உளவியல் உண்மை
இந்த உலகிலேயே உயர்வானது எது? தாய்மையே உயர்வு, பணமே சிறந்தது, கல்வியே உயர்வானது, உடல் ஆரோக்கியமே முக்கியம், புகழ் பெறுவதே முக்கியம், அன்பு மட்டுமே நல்லது, மனிதநேயமே சிறப்பு என ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.
ஆன்மிகவாதிகளிடம் கேட்டால், இறைவனை அடைவதே உயர்வானது என்பார்கள். உளவியல் நிபுணர்களிடம் கேட்டால், நிம்மதியான மனமே முக்கியம் என்பார்கள்.
உண்மையில் இவை எல்லாவற்றையும் விட உயர்வானது என்ன தெரியுமா..?
உயிர். ஆம், நம்மை மனிதராக உணர வைப்பதே இந்த உயிர் மட்டும் தான். உயிரை தற்காத்துக்கொள்ளும் வகையிலே இந்த உடல் படைக்கப்பட்டிருக்கிறது.
சாப்பிடுவது, காதலிப்பது, போராடுவது எல்லாமே உயிரை பாதுகாக்கும் பல்வேறு முயற்சிகள்தான். உணவு, உறக்கம், பாதுகாப்பு மட்டுமே மனிதருக்கு முக்கியம் இவை கிடைத்த பிறகே அன்பு, பாசம், நட்பு என்றெல்லாம் பேசுவார்கள்.
அதேநேரம், இந்த உயிர் நிலையானது இல்லை, எந்த நேரமும் மரணம் வரலாம். எந்த கடவுளாலும் உயிரை காப்பாற்ற முடியாது என்ற உண்மையும் புரிய வேண்டும். எனவே, பிரியும் வரை உயிர் மீது அன்பு செலுத்தி பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதுவே உயிர் படைக்கப்பட்டதன் நோக்கம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
