பாரதிக்கு மரணம் இல்லை..!

நினைவுநாள் அஞ்சலி

பாரதியின் முன்பு இரண்டு வழிகள் இருந்தன. எட்டயபுர மன்னரை அனுசரித்தால் சுகபோக வாழ்வு, பிரிட்டிஷாரை மதித்தால் செல்வம் என்பது தெரிந்தும் வறுமையைத் தேர்வு செய்தவர்.

’அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே…’  என்று ஆங்கிலேயரைப் பார்த்து பயத்தில் உறைந்திருந்த ஒரு தேசத்தின் நரம்புகளில் வீரத்தைப் பாய்ச்சியவர் மகாகவி பாரதி.

அவர் உடல் மறைந்து 105 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் தமிழ் மொழியுடன் பாரதி கலந்து மறைந்து நிற்கிறார். அவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் இன்றும் உயிரோடு இருக்கிறார். அநீதிக்கு எதிராக எழும் ஒவ்வொரு குரலிலும் இருக்கிறார். அடிமைத்தனத்தை நிராகரிக்கும் ஒவ்வொரு மனதிலும் இருக்கிறார். பெண்கள் சம உரிமையுடன் முன்னேறும் ஒவ்வொரு பாதையிலும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவனுக்கு பூணுல் போட்டான். இஸ்லாமியனுக்கு பாட்டெழுதினான். அக்ராஹரத்தை விட்டு ஒதுக்கப்பட்டு ஆட்டிடையனிடம்  கஞ்சி குடித்தான். இவனே உண்மையான புரட்சியாளன்.

ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அவர் எழுதிய பாடல்கள் வெறும் கவிதைகள் அல்ல; அவை விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” என்று அவர் எழுப்பிய கேள்வி, ஒரு தலைமுறையின் தூக்கத்தைக் கலைத்தது.

பாரதியின் பெருங்கனவு

பாரதியின் கனவு அரசியல் விடுதலையோடு முடிந்துவிடவில்லை.  சாதி இல்லாத சமூகம் வேண்டும். பெண்ணுக்கு சம உரிமை வேண்டும்.ஏழ்மை ஒழிய வேண்டும். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வு நிலைபெற வேண்டும். இதுதான் பாரதியின் இந்தியா.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழின் பெருமையைப் பாடிய அதே பாரதி, உலக மொழிகளையும் கற்றறிந்து அவற்றின் சிறப்பை ஏற்றுக்கொண்ட பரந்த சிந்தனையாளர். அவரது தமிழ்ப்பற்று குறுகிய வெறியாக இருக்கவில்லை, அது உலகை அணைத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பாக இருந்தது.

புதுமைப் பெண் என்ற அவரது கனவு, இன்றைய பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒலித்த குரல்.

பாரதியின் தனிப்பெரும் சிறப்பு

பாரதி பயந்தவர்களிடம் வீரத்தைப் பேசினார்.  தாழ்த்தப்பட்டவர்களிடம் தன்மானத்தைப் பேசினார். பெண்களிடம் சுதந்திரத்தைப் பேசினார்.  இளைஞர்களிடம் துணிச்சலைப் பேசினார். தேசத்திடம் விடுதலையைப் பேசினார். அதனால்தான் பாரதியின் கவிதைகள் காலத்தால் பழமையாகவில்லை.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உலகம் மாறிவிட்டது. வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஆனால் அச்சம், அநீதி, சமத்துவமின்மை, சாதிப்பாகுபாடு, பெண்ணடிமைத்தனம், ஏழ்மை, அறியாமை ஆகிய பிரச்சினைகள் இன்னும் முழுமையாக மறைந்துவிடவில்லை. இந்த நேரத்தில், பாரதியை உண்மையாகப் போற்றுவது என்றால், அவரது சிந்தனையை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதுதான்.

காலம் பல கவிஞர்களை உருவாக்கலாம். ஆனால் சில கவிஞர்கள்தான் காலத்தையே மாற்றுகிறார்கள். அந்தச் சிலரில் முதன்மையானவர் பாரதி.

பாரதி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு விழிப்பு. அவர் ஒரு நெருப்பு. அவர் ஒரு புரட்சி. அழிவில்லாத தமிழ்.

Leave a Comment