பட்டாசு விபத்துக்கு சூப்பர் தீர்வு

ஞானகுரு பதில்

கேள்வி : பட்டாசு ஆலை விபத்துகளில் மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன, இதற்கு தீர்வு இல்லையா..?

  • சி.மல்லிகா, சிவகாசி.

ஞானகுரு ;

எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பட்டாசு தொழிற்சாலையில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும். இதற்கு காரணம், இந்த விபத்துகளில் இறந்த எல்லோருமே ஏழைகள். இனி, நடக்கப்போகும் விபத்துகளிலும் ஏழைகள் மட்டுமே உயிர் இழப்பார்கள். ஏழைகள் உயிர் இழப்பதை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணக்காரர்கள் என யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.

இந்த மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், பட்டாசு போன்ற ஒரு தொழில் இந்த விஞ்ஞான யுகத்திற்குத் தேவையா என்ற கேள்வி  மனிதருக்கும் வர வேண்டும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவதைத் தவிர, பட்டாசுக்கு எந்த பயன்பாடும் இல்லை. எனவே, பட்டாசு தொழிலை தடை செய்தால் மட்டுமே விபத்துகளை நிறுத்தவும் ஏழைகள் உயிரைக் காப்பாற்றவும் முடியும்.

ஆனால், இது பணம் கொட்டும் தொழில் என்பதால் முதலாளிகள் ஆலையை மூட மாட்டார்கள், அரசுகளும் நடவடிக்கை எடுக்காது. ஆனால், தனி மனிதர்கள் முடிவு எடுக்கலாம். பட்டாசு வெடிப்பதில்லை, வாங்குவதில்லை என்று முடிவெடுத்தால் விரைவில் இந்த தொழில் குறைந்து, நலிந்துவிடும். 

பட்டாசு தொழிலை தடை செய்தால், ஏழைத் தொழிலாளர்கள் பட்டினியால் செத்துவிடுவார்கள் என்று யாரும் கவலைப்படத் தேவை இல்லை. மனிதர்கள் போராட்ட குணம் உடையவர்கள். எவரெஸ்ட் மலையில் என்றாலும் சகாரா பாலைவனம் என்றாலும் போராடி பிழைத்துக்கொள்வார்கள். அதனால் பட்டாசுகளுக்கு முடிவு கட்டுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment