று எல்லா பிள்ளைகளும் அவரவர் வீட்டுக்குச் செல்லக் குழந்தையாக இருக்கிறார்கள். எனவே, பிறரை அனுசரித்துச் செல்வது, விட்டுக்கொடுப்பது மிகப்பெரும் தண்டனையாக அல்லது தியாகமாகத் தெரிகிறது.
சமையல் தெரியுமா, என்ன வேலை என்றெல்லாம் கேட்கும் பெரியவர்களுக்கே, திருமணத்திற்குப் பிறகு நிறைய அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. அதேபோன்று இரண்டு பேருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள், இலக்குகள், மதிப்புகள், பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதையும், அதை மதிக்க வேண்டும் என்பதையும் சொல்லித்தருவதில்லை.
எனவே, இதுபோன்ற தனிப்பட்ட சிக்கலான விஷயங்களையும், தனி மனிதர் உணர்வுகளையும் கவுன்சிலிங் மூலம் புரிய வைக்க முடியும். சின்னச்சின்ன விஷயங்களில் வரும் சாதாரண மனஸ்தாபங்களைத் தவிர்க்கவும், சண்டை, தகராறு வரும்போது புத்திசாலித்தனமான சமாளிக்கவும் கவுன்சிலிங் வழிகாட்டுகிறது.
குடும்பச் செலவுகள், சேமிப்பு, கடன், சொத்து முதலிய பொருளாதார விஷயங்களையும் திருமணத்திற்கு முன்னரே தம்பதியர் அறிந்திருப்பது அவசிய்ம் அதேபோல், பெற்றோருடன் உள்ள உறவு, குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் விவாதிக்க முடியும்.
நிறைய குடும்பத்தினருக்குச் சிக்கலாக இருக்கும் பாலியல் எதிர்பார்ப்புகள், உடல் நலம் மற்றும் நெருக்கம் குறித்தும் பாதுகாப்பாக விவாதிக்க முடியும். அதேபோல் கடந்த காலத் தவறுகள், சிக்கல்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது நல்லது.
சட்டத்தின் பார்வையில் திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங் அவசியம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் இது மிகப்பெரும் முன் தயாரிப்பை வழங்கிவிடும். ஆகவே, திருமணம் வெற்றி பெறுவதற்கு இந்த கவுன்சிலிங் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதனை முயற்சி செய்ய மறக்காதீங்க. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
