சின்னச்சின்ன மாற்றம்
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று கெளதம புத்தர் சொல்லி இருக்கிறார். பெரிதினும் பெரிது கேள் என்று பாரதியார் எழுதியிருக்கிறார். யார் சொல்வதைக் கேட்பது, பெரிதாக ஆசைப்பட்டால்தானே வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய முடியும் என்று பலரும் கேட்கிறார்கள்.
லட்சியம் பெரிதாக இருந்தால் அதாவது பெரிய ஆசை என்றால் அதை அடைவதற்கு அதிக சிரமம், அதிக துன்பம் தாங்க வேண்டியிருக்கும். நிறைய இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
அதேநேரம், பெரிய லட்சியம் அடைவதற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. பெரிய லட்சியத்தை சின்னச்சின்னதாகப் பிரித்துவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைவது சரியான செயல்.
அதாவது, உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்ப்பது லட்சியமாக இருக்கலாம். இந்த குறிக்கோளை 20 சின்னச்சின்ன ஆசைகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு 5 அல்லது 10 ஆண்டுகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ப்பது, எந்தெந்த நாடுகள் என்று தேர்வு செய்வது, விசா, பயணச்சீட்டு, தங்குமிடம் தேர்வு, முதலில் செல்லப்போகும் நாடு என சின்னச்சின்னதாக லட்சியம் நோக்கி பயணம் செய்தால் அது பேராசையாகத் தெரியாது.
ஒவ்வொரு சின்னச்சின்ன ஆசை நிறைவேறும் போதும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே, ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆசை உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எண்ணமே சிக்கல் தருகிறது. லட்சியத்தை நோக்கி பயணிப்பதே மகிழ்ச்சி என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
