திடீர் செலவுகளை சமாளிக்கும் வழிகள்

பணமே மந்திரம்

எதிர்பாராமல் திடீரென ஏற்படும் ஒரே ஒரு செலவு நடுத்தரவர்க்கத்தினரை ஏழையாக மாற்றிவிடலாம். குடும்பத்தில் யாருக்கேனும் அறுவை சிகிச்சை, விபத்தில் சிக்கி உடல் ஊனம் அடைதல், வேலை இழப்பு போன்ற சிக்கலால் நிதிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிவிடுவார்கள்.

வீட்டில் இருக்கும் நகையை விற்பனை செய்தல், ஒட்டுமொத்த சேமிப்பையும் காலி செய்வது, தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது என்று நிதிச்சூழலில் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பார்கள். இந்த நிதிச் சிக்கலை தவிர்ப்பதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன.

  1. எதிர்பாராத பெரிய மருத்துவச் செலவுகளை சமாளிப்பதற்கு மருத்துவப் பாலிசிகள் கை கொடுக்கும். வயது, வித்தியாசம் பார்க்காமல் குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவப் பாலிசி எடுத்துவிடுங்கள். இது ஆபத்து நேரத்தில் கை கொடுக்கும்.  
  2. ஒருவர் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இருக்கக்கூடாது. இரண்டாவது நபரும் குறைந்த அளவாவது பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குடும்பத்துக்கு இரண்டாவது வருமானம் வரும் வகையில் பார்ட் டைம் வேலை செய்ய வேண்டும்.
  3. மூன்று மாத வீட்டுச் செலவுக்குத் தேவைப்படும் அளவுக்குப் பணம் எப்போதும் வங்கி சேமிப்புக் கணக்கில் இருப்பது அவசியம். இது, அவசர காலத்தை சமாளிப்பதற்கு உதவும்.
  4. குறைந்த தொகை என்றாலும் ஒவ்வொரு மாதமும் நிலையான சேமிப்பை கட்டாயமாக்குங்கள். தொடர்ச்சியாக சேமிக்கப்படும் பணம் ஒரு கட்டத்தில் நல்ல முதலீடாக கை கொடுக்கும்.
  5. அவசரத் தேவைக்கு ஒரே ஒரு கிரிடிட் கார்டு வைத்திருங்கள். ஆனால், இதனை முறையாகப் பயன்படுத்துங்கள்.

உடல் நலனுக்குச் சிக்கல் வரும்போது மருத்துவரைப் பார்ப்பதுபோன்று, குடும்பத்தில் நிதிச்சுமை அதிகரிக்கும்போது சரியான நிதி ஆலோசகரை சந்தித்துப் பேசுங்கள். நிச்சயம் சரியான வழி கிடைக்கும், ம்கிழ்ச்சியுடன் வாழுங்கள். 

Leave a Comment