திருமணத்திற்கு முன்பு கவுன்சிலிங் ஏன் கட்டாயம்..?

பத்து நன்மைகள்

திருமணத்திற்கு ராசிப் பொருத்தம், தாலி, பட்டுப்புடவை, மண்டபம், முகூர்த்தம், விருந்து என்று ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்பவர்கள், கவுன்சிலிங் எடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையை மெச்சூர்டாக எதிர்கொள்வதற்கு கவுன்சிலிங் 10 வகையில் உதவுகிறது.

  1. உண்மை அறிதல்

திருமணத்திற்குப் பிறகு வீடு எந்த அளவுக்கு வசதியாக இருக்கும், குடும்பத்தினர் நடவடிக்கை, தனிக்குடித்தனம் வாய்ப்பு போன்ற மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளை இருவரும் பேசி புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

  • புரிந்துகொள்தல்

தங்கள் விருப்பம், எதிர்பார்ப்பு, பயம், பழக்கங்கள், வாழ்க்கை லட்சியம் போன்றவற்றை வெளிப்படையாகப் பேச முடியும். காதல் கல்யாணம் என்றாலும், திருமணத்திற்குப் பிறகு குழப்பம் வராமலிருக்க இது உதவும்.

3. பணம் மேலாண்மை

வருமானம், செலவு, சேமிப்பு, கடன், குடும்பத்திற்குப் பண உதவி போன்ற விஷயங்களில் இருவரும் தங்கள் அணுகுமுறையை அடுத்தவரிடம் முன்கூட்டியே பேசுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

4 எல்லைகள் வகுத்தல்

மாமியார் – மருமகள் – மருமகன் – நாத்தனார் என்று ஒவ்வொருவருக்கும் எல்லைகள் வகுக்கலாம். எந்த விஷயங்களில் பெற்றோரின் ஆலோசனை தேவை, எதில் தேவையில்லை என முன்கூட்டியே தெளிவுபடுத்தலாம்.

5. சண்டை சமாளித்தல்
கருத்து வேறுபாடு இல்லாத வீடு கிடையாது. ஆனால் கோபத்தில் கத்தாமல், அவமதிக்காமல், பழைய விஷயங்களைத் தோண்டாமல் பிரச்சினையைப் பேசுவதற்கு கவுன்சிலிங் கற்றுக்கொடுக்கிறது.

6. வெளிப்படைப் பேச்சு
மனதில் இருப்பதை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. மனதில் தோன்றும் எண்ணம், விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்த கற்றுக்கொடுக்கிறது.

7. குழந்தை பெறுதல்

குழந்தை வேண்டுமா, எப்போது வேண்டும், குழந்தை வளர்ப்பு எப்படி இருக்க வேண்டும், வேலை, குடும்ப பொறுப்புகளை எப்படிப் பகிர்வது போன்ற முக்கியமான விஷயங்களில் புரிதல் உருவாக்க முடியும்.

8. பாலியல் நெருக்கம்
வெட்கம் காரணமாக பேச முடியாத பல விஷயங்களை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் பேசுவதற்கு வழி சொல்லித்தருகிறது. இருவரின் எல்லைகள், சம்மதம், நெருக்கம் குறித்து புரிந்துகொள்ள முடியும்.

9. ரகசியம் அறிதல்

தொழில், கடன், இ.எம்.ஐ. பணி, காதல் போன்ற அடிப்படை விஷயங்களில் பெரிய முரண்பாடுகள், சந்தேகம் இருந்தால் திருமணத்திற்கு முன்பே பேசி தெளிவுபெற முடியும்.

10. பெஸ்ட் பார்ட்னர்

திருமணம் என்பது ஒருவரின் கனவுக்கு ஒருவர் துணையாக இருப்பது, பிரச்சினையில் ஒருவரை ஒருவர் பாதுகாப்பது, வெற்றியில் மகிழ்வது, தோல்வியில்  துணை நிற்பது எனும் மனப்பக்குவம் பெற கவுன்சிலிங் உதவுகிறது.

ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது.

திருமணத்தில் பிரச்சினை, குழப்பம் இருந்தால் கவுன்சிலிங் அவசியம் என்று நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மணமக்களைத் தகுதியாக்குவதே கவுன்சிலிங். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment