எமோஷனல் பிளாக்மெயில்
டீன் வயதுப் பையன்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் அதிவேக பைக் கேட்டு பெரும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நிறைய பிள்ளைகள் வாங்கியும்விடுகிறார்கள்.
எப்படி என்றால், முதலில் அன்பாக, ஆசையாகக் கெஞ்சுவார்கள், பெற்றோர் மசியவில்லை என்றால் கோபம், ஆத்திரம் அதிகரிக்கும். முக்கியமாக சாப்பிட மறுப்பார்கள். இந்த எமோஷனல் பிளாக்மெயிலில் நிறைய அம்மாக்கள் மகனுக்கு ஆதரவாகிவிடுவார்கள். அதன்பிறகு படிக்க மாட்டேன், வீட்டைவிட்டு ஓடுவேன், தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவார்கள்.
இதற்காக வாங்கித்தருவது சரியான செயல் அல்ல. எனவே, இதை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.
- பைக் மூலம் தனக்கு அங்கீகாரம், மதிப்பு, மரியாதை கிடைக்கும் என்று நினைக்கும் ஜென் இசட் பிள்ளையிடம் முடியாது என்று நேரடியாக மறுப்பது, அவர்களின் ஈகோவை உடைத்துவிடும். எனவே, முடியாது என்று சொல்லாதீர்கள்.
- பார்ட் டைம் ஜாப் செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொடு என்று ஒரு நிபந்தனை விதியுங்கள். ஜாலிக்கு ஊர் சுற்ற நினைக்கும் பிள்ளைகள் வேலைக்குப் போக மாட்டார்கள்.
- எங்கள் பணம் என்றால் கியர் இல்லாத சின்ன பைக் வாங்கித்தர தயார் என்று சொல்லுங்கள், அவர்களே அது வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.
- தினமும் 100 ரூபாய் தருகிறேன், சேர்த்து வைத்து நீயே பைக் வாங்கிக்கொள் என்று தினமும் கையில் பணம் கொடுங்கள். கையில் பணம் சேரச்சேர அதன் அருமை புரியத் தொடங்கிவிடும். எனவே அச்சப்பட அவசியம் இல்லை.
- பெற்றோர் சொல்வதை விட நண்பர்கள் அல்லது பிடித்த நபர்கள் பேசினால் கேட்பார்கள். அப்படிப்பட்ட நபர் முலம் பேசுங்கள். .
அடம் பிடிக்கும் காரணத்துக்காக டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அதிவேக பைக் வாங்கித்தராதீர்கள். விபத்து ஏற்பட்டு கை, கால் உடைவது மட்டுமின்றி உயிர் போகவும் வாய்ப்பு உண்டு. வேறு சிலரின் உயிருக்கும் இவர்கள் ஆபத்தாக மாறலா. எனவே, காலம் வரும் வரை காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள். இதில் பிடிவாதமாக இருப்பதே நல்ல பெற்றோருக்கு அழகு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
