பங்குச்சந்தைக்கு ஒரு குட்டிக் கதை

பணம், பணமறிய ஆவல்

பங்குச்சந்தையில் பணம் போட்டால் நிறைய லாபம் கிடைக்கும் என்று நிறைய பேர் வகுப்பு எடுக்கிறார்கள். நிறைய உபரி பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பங்குச்சந்தை கை கொடுக்கும் ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினருக்கு பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு மாய வலை.

ஏனென்றால் பங்குச்சந்தையை ஆசையும் பயமும் ஆட்சி செய்கிறது. அதாவது ஆசைப்பட்டு வாங்குவதாலும் பயந்துபோய் விற்பதாலுமே நிறைய பேர் இழப்பை சந்திக்கிறார்கள். பங்குசந்தையின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இந்த குட்டிக் கதை உதவும்.

டிப்டாப் இளைஞன் ஒருவன் நகரத்தில் கடை திறந்தான். தெரு நாயை 100 ரூபாய்க்கு வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகச் சொன்னான். ஒரு சிலர் மட்டும் நாயைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்கினார்கள்.

போதிய எண்ணிக்கையில் நாய் கிடைக்கவில்லை என்றதும், அடுத்த வாரம் வருகிறேன். ஒரு நாய்க்கு 500 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான். உடனே மக்கள் அக்கம்பக்கத்தில் இருந்து எல்லா தெருநாய்களைப் பிடித்து வைத்திருந்தார்கள். சொன்னபடியே வந்தவன் எல்லா நாய்களையும் 500 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான். ஊரிலிருந்த எல்லா நாய்களும் விற்பனையாகிவிட்டது.

இன்னும் எனக்கு அதிக நாய்கள் தேவை. அடுத்த வாரம் நாய்க்கு 2000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனான். ஊருக்குள் ஒரு நாயும் இல்லை, என்ன செய்வது என்று மக்கள் தவித்த நேரத்தில், பக்கத்து ஊரில் ஒருவன் தெருநாயை 1000 ரூபாய்க்கு விற்பதாகத் தகவல் கிடைத்தது.

உடனே மக்களுக்கு சந்தோஷம். 1000 ரூபாய்க்கு நாயை வாங்கி 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து லாபம் பார்க்க முடிவு செய்தனர் எல்லோரும் முண்டியடித்துப் போய் அந்த நாய்களை வாங்கிவந்தார்கள். அந்த வாரம் நாய் வாங்கும் இளைஞன் வரவே இல்லை.

பக்கத்து ஊரில் கடை போட்டிருந்த இளைஞனும் கடையை மூடிவிட்டுப் போய்விட்டான். அதன் பிறகே, அவர்கள் ஊரில் பிடித்த நாயை அவர்களுக்கே விற்பனை செய்து பணத்தை சுருட்டிவிட்டான் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர். இதுதான் பங்குசந்தையில் நடக்கும் சீட்டிங்.

அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு அந்த பணம் தேவையில்லை, இடையில் எத்தனை ஏற்றம், இறக்கம் வந்தாலும் அச்சம் இல்லை எனும் மனப்பான்மை உள்ளவர் மட்டும் பங்குச்சந்தைக்கு ஆசைப்படலாம். மற்றவர்கள் வங்கி, தங்கம், நிலம் என்று முதலீடு செய்வதே நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment