குழப்பம் இருந்தால் முடியாது என்று சொல்லுங்கள்

மந்திரச்சொல்

நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை செய்யும்படி சிலர் உத்தரவு போடலாம், அன்பாக மிரட்டலாம், கெஞ்சிக் கேட்கலாம், மறைமுகமாக எச்சரிக்கை செய்யலாம். எப்படி என்றாலும், உங்களுக்கு அந்த காரியம் செய்வதற்கு விருப்பம் இல்லை என்றால் முடியாது என்று வெளிப்படையாகவும் உறுதியாகவும் சொல்லப் பழகுங்கள்.

முடியாது என்று சொல்வதற்கு நிறைய பேர் தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். வாய் வரைக்கும் வார்த்தை வந்தாலும் சொல்ல மாட்டார்கள். இந்த தயக்கம் எனும் சுவரை எல்லோராலும் உடைக்க முடியும். முடியும். எப்படிப்பட்ட தருணங்களில் முடியாது என்று கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • போதிய பணம் இல்லாத சூழலில் நண்பர், நெருங்கிய உறவினர் அவசரக் கடன் கேட்கலாம். முடியாது என்று உங்கள் நிலையை தெளிவாகச் சொல்லுங்கள்.
  • ஏற்கெனவே வேலைப்பளுவில் இருக்கும்போது மேலும் ஒரு வேலையை உயர் அதிகாரி கொடுக்கலாம். முடியாது என்று தகுந்த காரணங்களுடன் சொல்லுங்கள்.
  • உறவினர்கள், நண்பர்கள் ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து கேட்கும்போது முடியாது என்று உறுதியுடன் சொல்லுங்கள்.
  • கம்பெனிக்காக இரண்டு பெக் மது அருந்துங்கள் என்று வற்புறுத்தும் நேரத்தில் புன்னகையுடன்  மறுத்துவிடுங்கள்.  
  • உங்கள் இளகிய மனதை பயன்படுத்தி காரியம் சாதித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் முடியாது என்பதை முகத்திலடிப்பது போன்றே சொல்லிவிடலாம்.
  • உங்கள் நன்மைக்காக பிறருக்கு சிறு தீமை செய்யுமாறு யாரேனும் தூண்டி விடும்போது முடியாது என்று சொல்லுங்கள்.
  • பதவி அல்லது பணம் கொடுத்து தவறான செயல் செய்வதற்கு ஆசை காட்டும் நேரத்தில் முடியாது என்று சொல்லுங்கள்.
  • குழப்பத்தில் இருக்கும்போது ஏதேனும் முடிவு எடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்யும்போது முடியாது என்று சொல்லுங்கள்.

முடியாது என்று நேரடியாகச் சொல்வதால் நெருங்கிப் பழகுபவர் அல்லது அன்பு செலுத்துபவருக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கலாம், நெருடல் இருக்கலாம். காலப்போக்கில் நிச்சயம் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். முடியும் என்று ஒப்புக்கொண்டு வருத்தத்திலும் சிக்கலிலும் சிக்கிக்கொள்வதை விட, முடியாது என்று சொல்லி, அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளலாம். முடியாது என்பது உங்களை சிக்கலில் இருந்து பாதுகாக்கும் மந்திரம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment