சிறப்பான பெண் எப்படி இருக்க வேண்டும்?

ஞானகுரு பதில்

கேள்வி ; எல்லா வகையிலும் சிறப்பான பெண் என்று யாரைச் சொல்வீர்கள்..?

  • பி.திருவேங்கடம், பட்டுக்கோட்டை

ஞானகுரு ;

எல்லா வகையிலும் சிறப்பான பெண் அல்லது முழுமையான ஆண் என்று யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. இதன் அர்த்தம் யாருமே இங்கு முழுமை இல்லை, எதுவுமே முழுமையானது இல்லை. வானத்தில் இருக்கும் நிலவு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த நிலவில் இறங்கிப் பார்த்தால் பள்ளங்கள், மேடுகள் மட்டுமே இருக்கும்.

கடல் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். கடலில் குளிக்க இறங்கினால் தண்ணீரை வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்புக் கரிக்கும். அதன் ஆழத்தில் இருட்டு மட்டுமே தென்படும். எனவே, முழுமையான, சிறப்பான ஒன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்.

அதேநேரம், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொருவரும் அவர் விரும்பிய வகையில் வாழ்வதற்கு சுதந்திரம் உண்டு.

 அதனால் நமக்குப் பிடித்த வகையில் ஒருவர் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியில்லை. யார் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள். அதுவே, சரியான வாழ்வு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment